செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கானல் நீர் - அத்யாயம் 3



கானல் நீர் - அத்யாயம் 3
பஸ்ஸிலிருக்கும் சிலர் இறங்கிச் சென்ற நிலையில் இறங்கி ஏதேனும் சாப்பிடலாமா என்ற யோசனைக்கு இடமளிக்காமல் மனதில் ஏதோ நினைவுகள் ரகுவை பலவீனப்படுத்தியது போலத் தோன்றியது.
இருக்கையிலேயே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட ரகு திரும்பவும் நினைவுகளில் மூழ்குகிறான்.
சொல்லிக் கொள்ளாமல் சென்றுவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்த சீதாவின் போனில் நீண்ட நேரத்திற்குப் பிறகு இப்போது தான் ரிங் போகிறது.. நெஞ்சில் ஒரு பதட்டம் நிலவ, அடித்தொண்டை காய்ந்து விட பலத்த சிரத்தையுடன் எதிர் கொள்கிறான் ரகு.
"ஹலோ.." எதிர் முனையில் சீதாவேதான்.
" சீதா.... என்னடி எங்க போன...? போன் பண்ணினா எடுக்கமாட்டேன்ற... சுவிட்ச் ஆப் பண்ற... என்னப்பா ஆச்சு எங்க இருக்க...? "
" ஸாரி ரகு.. நைட் நாம பேசி முடிச்சதுக்கு அப்பறம் சித்திக்கு ரொம்ப உடம்புக்கு முடியலன்னு போன் வந்தது. அவங்கள மதுரைல கென்னட் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்கப்பா.. அதனால நான் அவசரமா கிளம்பி வரவேண்டியதா போய்டுச்சு.. உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டன்னுதான் கூப்டல.. காலைல இருந்து ஐ சி யூக்குள்ள இருந்ததால போன் எடுக்க முடியல. இப்பதா வெளிய வந்திட்டு கால் பண்றேன்... "
ரகு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு " நான் ரொம்ப பயந்துட்டேன் சீதா.காலைல எப்பவும் போல கூப்டேன். நீ எடுக்கலன்னதும் ரொம்ப கஷ்டமாயிடுச்சு மா... சரி, உன் நிலைமைல பார்த்தா உன்ன தப்பு சொல்ல முடியாது. பரவால்ல விடு... ஓகே சித்தி இப்ப எப்படி இருக்காங்க..?"
" ஹூம்ம்... இப்ப பரவால்லப்பா... நாளைக்கு ஐ சி யூல இருந்து வார்டுக்கு மாத்திடுவாங்க.."
" சரிமா... சாப்டியா.?. "
" இம்.. சாப்டேன். நீங்க சாப்பிடிங்களா.?"
" ஆமா இவங்க சொல்லாம கொள்ளாம திடீர்னு காணாம போவாங்களாம் அந்த நேரத்துல நாங்க சாப்டனுமாம்... போடிங்க... ஏதாவது சொல்லிட போறேன்... "
" ஹேய். .. என்ன ரகு நீங்க இதுக்கல்லாமா சாப்பிடாம இருப்பாங்க.. முதல்ல போய் சாப்பிட்டு வாங்க.. மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்."
" சரி சீதா நான் போறேன்... மணி ஆறு ஆகிடுச்சு.. ரொம்ப பசிக்குதுப்பா. அங்க உன் அப்பா அம்மா சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்களாம்மா.?
" அவங்க எதுக்குப்பா இங்க..?"
"என்ன சீதா சொல்ற.. உன் சித்திக்கு பிரச்சனைன்னா அவங்க எல்லாம் வருவாங்கதான"
" அடச்சே... சொல்ல மறந்துட்டேன். என் ப்ரண்ட் மீனு இருக்கால்ல அவளோட சித்திக்குத்தான் சீரியஸ். நாங்க ரெண்டு பேரும்தான் கம்பெனி ஹாஸ்டல்ல இருந்து கிளம்பி வந்தோம். "
ரகுவின் மண்டையில் சுர்ரென்று ஏதோ ஏறியது போல் இருக்க..
" அப்போ உன் சித்தி இல்லயா.? இதுக்கா இவ்ளோ கலவரம். ? என்கிட்ட சொல்லாம வந்தது யாரோ ஒருத்திக்காகவா.? என்ன சீதா நீ இப்டி இருக்க.? திஸ் ஈஸ் ப்யூர்லி மேட்னஸ் சீதா..."
" ஸீ ரகு... நான் யாரோ ஒருத்திக்காக வரல.. மீனு என் பெஸ்ட் ப்ரண்ட். அவ சித்தி என் சித்தி மாதிரி.. அதனாலதா வந்தேன். உங்ககிட்ட சொல்லாம வந்தது வேணும்னு செய்யல சந்தர்ப்பம் அந்த மாதிரி ஆகிடுச்சு. தட் ஈஸ் இட் ரகு. "
கோபம் கொப்பளிக்க ரகு" உன்னல்லாம்... ச்சே.... இங்க ஒருத்தன் எவ்வளவு துடிச்சு போய் பதறிட்டு மதியம் சாப்பாடு கூட இல்லாம உனக்காக தவிச்சிட்டு இருக்கேன்... ஆனா நீ... ரொம்ப கேசுவலா அவளோட சித்தினு சொல்ற..."
" ரகு ப்ளீஸ். இப்ப நான் உள்ள போகனும் ஏதோ உங்ககிட்ட நடந்தத சொல்லிடலாம்னு மீனுகிட்ட சொல்லிட்டு வந்தேன். நீங்க போய் முதல்ல சாப்பிடுங்க ரகு அப்பறம் நம்ம சண்டையை வச்சுக்கலாம்... ப்ளீஸ் ப்பா... நான் மறுபடி
வெளிய வந்துட்டு கூப்பிடுறேன். ஓகேவா..? " என்று சீதா அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாவல் போனை வைத்துவிட..
ரகு சாப்பிட்டு விட்டு போனை எதிர் நோக்கி காத்திருக்கிறான்.நரகத்தை விட கொடுமையானது காதலில் காத்திருப்பதுதான் என்பதை ரகு உணர்ந்து கொண்டிருக்கிறான்.
மணி ஏழரை போன் ஒலிக்க முதல் ரிங்கிலேயே எடுக்கிறான் ரகு.
" ஹலோ.. என்ன என் வீட்டுக்காரருக்கு கோபம் போய்டுச்சா.? " சமாதான நோக்கத்தில் ஆரம்பித்தாள் சீதா.
" ஆமா.. இதுக்கு ஒன்னும் குறை இல்ல.. சரி எப்போ கிளம்ற சீதா. ?"
" என் தம்பி அதாவது என் சித்தப்பா பையன் வந்து எங்கள அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதா சொல்லிருக்கான்.. அங்க போய் சாப்டுட்டு அப்டியே ஆரப்பாளையம் பஸ்டேன்ட்ல கொண்டு விட்டுறுவான் அவனுக்காகதான் நானும் என் இன்னொரு ப்ரண்ட் ப்ரீத்தாவும் வெய்ட் பண்றோம்."
" ப்ரீத்தாவா ஓ..! அந்த பொண்ணா அவ கொஞ்சம் சரியில்லை ன்னு ஆபீஸ் ல எல்லாரும் சொல்வாங்க மா.. அவ கூடவா இருக்க.."
" உங்களுக்கு அவள பிடிக்காதுன்னு தெரியும் தங்கம்.. என்னப்பா பண்றது.. அவ இங்க வந்துட்டா போடின்னா சொல்ல முடியும். ?"
" ஓகே சீதா பாத்து வாங்க... ஏதோ அவசரத்துல கோபபட்டு பேசிட்டேன். ஸாரிடி தங்கம்"
" பரவால்லப்பா... என் அம்முவ எனக்கு தெரியாதா? நீங்க சாப்பிட்டாச்சா?"
"ம்.. ஆச்சு"
" இனிமேல் என் செல்லத்துக்கிட்ட சொல்லாம எங்கயும் போகமாட்டேன் சரியா.?"
"........ "
"இன்னொன்னு ரகு... பேட்டரி போன்ல வீக்கா இருக்கு எப்போ வேணாலும் ஆப் ஆகலாம்... உடனே பதறிட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதீங்க சரியா ?"
" சீதாக்குட்டி பஸ் ஏறினதும் கால் பண்ணிடு இல்லன்னா மனசு கேட்காதுப்பா... ப்ளீஸ்.."
"கண்டிப்பா பண்றேன் பா... இன்கேஸ் பண்ணமுடிலனா அப்செட் ஆகாதீங்க.. நான் எப்படியும் காலைல எப்பவும் போல ஆபீஸ் வந்திடுவேன் சரியா..? "
"சரிப்பா... பாத்து பத்ரமா வாங்க.. "
" ஐயோ கடவுளே! நாங்க என்ன சின்ன குழந்தையா ப்ரீத்தாவும் இருக்கா ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா...இதே மதுரைக்கும் திருப்பூருக்கும் பஸ்ஸே நாங்கதா விட்றுக்கோம்.. விடுங்க பாஸ்.. "
" ஹா.. ஹா... ஓகே டியர் பை.. ஹேவ் எ சேப் ஜர்னி..."
" தேங்ஸ் டார்லிங்... இதோ தம்பியும் ப்ரீத்தாவும் வர போறாங்க நா வைக்கறம்ப்பா.. பை.."
ரகுவின் மனதிற்குள் பெருமையுடன் கூடிய சந்தோஷம் பிரவாகமெடுத்திருந்தது..
தன் வாழ்க்கைத்துணை இபபடித்தான் தைரியம் மிக்கவளாகவும் எதையும் எதிர் கொள்பவளாகவும் எதிர்பார்த்திருந்தான் அது தன் கண்கூடாக தெரியும் பொழுது யாருக்குத்தான் பொங்காது..
ஆனால் அது கொஞ்ச நேரம் கூட நிலைக்காது என்பதை ரகு அப்போது அறிந்திருக்கவில்லை.
மணி பத்தாகியது சீதா இன்னும் கால் செய்யாததால் நாமே கூப்பிடுவோம் என்று நினைத்து அழைக்க எடுத்தது சீதா.
" அம்மா.. நாங்க பஸ்டேன்ட்ல இருக்கோம். இதோ கிளம்பிட்டோமா.. பயப்படாதீய.. நான் ஹாஸ்டலுக்கு போனதும் டயர்ட்ல தூங்கிடுவேன். காலைல நா கூப்டறமா... வைக்கறேன்.." என தன் அம்மாவிடம் பேசுவது போல பேசி போனை கட் செய்தாள் சீதா.
இதிலிருந்து ப்ரீத்தாவும் அந்த தம்பியும் கூட இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட ரகு, அப்படியும் மனசு கேட்காமல் பதினோரு மணிக்கு இப்போது கண்டிப்பாக பஸ் ஏறியிருப்பார்கள் என்று மீண்டும் கால் செய்ய ரிங் ஆகி கட்டாகியது. இப்படியே ஐந்தாறு முறை செய்யவும் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் என்று சொல்லியது செல்போன்.
சரி அதான் பேட்டரி தீர்ந்து விட்டது என்று சொன்னாளே என நினைத்தபோது ஒரு விஷயம் பொறி தட்டியது.
சீதாவினது செல்லில் பேட்டரி இல்லை ஆப் ஆகிவிட்டது என்று சொல்வது இதுதான் முதல்முறை இதற்கு முன்பு சீதா இப்படி சொல்லியதில்லை. அப்படியே ஆப் ஆகியோ அல்லது சார்ஜ் குறைவாகவோ இருந்தாலும் அந்த தம்பி வீட்டில் சாப்பிடும் நேரத்தில் போட்டிருக்கலாம்.
தலையில் இரண்டு கொம்பு முளைத்ததைப் போன்று உணர்ந்தான் ரகு.
ஆல் ரைட் இப்போது என்ன செய்வது.
தன் மொபைலில் இருந்து ஸாரி சீதா என்று டைப் செய்து சீதாவிற்கு மெஸேஜ் அனுப்பினான் ரகு.
இதனால் எப்போது சீதா மொபைல் ஆன் செய்தாலும் உடனே மெஸேஜ் சென்ட் ஆகி டெலிவரி ரிப்போட் ரகுவின் செல்லிற்கு வரும்.
அனுப்பிவிட்டு காத்திருந்தான் ரகு. தூக்கம் லேசாக வந்த வேளையில் டிங்.. டிங்... டிங்.. டிங்..
என்று டெலிவரி மெஸேஜ் வந்ததும் மணியைப் பார்த்தால் மணி 12:30.
கால் செய்தபோது முதல் இரண்டு செகண்டிலேயே ரிங் கட் செய்யப்பட... இதயத்தில் அதிர்ச்சியை உணர்ந்தவனாக திரும்ப அழைத்த போது முதல் செகண்டில் எடுக்கப்பட்டது..
" ஹலோ சீதா...!.."
எதிர் முனையில் பதிலில்லை ஆனால் பின் புலத்தில் ஒலித்த சத்தத்தைக் கேட்ட ரகுவிற்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது..
மொத்தம் பத்து வினாடிகள் தன் செவிகளையே நம்ப முடியாதவனாக அதிர்ச்சி அடைந்தான் ரகு.
அந்த சத்தம்.....
" ஏப்பா சாப்ட போன பக்கத்து சீட் ஆளுகளெல்லாம் வந்துட்டாங்களா பாருங்க... வண்டி கிளம்ப போகுது.. " என்ற கண்டக்டர் கூவிய குரல் கேட்டு அதிர்விலிருந்து மீண்டான் ரகு. பஸ் மோட்டலில் இருந்து பைபாஸில் சீறத்தொடங்கியது....
                                                                                                   
                                                                                                                            (தொடரும்... )

புதன், 5 ஆகஸ்ட், 2015

கானல் நீர் - அத்யாயம் 2


August 2, 2015 at 8:28pm
தாராபுரத்திலிருந்து பஸ் வெளியேறி அமராவதி ஆற்றுப்பாலத்தைக் கடந்து பைபாஸைத் தொட்ட போது மீண்டும் நினைவில் மூழ்கினான் ரகு.
தான் திருமணமாகிவிட்டவன் என்று சொன்னவுடன் ஒரு பிரளயத்தை எதிர் பார்த்திருந்தான் ஆனால் சீதா அவனை ஆழமாக கண்களால் ஊடுவிக்கொண்டிருந்தாள். முகத்தில் ஏதும் இல்லாத வெறுமையை கொண்டவளாக அதேநேரம் என்னவென்று அறிய இயலாத முக பாவத்தை பதிலாகக் காட்டினாள் சீதா.
" சீதா...! நான் உன்கிட்ட இதை நான் முன்னாடியே சொல்லிருக்கனும் பட் நேர்ல சொல்லிடலாம்னுதான் வெயிட் பண்ணினேன். நம்ம ஆபீஸ்ல எம் டியை தவிர இது யாருக்கும் தெரியாது. ஆனால் கட்டிக்க போற உன் கிட்ட இத மறைக்க சத்தியமா நான் விரும்பல.. ரொம்ப டீப்பா இன்னும் நாம பழக ஆரம்பிக்கல. இப்ப நினச்சாகூட நாம பிரிஞ்சிடலாம்.பாதிப்பு அதிகம் இருக்காது. நாம பழக ஆரம்பிச்சதிலிருந்து இத எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு என் மனசு எவ்வளவு பாடுபட்டுச்சு தெரியுமா.? . ஐயம் வெரி சாரி சீதா.... ஆனா என்னோட மேரேஜ் லைப் ரொம்ப பரிதாபமானதுப்பா... அதோட ஆயுள் வெறும் ரெண்டு நாட்கள் தான். " என்று மடை திறந்த வெள்ளமாய் ரகு மனதில் உள்ளதை கொட்டிவிட இப்போது வரை இருவரின் கைகளும் பற்றிக்கொண்டிருந்ததை சீதாவின் மௌனத்தினால் ரகு சற்றே தளர்த்தி விடுபட எத்தனிக்க,
" இறந்துட்டாங்களாப்பா...? " என்ற சீதாவின் கேள்வியும் விடுபட்ட ரகுவின் கையை எடுத்து சீதா தன் மடிமீது வைத்துக்கொண்டதும் ரகுவிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
" இல்லப்பா... அந்த பொண்ணு மனநி.... வேண்டாம் சீதா. நான் அந்த கசப்பான நாட்களை உன்கூட இருக்கும் போது நினைச்சு பார்க்க கூட விரும்பலப்பா... பட் ஒவ்வொரு ஆணும் எவ்வளவு கனவுகளோட தன்னோட கல்யாண வாழ்க்கைக்குள் நுழைவான் தெரியுமா.? அந்த கனவுகள் எல்லாம் என் லைப்ல முதல் நாளே சுக்கு நூறாகிப்போய்டுச்சு சீதா... ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் அந்த பிரிவுல என் தப்பு ஒரு துளிதுளிகூட இல்ல இது எல்லாருக்கும் தெரியும் .கல்யாணம் ஆகாததுக்கு முன்னாள் எப்படி இருந்தனோ அதே மாதிரிதான் இப்ப உன் முன்னாடி நிக்கறேன். கல்யாணம் ஆனவன்ங்கனற பேர தவிர... " என்று சொல்லி சீதாவின் பதிலை எதிர்பார்த்து முகத்தை உற்று நோக்க.. தன் மடியில் வைத்த ரகுவின் கையை எடுத்து விட்டு தூரத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் பார்வையைச் செலுத்தினாள் சீதா.
" என்ன சீதா.... இப்ப எப்படி இவன விட்டு விலகறதுன்னு யோசிக்கறியா.? கொஞ்சம் அவசரப்பட்டு இவன்கிட்ட மாட்டிகிட்டோமேன்னு வருத்தப்படுறியா.? எதுவாயிருந்தாலும் சொல்லிடு சீதா நான் இப்போ எல்லாதுக்கும் தயாராகத்தா இருக்கறேன். நீ வேணான்னு சொல்லிட்டா என்ன ஒரு ரெண்டு மாசம் தாடி வளர்த்துட்டு திரிவேன். அவ்ளோதான் அப்புறம் எல்லாம் சரி ஆகிடும். ஆனா இந்த ஆபீஸ்ல இருந்து ரிசைன் பண்ணிடுவேன். ஏன்னா உன்ன பார்க்கும்போது எல்லாம் இந்த குற்ற உணர்ச்சி என்ன கொன்னுடும்பா.... ப்ளீஸ் சீதா ஏதாவது சொல்லுப்பா..." என்ற ரகுவின் கைகள் சீதாவின் தோள்களைப் பற்றின...
எங்கோ பதிந்த பார்வையை திருப்பிய சீதா தன் எதிரே அமர்ந்திருந்த ரகுவின் அருகில் சென்று அவன் வலக்கையை தன் இடக்கையில் பற்றியபடி அமர்ந்து அவனது தோள்களில் தன் தலையை சாய்த்தாள்.
ரகுவிற்கு அவர்களது காதல் முடிவு பெறவில்லை சீதாவிற்கு தன்மீது கோபமில்லை என்றும் தெளிவாக தெரிந்தது.. இருந்தாலும் அதை அவள் வார்த்தைகளில் வெளிக்கொணர முற்பட்டான் ரகு.
" சொல்லு சீதா இந்த தப்புக்கு நீ எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன். " என்ற ரகு சீதாவிடமிருந்து பிரிந்து அவள் முன்பிருந்த இடத்தில் அமர்ந்தான்.
தொடுவானத்தை நோக்கிய பார்வையுடன் சீதா,
"ரகு....! அந்த இன்டிபென்டன்ஸ் டே மெசேஜ் வர்ரதுக்கு முன்னாடிவரை நான் உங்களை சகஜமாகதான் பார்த்தேன். உங்க அமைதி, பொண்ணுங்ககிட்ட பழகறவிதம், இதெல்லாம் மேலோட்டமா என்னை இம்ப்ரஸ் பண்ணிணாலும் நாம போன்ல பேச ஆரம்பிச்சுதுக்கு அப்றமாதான் தெரிஞ்சுது நான் விரும்பிய கேரக்டர் நீங்கதான்னு.. கெட்ட பழக்கம் ஏதும் இல்லாதது, கண்ணிய குறைவா பேசாததுன்னு ஒரு க்ளீன் இமேஜை என் மனசுல ஆழமா பதியவச்சுடீங்க, எனக்கே தெரியாம நான் உங்கள நேசிக்க ஆரம்பிச்சேன். என்ன மாயமோ மந்திரமோ தெரியல நீங்க கேட்டதும் நான் சம்மதிச்சேன். ஆனா அது என் முழு மனப்பூர்வமான சம்மதம்.என் வாழ்க்கைல நீங்க மட்டும்தான்னு நான் தீர்க்கமா எடுத்த முடிவு. என் முடிவு எப்பவும் சரியானதாத்தான் இருக்கும். உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு ரகு. இப்ப கூட உனக்கு இஷ்டமில்லைனா பிரிஞ்சுடலாங்கற அந்த மனசு யாருக்கு வரும். உங்கள நான் இழந்தால் என் உயிரையே இழக்கற மாதிரி ரகு. நீங்க பேசு சீதா ன்னு சொல்றப்போ கூட இந்த மேட்டர வீட்ல எப்படி சமாளிக்க ன்னு யோசிச்சிட்டு இருந்தனே தவிர.. விலகறத பத்தி இல்ல.. வாட்டெவர் இட் ஈஸ் ஜஸ்ட் லீவிட் டியர் லைக்க பாசிங் க்ளௌட். உங்களுக்கு நான் இருக்கறேன் ரகு. இனி உங்க விஷயம் பத்தி எப்பவும் நானும் பேசமாட்டேன் நீங்களும் பேசாதீங்க. இந்த விஷயத்த நீங்க சொல்லாத போது எப்படி நான் இருந்தனோ அப்படியேதான் இப்பவும் இருக்கு சோ உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வர வேண்டாம். ஐ லவ் யூ சோ மச் ரகு பார் எவர்... " என்று கூறி இதழோர புன்னகையுடன் முடித்தாள் சீதா.
" சீதா....! " என்று கூவியபடி தான் இருப்பது பொது இடம் என்பதையும் மறந்து கண்களில் நீர் திரள சீதாவைக் கட்டிக்கொண்டான் ரகு. ஆனால் அந்த அரவணைப்பு என்பது வழிதெரியா ஆட்டுக்குட்டி மேய்ப்பவனிடம் கிடைத்தபோது அது கொண்ட அரவணைப்பு, பாறையிடுக்கில் சிக்கிய மரக்கிளை அருவி வழிவீழ்ந்து ஆற்றில் கலந்த போது ஆற்றின் மீது மரக்கிளை கொண்ட அரவணைப்பு, போன்றது என்று ரகுவிற்கு மட்டுமே தெரியும்.
" ஏங்க... ரகு... இங்க பாருங்க.... என்ன சின்ன குழந்தையாட்டம் அழுதுட்டு... " என்றபடி அணைத்துக்கொண்டிருந்தவனை விடுவித்து தன் மடியில் கிடத்தி கண்ணீரை தனது கைக்குட்டையால் துடைத்தாள் சீதா.
கிட்டதட்ட ஒரு மணிநேரம் இப்படியே நகர, ரகுவின் தலையை கோதியபடி இருந்த சீதாவின் அன்பு தந்த அச்சுகத்தில் அகநானூற்றுத் தலைவன் தலைவி காதல் முதல் ஆர்யா அனுஷ்கா காதல் வரை எங்கெல்லாமோ சென்றுவந்தான் ரகு. இனிதே அந்த நாளை முடித்து தங்கள் காதல் வரலாற்றில் வண்ணங்களாய் அலங்கரிக்க இருவரும் இணைந்து போட்டோ எடுக்கவும் தவறவில்லை ஆனால் அதுவே பின்னாளில் ஓர் விவாதப் பொருளாய் மாறும் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை. ஆபீஸில் இருவருடைய விஷயமும் கண்டிப்பாக யாருக்கும் தெரியக்கூடாது என்ற சங்கல்பத்துடன் அணைப் பூங்காவிலிந்து வெளியேறினார்கள்.
இப்படியாக நாளொரு மொபைலும் பொழுதொரு பூங்காவுமாக சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தன.
ஒரு சந்திப்பில்,
" உங்க வீட்ல நம்ம மேரேஜ் க்கு ஓகே சொல்லிடுவாங்கதான சீதா"
" கண்டிப்பா நடக்காது பட் எனக்கு இருக்கற நம்பிக்கை எல்லாம் எங்க அப்பா மட்டும் தான் அவர் என் விருப்பத்துக்கு எதிரா எதும் செய்யமாட்டாருப்பா... பட் முதல் அக்கா தீபலட்சுமியும் மச்சானும் கண்டிப்பாக ஒத்துக்க மாட்டாங்க... இரண்டாவது அக்கா ஹேம லட்சுமி ஓகே சொல்லுவா ஆனா மச்சான் கூட அவ பயங்கரமா சண்டை போடறா பாவம் அவங்க குழந்தை ஷாலினி... இதெல்லாம் விட நீங்க என் அத்தை பையன் மூர்த்தியை சமாளிக்கனும் அவன் என்னை ஸ்கூல்ல கிண்டல் பண்ணியவங்களை எல்லாம் இப்ப ஊர் ஊரா விரட்டிட்டு போய் கைகால முறிக்கறான்... என்ன மாப்பு இதுக்கே தலைய சுத்துதா.? "
" அம்மா தாயே உன் அம்மாவாவது நம்ம சப்போர்ட் பண்ணுவாங்களா.? "
" ஹே ஹேய்... அவங்க போனவாரம் ஒரு பொண்ணுக்கு செய்வினை வச்சு அவ லவ்வரயே மறக்க வச்சுட்டாகல்ல... "
" பாத்து சீதா உங்கம்மா உனக்கே பாயசத்த போட்ற போறாங்க"
ஆக தங்களது காதல் தெரிந்தால் சீதா குடும்பத்தினரே எதிர்ப்பார்கள் என்றும்... சீதாவை எப்போது வேண்டுமென்றாலும் தூக்கிப்போய் அத்தைமகன் மூர்த்தி மணம் செய்ய வாய்ப்புள்ளது என்றும்... சீதா தென் மாவட்டங்களில் அதீத செல்வாக்கு பெற்ற இனத்தை சார்ந்த பெண்சிங்கம் என்றும் தெரிந்தாலும் தான் சீதாவின் மேல் கொண்ட அளவற்ற காதலாலும், பாசத்தாலும் எதையும் சமாளிக்கத் துணிகிறான் ரகு.
இடையே ஒவ்வொரு சந்திப்பின் போதும் இவர்களது அன்யோன்யம் கூடிக்கொண்டு செல்வதை ரகு தன் டைரிக்குறிப்பாக வடிக்கிறான் ரகு....
அன்றொரு நாள்....
இளவேனிற்காலத்து அந்திமாலை நேரம்....
சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடுகிறது.....
அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் அருகே நீ.....
அதிகாலை நேரத்து பனித்துளியாய் உன் ஸ்பரிசம்...
ஜன்னல் ஓரத்துக் காட்சிகளாய் நினைவுகள் பயணிக்கிறது.....
இருவரின் கண்களும் சங்கமிக்கிறது ஸ்பஷ்டமாக....
கைகள் மலர்க் கொடி போல பின்னிக் கொண்டன.....
இருவரின் உயிரும் கண்களின் வழியே கூடுவிட்டு கூடுபாய தொடங்கியது.....
உயிரே உணர்விற்குள் கலந்துவிட்ட போது இதழ்கள் மட்டும் ஏமாந்துவிடுமா?....
- ரகு ராமன் தேடிய சீதைக்காக....
ரகு.
இவர்களது இனிய சந்திப்புக்களை இனிதே பதிவு செய்தது இருவரின் மொபைல்களும்...இப்படியாக வளர்ந்தது இவர்களின் காதல்.
ஒருநாள், ஆபீஸிற்கு வந்ததும் சீதாவைத் தேடுகிறான் ரகு காலையில் எப்போதும் சீதைவை போனில் எழுப்புவது ரகுவின் வழக்கம். இன்று காலை போன் எடுக்கவேயில்லை நேற்று இரவு பத்து மணிக்கே பேசி முடித்துவிட்டோம். என்னாச்சு ன்னு தெரியலையே என்று புலம்பியவன் சீதாவின் தோழி வனிதாவிடம் எதேச்சையாக விசாரிப்பது போல் விசாரிக்கும்போது சீதா நேற்று இரவு பதினோறு மணிக்கே கிளம்பி ஊருக்கு சென்றுவிட்டதாகதெரிகிறது.. ரகு குழப்பத்தில் ஆழ்ந்தவனாக மீண்டும் மீண்டும் போனில் முயற்சிக்கிறான் சிறிது நேரத்தில் போன் சுவிட்ச் ஆப் செய்துவிட்டதை அன்பாக அறிவிக்கிறது பெண்குரல். ரகுவின் மனம் முழுவதும் சீதா நினைவுகள் ஓட, மாலைவரை காத்திருந்து மாலை போனில் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் ரிங் போகிறது........
" பஸ் பத்து நிமிஷந்தாங்க நிற்கும் சாப்பிடறவங்க சீக்கிரம் சாப்பிட்டு வாங்க....." பஸ் வாடிப்பட்டி பிரிவிற்கு அருகே உள்ள மோட்டலில் நிற்கிறது மணி 8:45AM.
(தொடரும்....)

வெள்ளி, 31 ஜூலை, 2015

கானல் நீர் - அத்தியாயம் 1

 "திருப்பூர்" பல்வேறு பரிணாமங்களில் எத்தனையோ முகங்களைக் கொண்ட தன் இராட்சத ரூபத்தை அமைதியாய் அடக்கிக்கொண்டு அந்த அதிகாலைப் பொழுதில் இனிய தென்றலை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. ரகுராம் என்கிற ரகு காலை நேர சில்லிப்பை ரசித்தவாறு புதிய பேருந்து நிலைய டீக்கடை ஒன்றில் நின்று கொண்டு மதுரைக்கு புறப்படும் அடுத்த பஸ்ஸை பற்றி யோசித்த வேளையில் தன் மதுரை பயணம் பற்றி ஞாபகங்களை அசை போடத்துவங்கினான். 
"சீதா" இந்தப் பெயரால் தான் இவன் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறான். 
" சீதா நா இன்டிபென்டன்ஸ் டே மெசேஜ் அனுப்பினேன் பாக்கலயா.? ரிப்ளையே வரலேயே.." என்ற ரகு அப்போதுதான் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அங்கு ஏற்கனவே பணிபுரியும் சீதாவிற்கு அவளுக்கு தெரியாமலேயே அவள் மொபைல் எண் பெற்று ஏதோ ஒரு உந்துதலில் மெசேஜ் அனுப்பி வைக்க, என்ன சொல்வாளோ என்ற உதறலிலேயே இந்த கேள்வியை கேட்டு வைத்தான் ரகு.
" ஏங்க அது நீங்கதானா.? நான் யாரோன்னு நினச்சு ரிப்ளை பண்ணல. அதோட மெசேஜ் கார்டு போடல. சோ ரிப்ளை பண்ண முடில.நான் கார்டு போட்டுட்டு உங்களுக்கு மெசேஜ் பண்றேன். எனிவே ஹேப்பி இன்டிபென்டன்ஸ் டே லேட்டர் விஷஷ் " என்று கூறி நாணத்தோடு கை நீட்டியவளை ஏதோ நேஷனல் அவார்டு வின்னர் போல கையை குலுக்கிவிட்டு சென்ற அவள் உள்ளங்கை ஸ்பரிசத்தை ஆயுட்காலம் முழுவதும் உணர்வு நினைவுகளாக சேமித்து வைக்க தன் மூளைக்கு கட்டளையிட்டுக்கொண்டான் ரகு. சீதா என்கிற சீதாலஷ்மிக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில், பள்ளிப்படிப்பை முடித்து டிப்ளமோ செய்தவள் இங்கு வேலைகிடைத்ததால் திருப்பூர் வந்து இரண்டு வருடங்களாகிறது. காண்போரை கவரும் கன்னிகை இல்லை என்றாலும் இயற்கை அழகை அள்ளி அளித்து விட்டான் பிரம்மன். ஏற்கனவே இருவருக்கும் புன்சிரிப்பு மட்டுமே வார்த்தைகளாக இருந்த நிலையில் ரகுவின் இந்த துணிவான செயல் நல்ல முன்னேற்றம் தந்ததை இருவரது விழிகளும் உறுதி செய்தது. சீதாவிற்கும் ரகுவின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்து வந்தது. இப்படியாக தோன்றிய காதல் அன்று மதியமே சீதா மெசேஜ் கார்டு போட்டு ரகுவிற்கு ரிப்ளை அனுப்பியதிலிருந்து மண்ணைத் துளைத்து முளைவிடும் மரமென வளரத்துவங்கியது.
நாசித்துவாரத்தில் மல்லிகை மணம் தாக்கியதால் நினைவுகளை நிறுத்திவிட்டு அருகிலிருப்பவர்களை கவனித்தான் ரகு. இரு பெண்கள் தம் கணவன் குழந்தைகளுடன் எங்கோ விஷேசத்திற்கு செல்கிறனர் போலும். அதற்குள் மதுரை செல்லும் பஸ் புறப்பட பஸ்ஸிலேறி அமர்ந்தான். கையில் மணியைப் பார்த்தான் ஐந்தரை என்று காட்டியது. இன்னும்விடியவில்லை.திருப்பூரிலிருந்து இருபது கிமீ தொலைவிலிருக்கும் தன் ஊரிலிருந்து மூன்றரை மணிக்கு எழுந்து புறப்பட்டு 
"அம்மா இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு பங்ஷன் நேரமே கிளம்பனும் " என்று அம்மாவிடம் நேற்று இரவு கூறிய பொய்யை உறுதிப்படுத்தி, பைக்கை எடுக்கும் முன்பு
" அப்பா படத்தை கும்பிட்டு போப்பா" என்று அம்மா வெகுளியாய் கூறியது உள்மனதில் எங்கோ இடிக்க, அந்தக் கணம் காதல் வந்து சீக்கிரம் கிளம்புடா என்று நரம்புகளை மீட்ட, பைக்கை அலுத்திப்பிடித்து வந்த போது மணி ஐந்து இருபது. இவ்வளவு வேகமாக வந்ததே இல்லை என்று பெருமூச்சுடன் கொட்டாவி விட்டபடியே சீட்டில் தலையை சாய்த்தான் ரகு. சிறிது கண்ணயர்ந்து எழுந்தபோது பஸ் கொடுவாய் தாண்டி சென்று கொண்டிருந்தது. மையில் எழுதிய காகிதம் மழையில் நனைந்ததைப் போல வானம் நீலத்தில் நனைந்திருந்து. முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் சீதாவைப்போல் ஹேர் ஸ்டைல் கொண்டிருந்ததால் விழித்திரை வழி நினைவுகள் ஓடியது.
ரகு தன் காதல் மரம் வளர மொபைலில் தினமும் நீர்விட்டு வந்தான். 
"சீதாக்குட்டி சாப்டாச்சா.?"
"சாப்டேன்பா நீங்க போய் சாப்பிடுங்க முதல்ல இன்னுமா சாப்டாம இருப்பாங்க?"
இப்படியான சம்பாஷனைகளில் மூன்று வேளையும் தொடந்தது.
ரகு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான்.
"செல்லக் குட்டி நான் ஒன்னு சொல்வேன் கோவிச்சுக்க கூடாது சரியா? "
"என்னபா சொல்லுங்க முதல்ல"
"இல்ல... அது... வந்து..."
"ப்ச்... என்னமா தயங்கறீங்க.. நான் யாரு உங்களுக்கு.? "
"வைப் ஐமீன் பொண்டாட்டி"
"அப்பறம் எதுக்கு தயக்கம்? சொல்லுபா"
"வெளிய எங்காவது மீட் பண்ணலாமான்னு......"
"ஹ் ஹாஹக்..ஹ... இதுக்குதான் இவ்வளவு தயக்கமா ? பேருக்குதான் பெரிய ஆபீஸர் ஆனா பொண்டாட்டி கிட்ட இத கேட்க கூட தயங்குவாறு... ஹ....ஹ்...ஹா.. "
"ஏய் குட்டவாத்து இப்ப வெளிய போலாம் வாடி... இப்பவே உன்ன தூக்கிட்டு போறேன் வாடி..."
"அடடா கருவாபயலுக்கு கோபத்த பாருங்க... சரி தங்கம் போலாம் பட் நமக்கு தெரிஞ்சவங்க யாரும் வராத இடமா பார்த்து சொல்லுங்க.. சரியா.?
"இதுதான் என் சீத்தாகுட்டி.... ஓகே பக்கத்துல ஒரு டேம் இருக்கு அங்க போவோம்"
இரண்டொரு தினங்களில் வெளியே சந்திப்பது என்று முடிவாகியது. ரகு சொல்லொனா உணர்வில் ஆழ்ந்தான். ஏதோ நெஞ்சில் தைத்தது போன்று, அருவியில் வீழப்போகும் மரக்கிளை முன்னரே பாறை இடுக்கில் சிக்கியது போன்ற உணர்வில் இருந்தான். 
அன்றைய நாளும் வந்தது. பச்சை வண்ண உடையில் பளிங்கு சிற்பம் போல புன்முறுவலுடன் ரகுவின் கரங்களை பற்றி தோள்மீது தோள் சாய்த்தவாறு அந்த அணையின் பூங்காவில் நடைபயின்ற போது சத்தியமாக ரகு மானிடனாய் அல்லாமல் வானத்து தேவர்களாய் மிதந்தது என்னவோ உண்மைதான். இவளது முதல் ஸ்பரிசம் மழைத்துளி போல தூய்மையானது. மலரின் மெல்லிய இதழ் போல மிருதுவானது. சிசுவின் உயிர்போல் புனிதமானது. என்ற கற்பனையில் மிதந்த ரகுவை 
"அங்க உட்காரலாமாப்பா."
என்ற சீதாவின் குரல் கலைத்தது.
அமர்ந்தனர்
தன் தலையை ரகுவின் தோள்மீது சாய்த்த சீதாவின் இரு கைகளைப்பிடித்தபடி நேருக்கு நேராக அமர்ந்த ரகு கண்களை கண்ணுக்குள் புகுத்துவது போல் பார்வையை செலுத்துகிறான்.
" ரகு ப்ளீஸ் அப்டி பார்க்காத.. உன் கண் என் கண்ண திங்கறமாதிரி இருக்குப்பா..."
"சீதா...! இப்ப நான் உன் கிட்ட ஒரு முக்கியமான பெரிய விஷயம் சொல்லப்போறேன். அத சொன்னதும் நமக்குள்ள சண்டை வரலாம். நாம ஒன்னு சேரதுக்கு முன்னாடியே பிரிஞ்சுகூட போலாம். பட் மை ஹம்புல் ரிக்வஸ்ட், ப்ளீஸ் சீதா குட்டி என்ன வெறுத்துடாதடி..." என்ற ரகுவின் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்தது.
" ஹேய் என்னப்பா சொல்றீங்க? நான் எதுக்கு உங்கள வெறுக்க போறேன்? எனக்கு பயமா இருக்கு ரகு ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்க.." சீதாவின் முகத்தில் கலவர ரேகை படர்ந்ததையும், உள்ளங்கை வியர்த்ததையும் கண்ட பெருமூச்சுடன் இன்னும் கையை இருக்கியபடி

" சீதா...! ஐயம் மேரிட்.... எஸ்..... நான் ஏற்கனவே கல்யாணமானவன்"

"தாராபுரம் எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் இறங்குங்க பார்க்கலாம்.." பஸ் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குள் நுழைகிறது. சூரியன் தன் கிரணங்களை மெல்ல வியாபிக்கச்செய்கிறது.
(தொடரும்....)

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நான் யார்...?

எலும்பும் சதையுமாக
நரம்பும் தோலுமாக
ஆக்கப்பட்டவனா நான்...?
அல்லது....
அன்பும் கருணையுமாக
நேசமும் பாசமுமாக
கொண்டவனா நான்.....?

இல்லை நிச்சயமாக இல்லை...

மனிதனுக்கு இட்ட எல்லைகள்
எனக்கு கிடையாது....
எல்லையற்ற பிரபஞ்சமே
என் உறைவிடம்.....
வரையறைகள்
எனக்கும் கிடையாது
கடவுளுக்கும் கிடையாது....

ஏனென்றால்....

நான் கடவுள்..!

அன்புடன்,
Sathish Kumar

சிந்தனை சிதறல்கள்

இன்று அதிகாலை நான்கு மணிக்கு நான் தூக்கம் களைந்தவனாக யோசித்த விஷயம் இது, உலகத்திலேயே மிக அற்புதமான இயந்திரம் எது தெரியுமா,?

நம் உடல்தான். இயக்கத்திற்கான சக்தியை உணவிலிருந்து பெற்று, 24 மணிநேரமும் இதயம் எனும் இஞ்சினை இயக்குகிறது, ஏர் கம்ப்ரசர் வேலையை நுரையீரல் செய்கிறது. கட்டளை பிறப்பிக்கும் வேலையை சிபியூ போல நம் மூளை செய்கிறது, உடலெங்கும் சென்சார் யூனிட்டுகளாக நம் நரம்புகள், இவை அனைத்தையும் கொண்ட அற்புத இயந்திரம் நாம். ஆனால், நாம் அந்த இயந்திரத்தை ஒழுங்காக செயல்பட விடுகிறோமா,? நெல்மணிகள் அதிகமாக விளைய விஷமிட்டு வளர்க்கிறோம் அதே ஸ்லோ பாய்சனை நாமும் உண்டு நம் குழந்தைகளுக்கு தெரிந்தே கொடுக்கிறோம். இது ஒழுங்காக ஓடும் இயந்திரத்திற்கு பெட்ரோல் உடன் தாரை கலந்து ஊற்றுவது போலாகும்.
ஆகவே விவசாயிகளே, ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை இடுங்கள், நம் உடல் இயந்திரத்தை பேணிக்காப்பாற்றுங்கள்....

( எங்க ஆரம்பிச்சு எங்க போய் முடிக்கிறான் பாருயா,? இப்ப இன்னாபா சொல்றனு, நீங்கல்லாம் நெனிகிறது தெர்து... இன்னா தல பண்றது, தூக்கம் வரல, எதுனா எய்திதான ஆகனும்)

மாக்கான்'ஸ் மைன்ட் வாய்ஸ்

அய்யா இலவசமாக நிலம் கொடுத்தாரு., அம்மா அதுல பசுமை வீடா இலவசமாக கட்டி கொடுத்தாங்க, மாசா மாசம் இலவசமாக அரிசி கிடைக்குது., என் சொந்த அம்மாவுக்கு மாசா மாசம் ஓய்வுத் தொகை கிடைக்குது அதுல மலிவு விலைல மளிகை வாங்கிடலாம், என் குழந்தைகளுக்கு படிப்பு செலவே இல்ல செருப்புல இருந்து லேப்டாப், சைக்கிள் வரை இலவசமாக கிடைக்குது., கைச்செலவுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சப்ப இலவசமாக ஆடு கொடுத்தாங்க, எங்க வீட்ல வசதி இல்லனு எவன்யா சொன்னது., மிக்ஸி, கிரைண்டர், டேபிள் பேன், கேஸ் ஸ்டவ், வண்ணத் தொலைக்காட்சி எல்லாமே இலவசமாக வாங்கிட்டம்ல., என் பையன் படிச்சுட்டு சும்மா இருக்காப்ல அவன் பாக்கெட் மணிக்கு மாச மாசம் உதவித்தொகை வேற கொடுக்கறாங்கப்பா., பொண்ணு கல்யாணத்துக்கு சம்பாதிக்கனும்னு எனக்கென்னங்க இருக்கு.? அதான் தாலிக்கு தங்கம் இலவசமாம்ல., அம்மா உப்பத்தான் தினமும் திங்கறோம்., வீட்ல சாப்பிட்டு போர் அடிச்சா, அம்மா உணவகத்துல அஞ்சு ரூவாய்கு வயிறு நிறைய சாப்புடறோம்., வெளிய போனா அம்மா தண்ணியத்தான் வாங்கி குடிக்கறோம்., இவ்வளவையும் கொடுக்கும் போது நாங்கல்லாம் என்ன ம... னாவுக்குங்க வேலைக்கு போகனும்.?
அப்படியே வேலைக்கு போறம்கற பேருல சும்மா உட்கார்ந்து நூறு நாள் வேலைத்திட்டதுல போனாலும், அந்த காச அப்படியே அம்மா சாராய கடைல (டாஸ்மாக்) போடரதுதானுங்க நியாயமானது, அதாங்க தர்மம்.

( இது சிரிப்பதற்காக மட்டும் அல்ல., இலவசமாக அனைத்தையும் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கும் திராவிடக்கட்சிகளின் தோலை உரிப்பதற்காகவும்தான்.... நோட்டை வாங்கிவிட்டு ஓட்டை போட்டு தங்கள் வாழ்க்கையை கோட்டைவிடும் மானம் கெட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு எப்போது. ? )
L

தேடல்....

ஒரு இடம்,
அங்கே நிசப்தம் மட்டுமே இருக்கும்...
இருள் மட்டுமே நிறைந்திருக்கும்....
பணம் அங்கு ஒரு பொருட்டல்ல....
காற்று கூட தேவையில்லை......
மனித பேதங்களுக்கு இடமில்லை...
நிறமும் இனமும் தேவையில்லை....
எனக்கே புரியவில்லை
நான் தேடுவது
கருவறையா.? கல்லறையா.?

Sathish Kumar

சிந்தனை சிதறல்கள்

வாழ்க்கையில் தோல்விகளுக்கு காரணம் விதியா.? மதியா.?
தோல்விகளுக்கு உலகம் தரும் ஒரே மருந்து தன்னம்பிக்கை....
தன்னையே நம்பாதவனுக்கு தன்னம்பிக்கை எப்படி வரும்.?

வெற்றிக்கு மதி காரணம் என்றால்
வீழ்ந்தவனுக்கு மட்டும் விதி சொந்தமா.?
எண்ணியதெல்லாம் எண்ணியபடி நடந்துவிட்டால் 
எண்ணியவனெல்லாம் கடவுள் ஆவான்.
பண்ணிய கர்மவினை என்றால்
தர்மம் இருந்து என்ன பயன்.?
பலரின் தோல்விகள் ஒருவனுக்கு வெற்றியாகிறது...
உன் வெற்றிக்கு காரணம் கடவுள் என்றால் பலரின் தோல்விகளுக்கும் காரணம் கடவுள்தான்....
பாவ புண்ணிய கணக்கை கூட்டிக்கழித்துப் பார்க்க கடவுள் என்ன கணக்குப்பிள்ளையா.?
பத்து ரூபாயை உண்டியலில் போட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டால் கடவுள் வெற்றியை மட்டும் அளிப்பான் என்று சட்டம் உண்டா.?

ஆக., வெற்றியோ தோல்வியோ அனைத்திற்கும் நாம்தான் காரணம்...
சரியான நேரத்தில் சரியான கோணத்தில் சிந்திப்பவன் அதனை சரியான சூழ்நிலையில் பயன்படுத்துபவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்......

'உன்னயெல்லாம் இப்டி பேச சொல்லி யார்டா சொன்னது ' ன்னு கவுண்டமணி ரேஞ்சுல பல்ல கடிக்கறது நல்லா தெரியுது. .... என்ன பண்ணறது எல்லாம் விதி.......

மாற்றம் ஒன்றே நிலையானது

காலம் மாறுகிறது
காட்சிகளும் மாறுகிறது
மனமும் மாறுகிறது
தினமும் மாறுகிறது
விளைவில்லா வார்த்தைகள் கூட
நொடிக்கு நொடி மாறுகிறது
மனிதனும் மாறுகிறான்
மனைவிகூட மாறுகிறாள்

உயிரில்லா பணத்திற்கு
உயிரைக் கூட தருகிறோம்
நேசித்த நெஞ்சங்களை
நிர்கதியாக்கி விடுகின்றோம்
கருப்பும் வெள்ளையாகிறது
களையும் கலைந்து விடுகிறது
இளமையது மூப்பாகும்
கைத்தடி காப்பாகும்

காலன் வந்து கரம் பிடிப்பான்
காயமதனைக் கரி திங்கும்
மேலே வானம் கீழே பூமி
நடுவில் எங்கிருந்து வந்தது சாதி
நிறமும் இனமும் வேறென்றாலும்
மனிதன் என்னும் மகத்துவம் மாறுமா.?
அன்பும் கருணையும் வழி என்றால்-உன்
வாழ்வையும் வழியையும் சரித்திரம் கூறுமே.!

மாற்றங்கள் இல்லாமல் வையம் இல்லை
வையத்து மாற்றங்கள் நம்மால் நிகழட்டும்..
ஏனென்றால்.,
மாற்றம் ஒன்றே நிலையானது.

அன்புடன்
Sathish Kumar
L

நீ...!

முதல் வரியில் மரித்துவிட்ட என் அழகிய கவிதை நீ.....!
மூன்றாம் பிறையிலேயே மூழ்கிவிட்ட என் முழு நிலவு நீ.....!
காயாய் இருக்கும்போதே கசந்திட்ட என் முக்கனி நீ.....!
கருவிலேயே கரைந்திட்ட என் இனிய மழலை நீ......!
தொடக்கத்திலேயே தொலைத்திட்ட என் மொத்த வாழ்வும் நீ... நீ... நீ...!

எனது ஆட்சியில்.....

1. மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். நாடெங்கும் ஒரே கல்விமுறை பின்பற்றப்படும்.

2. மறைநீர் ( virtual water ) அதிகமாக பயன்பாடு உடைய தொழில்கள் கண்டறியப்பட்டு அவை உள்நாட்டில் மட்டும் இயங்க வழிவகை செய்யப்படும்....

3. நாடெங்கும் இட ஒதுக்கீடு முறை அறவே ஒழிக்கப்பட்டு திறமை மட்டுமே முன்னிருத்தப்படும்.

4. ஒவ்வொரு குடும்பமும் தலா மூன்று மரங்களையாவது கட்டாயமாக வளர்த்தால்தான் குடும்ப அட்டையில் பொருட்கள் வழங்கப்படும்.

5. சுய லாபம் கருதி கடமையை செய்யாமலிருப்பவர்கள் மற்றும் கடமையை மீறுபவர்களுக்கு முதல் முறைமட்டும் மன்னிப்பு வழங்கி தேசதுரோகி பட்டம் இலவசமாக வழங்கப்படும்.

6. இலவசங்கள் அறவே ஒழிக்கப்பட்டு மக்களை உழைத்து அவற்றை எளிதாக பெற்றிட தகுந்த திட்டங்கள் தீட்டப்படும்.
7. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் மீட்கப்பட்டு அவற்றில் இராணுவ தளவாடங்கள் வாங்கி உலகின் மிகச் சிறந்த இராணுவமாக நம் இராணுவம் ஆக்கப்படும்.


1. சர்ச் பார்க் கான்வென்ட் ல் படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி மஞ்சக்கோணாம்பாளையம் மாரப்பன் மகனுக்கும் கிடைக்கும்.

2. 50 $ = 1 ₹ என்ற நிலை வரும்.

3. கோவிலில் சிறப்பு தரிசன முறை ஒழிக்கப்படும்.

4. லஞ்சம் வாங்கியது நிருபிக்கப்பட்டால் வலது கை கட்டைவிரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட சட்டம் பிறப்பிப்பேன். (டாக்டர் பீசை அந்த கபோதியிடமே இரண்டு மடங்கு கறக்க வேண்டும்)

5. பெர்டிலைசர் கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டு, இயற்கை விவசாயத்தை கட்டாயமாக்குவேன். 

நினைவுகள்

இளவேனிற்காலத்து அந்திமாலை நேரம்....
சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடுகிறது.....
அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் அருகே நீ.....
அதிகாலை நேரத்து பனித்துளியாய் உன் ஸ்பரிசம்...
ஜன்னல் ஓரத்துக் காட்சிகளாய் நினைவுகள் பயணிக்கிறது.....
இருவரின் கண்களும் சங்கமிக்கிறது ஸ்பஷ்டமாக....
கைகள் மலர்க் கொடி போல பின்னிக் கொண்டன.....
இருவரின் உயிரும் கண்களின் வழியே கூடுவிட்டு கூடுபாய தொடங்கியது.....
உயிரே உணர்விற்குள் கலந்துவிட்ட போது இதழ்கள் மட்டும் ஏமாந்துவிடுமா?....

"அட பரதேசி...! மணி எட்டு ஆகுது இன்னும் எந்திரிக்காம என்னடா தூக்கம்? இவனும் இவன் வேலையும்,.... "

ஹூம்ம்.... கனவா இது..... ஓசை இல்லாமல் பாயை சுருட்ட ஆரம்பித்தேன் நான்.......

அன்புடன்,
SATHISHKUMAR. A

திங்கள், 28 ஜூலை, 2014





நேற்று கோத்தகிரி சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்கள்..... 

ஞாயிறு, 24 ஜூன், 2012

ரகசியமாய் ஒரு மாற்றம்...


                           






                                               

புதன், 12 அக்டோபர், 2011

கால் கிலோ கருப்பு புளி மஞ்சதூளுடா....!

நண்பர்களே! 
                              நீண்ட நாட்களுக்கு பிறகு நான் மிகவும் ரசித்த விளம்பரத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அது ஏர்டெல் சூப்பர் சிங்கர் விளம்பரம்.இந்த விளம்பரத்தின் இயக்குனர் யாராக இருந்தாலும் அவருக்கு எமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்விளம்பரத்தின் கடைசி பகுதி மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாமோ என்று தோனுகிறது மற்றபடி அட்டகாசம்.இதோ உங்கள் பார்வைக்கு அந்த விளம்பரம். 


சனி, 28 மே, 2011

மனதைத் தொட்ட திரைப்படங்கள் - பகுதி 2

Hors de prix - பிரஞ்சு மொழித் திரைப்படம் 

                              கொஞ்சம் காமெடி கொஞ்சம் சீரியஸ் கொஞ்சம் சோகம் எல்லாம் சேர்த்தால் இந்த படம் வரும். இதில் வரும் ஹீரோயின் Audrey Tautou தனது  பாய் பிரண்டுடன் பிறந்த நாளைக் கழிக்க ஹோட்டலுக்கு வருகிறாள். அங்கு பார் அட்டண்டர் ஆக இருக்கும் ஹீரோ  Gad Elmaleh மீது காதல் அரும்புகிறது.ஆனால் ஹீரோயின் பணம் இருக்கும் நபர்கள் மீது குறிவைத்து அவர்களுடன் ஊர் உலகம் சுற்றி அவர்களின்  தயவால் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண். சில நிகழ்வுகளால் ஹோட்டலில் வேலை செய்வும் ஹீரோவை பணக்காரன் என நினைத்துக் கொண்டு விரும்பிவிட பின்னர்தான் தெரிகிறது அவன் வேலைக்காரன் என்று அந்த காட்சிகளில் எல்லாம் இருவருமே நல்ல நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

                                                                     பின்னர் அவளுடைய பார்முலாவையே பின்பற்றி ஹீரோவும் ஒரு கேர்ள் இல்லை லேடி பிரண்டை பிடித்துக் கொள்கிறான். இதில் யார் அதிகமாக அவர் அவர்களின் ஜோடியிடமிருந்து பணம் கறக்கிறார்கள் என்பதுக்கு ஒரு போட்டி வேறு நடக்கும். இது இப்படி போய்க் கொண்டிருக்க இவர்களுக்குள் இருந்த காதல் அனாயாசமாக வளர்கிறது.ஒரு கட்டத்தில் தங்களிடமிருந்த காதலை எப்படி வெளிப்படுத்தி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் கதை. இதில் எனக்குப் பிடித்த காட்சி ஹீரோயின் ஹோட்டலில் தனது பாய் பிரண்டுக்கு மேஜையில் உள்ள ஸ்பூன்கள் ஒரே திமிங்கலத்தின் எழும்பினால் செய்யப்பட்டது என்று சொல்லி தன் அறிவை காட்டுவாள் அதைப் பார்த்த ஹீரோவும் தன் லேடி பிரண்டுக்கு அதையே சொல்வான் இதை அந்த அந்த கதா பாத்திரங்கள் அறியாமலேயே காட்டுவார்கள்.இது எனக்கு ரொம்ப பிடித்த காட்சி. 

                                                  

வியாழன், 26 மே, 2011

வாழ்த்துக்கள்!!

                அதிகமான வேலைப் பளு காரணமாக சில நாட்களாக பதிவே எழுதவில்லை அதற்காக தனி மெயிலில் குறைபட்டுக் கொண்ட நண்பர்களுக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                  இதோ அதோ என்று ஒரு வழியாக தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தல் முடிந்து நல்ல நிர்வாகத் திறன் படைத்த ஒரு ஆட்சியாளரின் தலைமையில்
அரசு அமைக்கப் பட்டுவிட்டது. அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
                   
                                        

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மனதோடுதான் நான் பேசுவேன்...- பகுதி - 2

இன்றைய இளைய சமுதாயம்.

அன்பு நண்பர்களே !
                                     இன்றைய நவீன உலகில் இளைய சமுதாயம் முன்னேறியுள்ளதா ? அல்லது சீரழிந்துவிட்டதா ? என்று கேட்டால் நாம் இரண்டுவிதமான பதிலைக் கூற வேண்டியதிருக்கும். அறிவுசார் துறைகள்,விஞ்ஞானம் போன்றவைகளில் கண்டிப்பாக இளைஞர்களின் பங்கு அபரிதமான நிலையில் உள்ளது. ஆனால் நம் நாட்டின் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் மிகவும் சீரழிந்துவிட்டது என்பது கசப்பான உண்மையே ! நானும் ஒரு இளைஞன் என்ற முறையில் காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் 2000  வது ஆண்டிலிருந்தே இந்த புரட்சி ராக்கெட் வேகத்தில் பயணித்தது எனலாம். பொறியியல் படித்துவிட்டு அரசாங்கவேலைக்கு மனுப்போட்ட காலம் போய் அமெரிக்காவிற்க்கு விசா வாங்கும் காலம் மாறியது.அதுவும் இந்த கணிப்பொறி காலம் வந்தபிறகு வெள்ளைக்காரன் கொடுக்கும் அரைச் சம்பளத்திர்க்கு மாவரைக்கும் கால் சென்டர் வேலையும், மென்பொருள் துறையும் இங்கேயே நமது நாட்டிலேயே பரவத் தொடங்கின. இவர்கள் வந்தது யாருக்கு லாபம் என்றால், பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கும், அங்கு சில்லறை வியாபாரம் செய்பவர்களுக்கும் மட்டும்தான் ஏனென்றால் வெளிநாட்டின் அரைச் சம்பளம் நமக்கு பொக்கிஷம் போல இருக்கிறது.இதை செய்த புண்ணியவான்கள் இன்னொன்றையும் செய்தார்கள் அதுதான் கலாச்சார சீரழிவு. அதற்க்கு இவர்கள் மட்டுமே காரணம் என்று நான் சொல்லவில்லை. இவர்களும் முக்கிய காரணம் என்று சொல்கிறேன்.
                                    வாழ்க்கைக்கு தேவையான ஊதியத்தை விட பலமடங்கு கிடைத்ததாலும் பணி செய்யும் சூழ்நிலை மாற்றத்தாலும் யாரும் அறியாமலேயே இவர்களுக்குள் கலாச்சார மாற்ற புற்றுநோய் அதீதமாக பரவத் தொடங்கியது. இந்த மாற்றம் ஒருவகையில் உலகளாவிய மனித சமுதாயம் என்னும் உயர்ந்த பண்பை தோற்றுவித்தாலும், இந்தியக் கலாச்சாரம் என்னும் முறை அழிய காரணமாகவும் உள்ளது.  
                                      பணிபுரியும் சூழல் மிகுந்த மனச்சோர்வை ஏற்ப்படுத்துவதாலும் மிதமிஞ்சிய பணப்புழக்கத்தாலும் இவர்கள் மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை ஏற்ப்படுத்தும் வழியை நாடவேண்டியுள்ளது. அதன் விளைவுதான் பெருநகரங்களில் இருக்கும் பப், டேட்டிங்,டிஸ்கோதே போன்ற மகோன்னதமான விளைவுகள். நான் ஏன் மகோன்னதம் என்று சொல்கிறேன் என்றால் இவை அனைத்தும் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதியான பழக்கங்கள்.அவர்கள் இந்த மாதிரியான பழக்கங்கள் ஏன் கொண்டுள்ளார்கள் என்றால் சீதோஷ்ண நிலை சார்ந்த இயற்க்கை சமன்பாடுகளை நிலைப்படுத்தத்தான். அது எப்படி என்று பார்க்கப் போனால் நான் உங்களுக்கு ஒரு மானுடவியல் வகுப்பு எடுக்கவேண்டியதிருக்கும், அதை பின்னர் பார்க்கலாம்.  
                                   இப்போது நான் ஒன்று சொல்கிறேன், தங்களை புத்திசாலிகள் என்று எண்ணிக்கொள்வது இவர்களின் தலையாய கடைமைகளில் ஒன்று. சரி நீங்கள் சிட்டியில் வளர்ந்துவிட்டீர்கள்,மிக சாளரமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,கம்ப்யூட்டர் போன்ற சில உபகரணங்களை இயக்கத் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இதனாலெல்லாம் நீங்கள் புத்திசாலி ஆகிவிட்டதாக அர்த்தமா ?
                                      உங்களைப்போன்ற ஒரு நகரத்து இளைஞன் தனது கிராமத்து ஆசிரியருடன் பிரயாணம் மேற்கொண்டான்.இந்த இளைஞன் தனது உலக ஞானத்தை தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பினான். அதற்காக பார்க்கும் விஷயத்தை எல்லாம் பயங்கரமாக விளக்கிக்கொண்டிருந்தான். இரவு வேளை வந்தது கூடாரம் அமைத்துக் கொண்டு இருவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள் நடுஇரவில் திடீரென்று இளைங்கனுக்கு விழிப்பு வந்தது, ஆசிரியரை எழுப்பினான்.
                                      " ஐயா மேலே பாருங்கள் என்ன தெரிகிறது ?"
                                      " நட்சத்திரங்கள் " என்றார் ஆசிரியர்.தூக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலுடன்.
                                      " ஐயா அப்படி அலட்சியமாக சொல்லாதீர்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகின்றன என்று தெரிந்து நான் இரவில்கூட திசைகளை அறிந்துகொள்ளலாம்." என்று இளைஞன் தனக்கு தெரிந்த நட்சத்திர விசயங்களை எல்லாம் பெருமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
                                        ஆசிரியர் அவனை நிறுத்தினார்.
                                         " உனக்கு வேறு என்னென்னவோ தெரிகிறது.எனக்குப் புரிவது ஒன்றே ஒன்றுதான்.வானமே தெரிகிறது என்றால்,நம் கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்."
                                         அவர்களைப்போன்றவர்கள் பள்ளியில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள். மற்ற சிலர் வாழ்க்கையில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள்.


                                                                                     ( இன்னும் பேசுவேன்.....)
 

 
 
 
                                      
                                 

சனி, 29 ஜனவரி, 2011

மனதோடுதான் நான் பேசுவேன்... - பகுதி 1

அன்பு நண்பர்களே !
                                இந்த நாள் வரை எனக்கு தெரிந்ததை, பார்த்ததை, பழகியதை, கேட்டதை, படித்ததை, அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை உங்களுடன் இந்த இணைய உலகில் பகிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மனதோடுதான் நான் பேசுவேன் இடுகை. மனிதர்கள் பலவிதம் மாற்றம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் மனித மனங்களைப் பற்றியும் அதன் பண்பாட்டு உட்கூறுகளைப் பற்றியும் விவரிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். காத்திருங்கள் எதிர்வரும் நாட்களில் உங்கள் மனதோடும் நான் பேசுவேன்......
                                 எந்த ஒரு நிகழ்வானாலும் அது இறைவணக்கத்தைக் கொண்டிருக்கும்.அதுபோல நானும் ஆரம்பிக்கிறேன். ஆன்மீகத்தையும் இயற்கையையும் இணைந்து பார்ப்பது நம் பண்பாட்டில் ஊறிவிட்டது அதுவே நிதர்சனமான உண்மையும் கூட இருந்தபோதிலும் சிலர் சொல்கிறார்கள் கடவுள் இல்லை என்பவர்களுக்கு போதிக்கவே இயற்கை சீற்றங்கள் வருகிறது இப்போதைய சூழ்நிலையில் நாஸ்திக வாதங்கள் தலை தூக்கி வருகிறது அதனால்தான் உயிர் பலிகள் அதிகரித்துவிட்டது என்கிறார்கள்.சரி பொதுவாக நம் பழக்கம்தான் என்ன? நமக்கு பாதிப்பு வந்தால் கடவுளிடம் அழுது புலம்புவது, இனிமேலாவது என்னை  காப்பாத்து என்று வேண்டிவிட்டு பழையபடி
அதே முட்டாள்தனத்தை தொடர்வது. ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டுவிட்டால் கடவுள் உன்னை காப்பாத்த வேண்டும் என்று என்ன சட்டமா?
                                   கடவுள் உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக காப்பாற்றவும் மாட்டார், போடாதவர்களை தண்டிக்கவும் மாட்டார்.
                                   நாம் என்ன செய்கிறோம்? " எல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்குவான் " அப்டின்னு யாரோ சொன்னத நம்பி நம்மள நாமே ஏமாத்திக்கறோம், கடவுளுக்கு அத பண்ணலாமா இத பண்ணலாமா? எத பண்ணினா கடவுள் சந்தோஷப்பாடுவாரு அப்டின்னு யோசிக்கறோம்.
                                   கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நம்மை இவ்வளவு சிறப்பாக படைத்திருக்கும் வேலையை செய்திருக்கிறாரே அது ஈடு செய்ய முடியாத சாதனை அல்லவா? அதை பயன்படுத்திக் கொண்டு நமக்குத் தேவையானவற்றை நாம்தானே தேடிக்கொள்ள வேண்டும். யாராவது எதையாவது சொல்லிவிட்டால் அவற்றை   கண்ணை   மூடிக்கொண்டு முட்டாள்தனமாக யோசிக்காமல் பின்பற்றுவது நம் பழக்கமாக இருக்கிறது.
                                    ஒரு கதை ஒரு ஆபீசில மூணு பேரு தினமும் ஒன்னாதான் மதியம் லஞ்ச் சாப்டுவாங்க. அதுல ஒருத்தர் சொன்னாரு " பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே புளியோதரைதான் நாளைக்கும் இதே புளியோதரை இருந்தா நான் என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னார்.
                                    அடுத்தவர் சொன்னாரு " அதே கதைதான் இங்கயும் பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே தயிர்சாதம்தான் நாளைக்கும் இதே  தயிர்சாதம் இருந்தா நானும் என் தலையை உடைச்சுக்குவேன். "
                                    அடுத்து நம்ம ஆளு சொல்றாரு " எனக்கும் அப்டித்தாங்க, பனிரெண்டு வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே இட்லிதான் நாளைக்கும் இதே  இட்லி  இருந்தா நானும் உங்களோட சேர்ந்து என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னு சொல்றாரு,
                                    அடுத்த நாளு பார்த்தா மூணு நண்பர்களின் டப்பாக்களிலும் உணவு மாறவில்லை வழக்கம்போல அதே புளியோதரை தயிர் சாதம் இட்லி தான். பாத்தாங்க மூணு பேரும் நல்ல பாறாங்கல்லா பாத்து தலையில முட்டி மண்டைய உடைச்சுக்கிட்டு மருத்துவமனையில போய் படுத்துகிட்டாங்க, மூணு பேரோட  மனைவியும் வந்தாங்க, ஒருத்தி " என் வீட்டுகாரரு இந்த அளவுக்கு  புளியோதரையை வெருத்திருப்பாருன்னு தெருஞ்சா நா வேற கொடுத்திருப்பனே ! " அப்டின்னு அழுதா, அடுத்தவள் " நானும் அது தெருஞ்சா இந்த தயிர் சாதத்த விட்டுட்டு வேற செய்து தந்திருப்பனே" அப்டின்னு சொன்னா
                                     அடுத்து நம்ம ஆளு மனைவி " இதுல தப்பு எங்க நடந்திருக்குன்னு தெரியல, கல்யாணமான நாளிலிருந்து தினமும் அவருக்கு தேவையானதை அவரே தான சமைச்சு எடுத்துட்டு வந்தாரு "
                                       நம்ம ஆளைப்போலதான் நாமும் நாம் விரித்தவலையில் நாமே மாட்டிக்கொள்கிறோம். ஆக நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.அது ஆன்மீகமாகட்டும் வேறு எந்த துறையாகட்டும் நமக்கு நாம்தான் நண்பனும் எதிரியும் என்பதை நினைவில் கொண்டு சரியான புரிதலுடன் வாழ்க்கையில் பயணிப்போம்.

டிஸ்கி :
                 பத்திரிகை உலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பதிவுலகில் பதிவரின் அனுமதி இல்லாமல் அவரின் படைப்பை திருடுவது என்பது பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை திருடும் செயலுக்கு ஒப்பானது. நாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு எப்படியோ தெரியாது, நாங்கள் எங்கள் குழந்தையைப் போல்தான் பாவிக்கின்றோம். ஆக அனுமதி இல்லாமல் எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்றும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

( இன்னும் பேசுவேன்........  )

வியாழன், 27 ஜனவரி, 2011

இன்றைய இளைஞன் - ( இதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )


சமூகத்தின் பிடிப்பற்ற தன்மையும் தூரநோக்கற்ற குறுகிய இலாப சிந்தையும் பலரிலும் மேலோங்கிக் காணப்படுவதனாலேயே இளைஞர் சமூகம் இன்றும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
எந்த வேளையிலும் பிறருக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இன மத மொழி பேதமின்றி சேவை வழங்க முன்வரும் வேளையில் நல்லதொரு எதிர்காலம் தானாக வந்தடைவதற்கு வழி கிடைக்கும். முதலில்  சோம்பேறித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும. அரசியல் இதற்க்கு சிறந்த வழி. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் இதற்க்கு தயங்குகிறது. ஏனென்றால் படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ ,அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். இப்போது    ஒரு சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா?  இதற்க்கு பதில் எனக்கு தெரியாது எனக்கேன் வம்பு.
  இளைஞர்கள் எதையும் சாதிக்கமுடியும். உலகில் 300 கோடி இளைஞர்கள், இந்தியாவில் 40 கோடி இளைஞர்கள் உள்ளனர். இளைய சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. புதியோர் உலகை படைப்பது இளைஞர்களின் கையில்தான் உள்ளது.
பெரியவர்கள் அமைதி கருத்தரங்கம் நடத்திவிட்டு பின் சண்டையிடலாம். ħ0;னால் இளையவர்கள் எல்லைகளைத்தாண்டி பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பவர்கள்.
நவீன தொழில்நுட்ப யுகம் நாடுகளைத்தாண்டி மனிதர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதம்,பிரிவினைவாதம்,போர்,தண்ணீர் பற்றாக்குறை, தட்பவெப்ப மாறுதல்,வறட்சி போன்றவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடவேண்டிய நிலையில் உள்ளோம்.மேலும்
மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி வறுமைதான். கொடிய ஆயுதங்களை விட வறுமையும் மிகவும் கொடியது. அணு ஆயுதம் அறவே இல்லாமல் அகற்றி இந்த பூமியை அமைதியின் மடியில் தவழவிடவேண்டும். வறுமை, அணு ஆயுதம் இல்லாத உலகை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.
வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான். ஆனால இந்த வரிகளை உணர்ந்தவர்களாக அத்தனை இளைஞர்களும்
உள்ளனரா? கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இந்த முரண்பாடு.
எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்.மகிழ்வாய் இருக்கவேண்டிய வயது என இளைஞர்கள் நினைக்க துவங்கி விட்டனர்.ஒருசிலர் மட்டுமே தங்கள் கடமை இது அல்ல என உணர்ந்து செயல் படுகின்றனர்.இதற்கு என்ன காரணம்.சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும். சரியாக சிந்திக்காத ஒன்றே இதற்கு காரணம் என்று.அதனால்
இளைஞர்கள் நல் எண்ணங்களை மேம்படுத்த வேண்டும் கட்டாயமாக.
 இளைஞர்கள் எந்தவொரு சமூகத்தினதும் மிகப் பெரும் பலமாக உள்ளனர். முழு மனித வாழ்விலும் இளமையே அதி முக்கியமான பருவமாகும். நண்பகலில் நடுவானில் தோன்றும் சூரியனின் ஒளிக் கதிர்கள் போன்று புதுமையும் சக்தியும் கொண்ட அவர்களே ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். இளைஞர்களைப் பயிற்றுவிப்பதிலும் பண்படுத்துவதிலுமே ஒரு சமூகத்தின் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது

                                    நம் நாட்டில் தற்போது நாம்  மிகப்பெரும் சவால்களை சந்திக்கத் தயாராகĬ7;க் கொண்டிருக்கிறோம். இதை எதிர்கொள்ள தொழில் நுட்ப அறிவு கொண்ட இளைஞர் சமுதாயம் அவசியம்.இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜூலியன் அசாங்கே ஒரு சில நாட்களிலேயே ħ3;லகத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர்.அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை மட்டும் பாருங்கள் எவ்வளவு பெரிய தொழில்நுட்பம், உலகில் உள்ள தலைகள் எல்லாம் எங்கே நம் weak கும் leak ஆகி விடுமோ என்று கலங்க வைத்தவர்.  அவரிடம் உள்ள ஒன்றுதிரட்டும் சக்தியை பாருங்கள். இதைப்போல நம் இளைய சமுதாயம் மாறவேண்டும்.இந்தியாவின் புதிய சரித்திரம் இளைங்கர்களின் கைகளில்தான் உள்ளது. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இவன்தான் இளைஞன் என்று உலகம் கொண்டாடவேண்டும்.என்று கூறி நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் நன்றி கூறி அமைகிறேன்.நன்றி வணக்கம்!    

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மனதைத் தொட்ட திரைப்படங்கள் - பகுதி 1

1. " Non ti Muovere  " - இத்தாலிய மொழிப்படம்.
                  






  நான் பார்த்த திரைப்படங்களிலேயே என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் ஒன்று.கதைப்படி ஒரு பணக்கார டாக்டர் தனது மகள்விபத்தில்அடிபட்டு மூளையில்அறுவை சிகிச்சை செய்யும்போது  வெளியே காத்திருக்கும் வேளையில், தன் ஆசைக்கு இணங்கி கர்ப்பமாக்கப் பட்டு வஞ்சிக்கப்பட்ட ஒரு அபலை சேரிப்பெண்ணின் வாழ்க்கையில் ,  தான் இருந்த நாட்களை நினைவு செய்து பார்ப்பது போல ஆரம்பிக்கிறது இந்த படம். சேரியில் வசிக்கும் பெண்ணாக Penélope Cruz . டாக்டராக செர்கியோ காஸ்டேல்லிட்டோ பின்னி பெடலேடுத்துவிட்டார். தற்போது வந்த  க்ராநிகில்ஸ் ஆப் நார்னியா படத்தில் வில்லன் கேரக்டரில் வருவாரே அவரேதான் . அதில் ஒரு காட்சி Cruz  கற்பப்பமாக இருப்பதை சோதிப்பார் டாக்டர் அந்த இடத்தில் இருவருமே அற்ப்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். சண்டை  வந்து பிரியும் போது கர்ப்பமானது கலைந்துவிட வேணும் என்று Cruz ஆடும் டான்ஸ் காட்சியின் முடிவில் கண்ணீர் வந்துவிடும். தான் பங்கேற்கும் ஒரு கான்பாரன்சிற்க்கு தன் மனைவி என்று அழைத்துப் போவார் அங்கே cruz இன் வெகுளித்தனமான நடிப்பிற்கு ஓர் சான்று அந்தக் காட்சிகள். எப்படியோ ஒரு நல்ல நெகிழ்வான படம் பார்த்த திருப்தியை தரும் படம் இது. ஆனால் இப்படம் வாழ்க்கையின் சாரத்தை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கு மட்டும்.

மீண்டும் மற்றுமொரு படத்துடன் சந்திப்போம். நன்றி. 

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இது எங்க வீட்டு கொலு....

தச மஹா வித்யா - 2

                                     நமது எண்ணங்களே நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. நான் நவராத்ரி, கொலு, தசமஹாவித்யா போன்ற விஷயங்களில் நான் கடந்த ஐந்தாறு நாட்களாக அறிவைப் பெற்று வருகின்றேன். என் இணைய தேடல்கள் பெரும்பாலும் இவற்றைப் பற்றித்தான் இருந்தன.நடைமுறையில் கூட வாழ்வியலில் கொலு பற்றிய அனுபவ அறிவு எனக்கு சிறிது ஏற்ப்பட்டது. அதன் விளைவுதான் கீழே நீங்கள் பார்க்கும் கொலு காட்சி.இது எங்க வீட்டு கொலு......


                                                  
                                                        














 அஷத்தோமா சத் க்ரமய !! 

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பெண்மையை போற்றுவோம் !

தச மஹா வித்யா

                        தயவு செய்து யாருப்பா அந்த வித்யா ன்னு கேட்டுடாதீங்க.இதுக்கு அர்த்தம் என்னான்னா, தசம் என்றால் பத்து அதாவது திசைகள் எட்டு மேலும் கீழும் இரண்டு ஆக மொத்தம் பத்து.இந்த பேரண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அதன் ஆக்க சக்தியும் பத்து விதமான நிலைகளில் இருக்கின்றது என்பது பொருள்.இந்த பிரபஞ்சம் நம் உடல் என்று பொருள் கொண்டால் அந்த பத்து விதமான சக்தியும் நம் உடலிலும் இருக்கும். அதனை வழிபடவே இந்த தசமஹா வித்யா என்னும் அறிவு பயன்படுகிறது.
                         இதன் காரணமாகத் தான் பெருமாள் பத்து அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார் என்று கூறுவார்கள். தச மகா வித்யா  என்ற இந்த பகுதியை விளக்க அற்பமான அடியேனால் முடியவே முடியாது. இதை விளங்கிக் கொள்வதற்கும் தகுதியை நம்மில் பலர் பெற்றிருக்கவில்லை.விரிவாக தெரிந்துகொள்ள இதே தளத்தில் உள்ள vedic eye என்ற இணைப்பை பார்வையிடவும்.
                           என் சிற்றறிவுக்கு எட்டியவரை சக்தி சொரூபமாகிய பெண்ணை போற்றும் ஒரு விழாவாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முழுவதும் பெண்களை மையமாக வைத்து அவர்களுடைய அறிவுத்திறனையும் கலை ஞானத்தையும்  மெய்ப்பிக்கும் விதமாக இப்பண்டிகை அமைந்துள்ளது. ஆடல் பாடல் சுவையான சுண்டல்  கொலு பொம்மைகளை அடுக்கும் நேர்த்தி என்று பெண்களின் மொத்த அறிவையும் இந்த விழாக்களில் காணலாம்.எது எப்படியோ இது போன்ற விழாக்கள் நடைபெறும் போதுதான் பரஸ்பரம் மனிதர்கள் கூடி தங்களுக்குள்ளான மனிதத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.முடிந்தவரை வீட்டிலேயே கொண்டாலாம் முடியவில்லை என்றால் அருகிலுள்ள கோவில்களில் கண்டிப்பாக கொலு வைத்திருப்பார்கள் அங்கே கலந்து கொள்ளலாம். அனைவரும் அன்னையின் அருள் பெற்று இன்புற்று வாழ்வோமாக !!
நவராத்திரி கொண்டாடுவோம் !                                பெண்மையை போற்றுவோம் !!        

திங்கள், 11 அக்டோபர், 2010

அப்பா !

அப்பா !
இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு
இன்று வரையில் தெரியாது !

கடந்துவிட்டன மூன்று வருடங்கள் நீங்கள் மறைந்து,
இன்றுதான் நினைக்கிறேன் உங்களைப் பற்றி எழுத,

உங்களுடன் பயணித்த 23 வருடங்களை மெல்ல அசைபோடுகிறேன்.....

கடைசி வரையிலும் யாருக்கும் தெரியாத உண்மை
நாமிருவரும் நேருக்கு நேராய் ஒரு நிமிடம் கூட பேசியது கிடையாது,
அது என்ன மரியாதையா ? பயமா? குரோதமா? தெரியாது!
ஆனால் நாம் அப்படித்தான் இருந்தோம்!

எனக்கு நன்றாய் நினைவிலிருக்கிறது...
என் குழந்தைப்பருவமும் நான் வளர்ந்ததும்
கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் தண்டிப்பு என்றுதான் இருந்தன

நான் ஆறாம் வகுப்பிலிருக்கும்போது உங்களை இதய நோய் ஆட்கொண்டது
அனைத்தையும் நிறுத்திவிட்டீர்கள் புகைப்பதைக் கூட- ஆனால்
உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் மறந்தேவிட்டீர்கள்.
அன்றிலிருந்தே எனக்கு உங்கள் மீது கோபம்தான்
எதற்க்கெடுத்தாலும் மோதிக்கொள்வோம் பரம வைரிகளாய் !

மேல்நிலை முடிந்து பட்டம் பயில உதகை சென்றேன்
என்னுடம் மூச்சு வாங்க மலை ஏறி வந்தீர்கள்
உங்கள் இதயம் பற்றி கவலைப்படாமல்,
அப்போது என் கல் நெஞ்சத்திலும் ஈரம் கசிந்தது உண்மை.



கோவையில் வேலை செய்தேன். சம்பளத்தை எப்போதாவது
வீட்டிற்கு கொடுப்பேன் அதையும் அம்மாவிடம்தான்
நான் எப்போதாவது உங்களுக்கு ஒரு நூறு ரூபாயை
தரும்போதெல்லாம் உங்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை உணர்ந்தும்
உணரமுடியாத பாவியாக இருந்தேன் அப்போது,


பின் சென்னையில் பிரபல மோட்டார் கம்பெனியில் வேலை
என்னைப் பார்க்க வந்த இரண்டு முறையும் உங்கள்
கண்களில் தெரிந்த பெருமையையும் ஆனந்தத்தையும் பிரமிப்பையும்
எடை போடத்தெரிந்த என்னால் உங்கள் மனதில் உள்ள பாசத்தை
எடை போட முடியவில்லை.


அப்பா ! நான் உங்களுக்காக மகன் என்ற முறையில் எதுவுமே செய்ததில்லை
ஆனால் நீங்கள் எனக்கு செய்த கடனை நான் எப்படி அடைப்பேன்?


அப்பா ! இப்போது உங்கள் தேவையை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன்
அதற்க்கான பக்குவமும் வயதும் புரிதலும் இப்போது என்னிடத்தில்
ஆனால் இதனைக் காண நீங்கள் இல்லையே ?


நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
உங்களின் அருமை உங்கள் மறைவிற்கு பின்தான் எனக்கும் தெரிந்தது,
நீங்கள் உலகத்தை அறிந்திருக்கவில்லைதான் ஆனால்
உலகம் உங்களை அறிந்து கொண்டததேன்னவோ உண்மைதான்,


அப்பா ! உங்கள் மரணப் படுக்கையில் கூட என்னால் உங்களுடன்
அதிக நேரம் இருக்க முடியவில்லை,


அப்பா ! உயிர் கொடுத்தீர்கள் உங்களை நேசிக்கும் உள்ளத்தை
ஏன் அப்போதே கொடுக்கவில்லை ?

உங்களைப் போலவே பாசத்தை மட்டுமல்ல எந்த உணர்ச்சிகளையும்
என்னால் நேரடியாக வெளிக்காட்ட முடியாதுதான்,

இப்போதும் சொல்கிறேன் நான் எரிமலை அல்ல
பாலைவனச்சோலை.....


அப்பா ! இதை எழுதுவது ஏதோ பக்கங்களை
நிரப்புவதற்காக அல்ல உங்களின் நினைவு முட்கள்
குத்திக் கிழித்த என் இதயத்தை குணப்படுத்த.....

- S -