சனி, 31 அக்டோபர், 2009

சிந்திக்க வைக்கும் விளம்பரம்....?

எப்பவுமே நம்ம இந்தியர்களின் மூளை அபாரமாக சிந்திக்கும் சக்தி உடையது என்பதை நாம் அறிவோம் ஆனால் அது சில நேரங்களிலே இப்படியும் சிந்தித்து உலக அளவில் நம்மை நகைப்புக்குள்ளாக்கிவிடும்  ஆற்றல் பெற்றது. எங்கிருந்துதான் இப்படி யோசனை வருதோ தெரியல! ரூம் போட்டு யோசிப்பாங்களோ?  

திங்கள், 12 அக்டோபர், 2009

நெஞ்சு பொருக்குதில்லையே !

                                     நேற்றைய செய்தித்த்தாளில் ஒரு செய்தி, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டுமாம், சொல்வது நமது மானமிகு தமிழக அரசியல்வாதிகள்.அடப்பாவிகளா ? ஏற்கனவே மைனாரிடிகள் என்று கூறிக் கொண்டு குறிப்பிட்ட சில மதத்தினர்கள் கொஞ்சம் இடஒதுக்கீட்டை பிடுங்கிக் கொள்கிறார்கள்.தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லி சிலர் பிடுங்குகிறார்கள். இன்னும் எவ்வளவோ பேர் என்னென்ன பெயரில் பிடுங்கிக்கொண்டுள்ளர்கள் என்று தெரியவில்லை இதில் இவர்களுக்கு வேறு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு பெருமை தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள். எந்த நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமம். கேட்டால் நமது ரத்தம் நமது இனம் உயிரைக் கொடுப்பேன் .....ரைக் கொடுப்பேன் என்று கதை வசனம் வேறு.
                                           சரி நமது இனம்தான், மொழிதான், ஆனால் நாடு வேறு ஆயிற்றே, என்று தமிழ் நாட்டைவிட்டு அங்கே சென்று வசித்தார்களோ அன்றிலிருந்து அது அவர்களுடைய நாடு. அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இங்கு வந்தார்கள் எனில் அவர்கள் அகதிகள் அதாவது நம் நாட்டு விருந்தினர்கள்.அகதிகளாக வாருங்கள் விருந்தினர்களாக இருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, இபோதுதான் அங்கு எல்லாம் முடிந்துவிட்டதே திரும்பிச் செல்லலாம் அல்லவா? முதலில் குடியுரிமை கேட்பார்கள் பின்பு இடஒதுக்கீடு,தனித் தொகுதி என்று லிஸ்ட் நீளும். அத்தனையும் செய்துவிட்டு அம்போ என்று இருக்கத்தானே வழிவகை செய்கிறார்கள். அரசியல் செய்யும் அன்பர்கள் முதலில் தமிழக தமிழர்களின் வாழ்க்கையை பாருங்கள் பிறகு இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்க்கலாம். அவனவன் அன்றாட மளிகைப் பொருட்களே கிடைக்காமல் விலைவாசி ஏற்றத்தால் திண்டாடுகின்றான். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு குடியுரிமை ஒரு கேடா?.                                               எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒரு அகதிகள் முகம் உள்ளது. அங்கு உள்ள அகதிகள் சிலர் சாலை மறியல் செய்து எங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி அரசுப் பேருந்துகளில் ஓட்டுனராக பணியிலமர்த்தப்பட வேண்டும் என்று போராடினார்களாம். தற்போது நம்மில் எத்தனை பேர் அப்பணியினைப் பெற போராடிக் கொண்டுள்ளனர் என்று நாடறியும். ஏற்கனவே காவிரியில் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று சிலையைத் திறந்து வைத்து மக்களை இனா வானா ஆக்கியது போதாதா? தன் சொந்த வீட்டில் வாய்க்கரிசி போட்டுவிட்டு, விருந்தாளிகளுக்கு உலை வைப்பது என்ன நியாயம். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் புண்ணியவான்களே ! முதலில் உங்கள் சொந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வளியுங்கள் பின்பு அடுத்தவன் வீட்டைப் பார்க்கலாம்.
                                  ( விடியோவிற்கான சுட்டி இங்கே பெண்கள் மற்றும் பலகீன மனம் உள்ளோர் பார்ப்பதைத் தவிர்க்கவும் ) இதைச் சொன்னால் அங்கு நடக்கும் அக்கிரமங்களை விடியோவாக்கிக்  காட்டுகிறார்கள். சரி அந்த விடியோவில் இருப்பது தமிழர்கள்தானா? அவர்கள் இலங்கை ரானுவத்தினர்தானா? அப்படியே இருந்தாலும் மறைவாக செய்யாமல் கேமராவை ஓடவிட்டு சுடுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியுமா உங்களால். போதுமய்யா தமிழ் தமிழ் என்று வாய்கிழியப் பேசிவிட்டு தன் வீட்டுப் பிள்ளைகளை டெல்லியில் ஹிந்தி பயில வைத்து நாடாளச் செய்து, தமிழ் நாட்டைப் பங்கு போட வைத்து, பதவி ஒதுக்கி பாங்கு செய்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கறை இல்லாத கர்ம வீரரையே குறை சொன்னபோதும் பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் இன்று வரை அறிவிலிகளாக பாமரர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததலிருந்து நாம் காந்தி பிறந்த மண்ணில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று சந்தேகமாக உள்ளது. தமிழ் வீரம் என்பது அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போராடுவதுதானா?
                                    இலங்கைத் தமிழர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்கள் சொந்த மண்ணில் வாழ்வதுதான் உங்களுக்குப் பெருமை, அங்கு அனைத்து உரிமைகளையும்  பாரபட்சமில்லாமல் பெறுவதுதான் உண்மையான வெற்றி. அதை விடுத்து இங்கே இருக்கும் அரசியல் தொழில் நடத்துபவர்களின் பேச்சைக் கேட்டீர்களானால்  ஏமாந்துதான் போவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நாளைக்கே உங்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் ஜாக்கிரதை! இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. எனது கோபமனைத்தும் தமிழ்நாட்டு அரசியல் ஜாம்பவான்களின் மீதுதான்.தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி பிழைப்பு நடத்தி லாபம் சம்பாதிக்கும் அவர்கள் சொந்த மண்ணிற்காக ஒன்றுமே செய்தது இல்லை. எங்கும் எப்போதும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம். யாருக்கும் தகுதிக் கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதில் ஊழல் இதில் ஊழல், வெட்டு குத்து கொலை, வன்முறை. முதலில் அனைவரும் இந்தியர்கள் பின்புதான்  தமிழர்கள் என்ற எண்ணமே இல்லை. அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்குக் காட்டும் பொய்யான அக்கறையை கொஞ்சம் தமிழகத்தின் மீது காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்.
                                              சரி இவர்கள் சொல்வது போல இரட்டைக் குடியுரிமை வழங்கிவிட்டோம் பின்பு இலங்கை அரசு இந்தியக் குடியுரிமை பெற்றவர்களின் இலங்கைக் குடியுரிமையை ரத்து செய்கிறோம் என்று சொன்னால் அகதிகளின் நிலை என்ன ? என்னதான் இருந்தாலும் தமது சொந்த மண்ணில் இருப்பதுபோல் வருமா?

டிஸ்கி :         இன்றைய சூழலில் இதைப் பற்றி துணிந்து எழுதிவிட்டேன். தவறுகள் இருப்பின் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இது என் கருத்து மட்டுமே. என் நிலை தெளிவு பெற்றபின் கருத்துகள் மாறலாம்.                                 

செவ்வாய், 6 அக்டோபர், 2009

மனித சஞ்சாரம் - 2

அன்பு நண்பர்களே!
                      இன்று நகரத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் என்னை கொடுத்து வைத்த கழுதை என்றே சொல்லவேண்டும். நான் பிறந்ததிலிருந்தே கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். நடுவில் சில காலம் ஊட்டி கோயம்புத்தூர் சென்னை என்று ஜாகை மாறினாலும் பிடித்தது என்னவோ கிராமம்தான்.
                       சிறிய வயதில் காடு கரை தோட்டம் தொறவு என நான் சுற்றாத இடமே இல்லை. அப்போதே எனக்கு மனித சஞ்சாரம் இல்லாத இடங்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் ஒரு ஞாயிற்றுக் கிழமை வெளியே செல்ல முடிவெடுத்தோம். ஊருக்கு வெளியே கீழ் பவானி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. அதனையும் தாண்டி சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் செல்ல நினைத்த இடத்தின் பெயர் "அல மேடு". ஏன் அல மேடு என பெயர் வந்தது என அப்போது தெரியவில்லை. அந்த இடத்தைப் பார்த்தீர்களானால் ஒரு சிறிய மலை போலான மேட்டுப் பகுதி அது ஒரு எழெட்டு குன்றுகளாய் அலை போல நீண்டிருக்கும். ஒரு வேளை  "அலை மேடு" என்பதுதான் மருவி அலமேடு ஆனதோ என்னவோ தெரியவில்லை..
                          எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று ஊர்களைத் தாண்டி பல தோட்டங்களைத் தாண்டி செல்ல வேண்டும். அந்த இடத்திற்குச் செல்ல இன்றும் பஸ் வசதி கிடையாது. முக்கியச் சாலையிலிருந்து ஏழெட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்தே செல்வோம் பேசிக்கொண்டே ஏதாவது சருகம் பழம், கள்ளிப் பழம், மாங்காய் என அங்கங்கு கிடைக்கும் பழங்களையெல்லாம் தின்று கொண்டே செல்வோம். அங்கு ஒரு இயற்கையாய் அமைந்த என்றைக்கும் வற்றாத சுனை உள்ளது. அதன் அருகிலேயே வன பத்ர காளியம்மன் எழுந்தருளி அருள் பாலித்து வனத்தை காத்து வருகிறாள். சற்று முன்னேறினால் மிகப் பெரிய பாறைகள் கொண்ட அக்குன்று நம் கவனத்தை ஈர்க்கும். அங்கு விஷத் தேள்களின் அபாயம் அதிகம் என்று சொன்னார்கள் என்று ஒரு பெரிய கல்லை உருட்டினேன். உண்மையிலேயே அபாயம்தான் கல்லுக்குள் இருந்து பல அளவுகளில் தேள்கள் குதிததோடின.
                        இரண்டு மூன்று வீடுகளே அந்த மேட்டின் அடிவாரத்தில் இருந்தது. அங்கு சென்றோம் அவர்கள் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கனிவுடன் உபசரித்து தெளுவு என்று சொல்லப்படும் பதநீர் அளித்தார்கள் வெயிலுக்கு இதமாய் இருந்தது. அவர்கள் இன்னொரு அபாயத்தையும் கூறினார்கள் மாலை, இரவு நேரங்களில் வங்கு நரிகள் வருமாம், ( வங்கு என்பது குகை ( கேவ் ) வடிவிலான சிறிய குழி ) அவற்றை சமாளிக்கவே வேட்டை நாய்களை வளர்த்து வருவதாக கூறினார்கள். சற்று மிரட்சியுடன் நன்றி சொல்லி வெளியேறினோம்.
                          இங்கு வன பத்ர காளியம்மன் கோவில் பற்றி முதலில் சொன்னேன் அல்லவா?. அங்கு ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். அப்போது பெருவாரியான உள்ளூர் மக்கள் அங்கு சென்று வழிபட்டு வருவார்கள். அங்கு நடைபெறும் அன்னதானம் மக்களை பெரிதும் கவர்ந்தது ஆகும். கிடாய் வெட்டி கறிக் குழம்புடன் சாப்பாடு காலையிலிருந்து மாலை வரை அனைவருக்கும் உண்டு. அதுவும் சற்று வித்தியாசமாய், அதாவது சாப்பிடுவதற்கு தரையில் குழி பறித்து அதில் சேம்பை இலை எனப்படும் ஒரு வகை இலையை வைத்து அதில்தான் சாப்பாடு பரிமாறுவார்கள்.
                            இப்போதும் இங்கு திருவிழா தவிர்த்து மனித சஞ்சாரம் அற்ற நாட்களில்  செல்ல ஆசை உண்டு . அதற்க்கு நேரம் இல்லை அப்படியே இருந்தாலும் துணைக்கு வர யாரும் முன்வருவதில்லை  அப்படியே வந்தாலும் சின்ன வயதில் சென்றால் தப்பாய் எடுத்துக்கொள்ளாத இச்சமூகம் இப்போது அந்த மாதிரியான  ஆள்அரவமற்ற இடத்திற்கு சென்றால் ஏதோ தவறான செயலைச் செய்யப் போவது போல சந்தேகக்கனைகளைத் தொடுக்கும். ஆசைகள் இருந்தாலும் மனதில் வைத்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.                                   
                    

திங்கள், 5 அக்டோபர், 2009

இதுவும் நடந்தது.

                             புறநகர்ப் பகுதிகளில் எங்கு நோக்கினும் பசுமை, ஆல் இந்தியா ரேடியோவின் மாநிலச் செய்தியறிக்கை,.... டி டி பைவ் இல் வெள்ளிக் கிழமைகளில் ஒளியும் ஒலியும்,ஞாயிற்றுக் கிழமைகளில் மாலைத் திரைப்படம், வயலும் வாழ்வும்,திரை மாலை,ஊமைச் செய்தி, மாநில மொழித்திரைப்படம்,..... பஜாஜ் ஸ்கூட்டர், சேர சோழ பாண்டிய பல்லவ அண்ணா ஜீவா போக்குவரத்துக் கழகங்கள்,..... விறகடுப்பு,கோபர் காஸ்,... ட்ரங்க் கால், டெலி கிராம், மாட்டுவண்டி, பூப்பறிக்கும் திருவிழா, ஒலி நாடா, வி சி ஆர் கேசட், டென்ட் கொட்டாய், இவையெல்லாம் இருந்த தமிழ் நாட்டில்தான் நாம் வாழ்ந்தோம் தெரியுமா? இப்போதுள்ள இளைய தலைமுறையினர்க்கு இவையெல்லாம் என்னவென்று புரியுமா?                

சனி, 3 அக்டோபர், 2009

தண்டோரா

டும் ! டும் !! டும் !!! இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்,இதுவரை தி சைலன்ட் தண்டர் என்ற தலைப்பின் கீழ் இயங்கிவந்த எனது தளம் இன்று முதல் விசித்ரமித்ரன் என்ற தலைப்பில் மலரும், அது சமயம் ஆங்காங்கே ஆன்லைனில் பொட்டி தட்டும் பெரிய சாமிகள் வந்து பாத்து படிச்சு பொழுத போக்குங்க முடுஞ்சா யோசிங்க சாமியோவ்.......... டும் ! டும் !! டும் !!!  

டிஸ்கி :     விசித்திர = வித்யாசமான
                   மித்திரன் = நண்பன்

வியாழன், 1 அக்டோபர், 2009

இதுவும் நடந்துகொண்டிருக்கிறது

நன்றி : சந்தையில் லோகியம் விற்பவர் மற்றும் மாண்புமிகு.துணை முதல்வர் அவர்கள்.
                                    அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! கழக ஆட்சியிலே ஏழைகளின் பசிப் பிணியைப் போக்க முதல்வர் அளித்த அருமையான திட்டம் ஒரு ருபாய் அரிசித் திட்டம். ஆம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்தியிலே கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்திய அரசுக்கு கடிதம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரியில் தண்ணீர் பெற்றே தீருவோம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எடியூரப்பா எனது நண்பர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! பெங்களூரில் திருவள்ளுவர் சிலை சென்னையில் சர்வஞர் சிலை ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரிப் பிரச்சனை தீர்ந்தது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மானங்கெட்ட தமிழர்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஹொகனக்கல் கோவிந்தா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அம்மையார் ஆட்சியிலே நடக்கலையா? ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! தேர்தலா ? அத ஸ்பெக்ட்ரம் பாத்துக்கும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! குடும்ப சமாதானம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எல்லாருக்கும் ஹல்வா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மறவாதீர்கள் மறந்தும் இரவாதீர்கள்! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஆகவே, உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! வாங்க சார் வாங்க சார் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அண்ணனுக்கு வழி விடுங்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா!........................

டிஸ்கி :          யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! என்ற வார்த்தையை துணை முதல்வர் அவர்கள் சற்று அதிகமாகவே உபயோகித்தார். அதையும் சந்தையில் லேகியம் விற்பவர் பேசுவதும் ஒன்று போலவே எனக்குப் பட்டது. அதை இங்கே சொல்லி இருக்கிறேன் அவ்வளவே! இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே! கழகக் கண்மணிகள் கண்ணில் பட்டால் ( படாது, இந்த அளவிற்க்கு மண்டையில ஏது நமக்கு ? ) மன்னிக்கவும்.                                         

இதுவும் நடக்கலாம்

காலம்தான் போய்கொண்டிருக்கிறது விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் இதுவும் நடக்கலாம்.
 
ஜானகி : என்னடி உன் பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கீங்கலாமே! மாப்ள வீட்ல வசதி எப்படி? எவ்ளோ நகை போடுறீங்க?
மைதிலி : ஆமான்டி ரொம்ப பெரிய இடம் மாசம் கால் கிலோ துவரம் பருப்பு சமையலுக்கு ஆகுதுன்னா பாத்துக்கோயேன்! நாங்க இருபது கிராம் வெள்ளி போடப்போறோம்.