திங்கள், 12 அக்டோபர், 2009

நெஞ்சு பொருக்குதில்லையே !

                                     நேற்றைய செய்தித்த்தாளில் ஒரு செய்தி, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டுமாம், சொல்வது நமது மானமிகு தமிழக அரசியல்வாதிகள்.அடப்பாவிகளா ? ஏற்கனவே மைனாரிடிகள் என்று கூறிக் கொண்டு குறிப்பிட்ட சில மதத்தினர்கள் கொஞ்சம் இடஒதுக்கீட்டை பிடுங்கிக் கொள்கிறார்கள்.தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லி சிலர் பிடுங்குகிறார்கள். இன்னும் எவ்வளவோ பேர் என்னென்ன பெயரில் பிடுங்கிக்கொண்டுள்ளர்கள் என்று தெரியவில்லை இதில் இவர்களுக்கு வேறு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு பெருமை தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள். எந்த நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமம். கேட்டால் நமது ரத்தம் நமது இனம் உயிரைக் கொடுப்பேன் .....ரைக் கொடுப்பேன் என்று கதை வசனம் வேறு.
                                           சரி நமது இனம்தான், மொழிதான், ஆனால் நாடு வேறு ஆயிற்றே, என்று தமிழ் நாட்டைவிட்டு அங்கே சென்று வசித்தார்களோ அன்றிலிருந்து அது அவர்களுடைய நாடு. அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இங்கு வந்தார்கள் எனில் அவர்கள் அகதிகள் அதாவது நம் நாட்டு விருந்தினர்கள்.அகதிகளாக வாருங்கள் விருந்தினர்களாக இருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, இபோதுதான் அங்கு எல்லாம் முடிந்துவிட்டதே திரும்பிச் செல்லலாம் அல்லவா? முதலில் குடியுரிமை கேட்பார்கள் பின்பு இடஒதுக்கீடு,தனித் தொகுதி என்று லிஸ்ட் நீளும். அத்தனையும் செய்துவிட்டு அம்போ என்று இருக்கத்தானே வழிவகை செய்கிறார்கள். அரசியல் செய்யும் அன்பர்கள் முதலில் தமிழக தமிழர்களின் வாழ்க்கையை பாருங்கள் பிறகு இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்க்கலாம். அவனவன் அன்றாட மளிகைப் பொருட்களே கிடைக்காமல் விலைவாசி ஏற்றத்தால் திண்டாடுகின்றான். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு குடியுரிமை ஒரு கேடா?.                                               எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒரு அகதிகள் முகம் உள்ளது. அங்கு உள்ள அகதிகள் சிலர் சாலை மறியல் செய்து எங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி அரசுப் பேருந்துகளில் ஓட்டுனராக பணியிலமர்த்தப்பட வேண்டும் என்று போராடினார்களாம். தற்போது நம்மில் எத்தனை பேர் அப்பணியினைப் பெற போராடிக் கொண்டுள்ளனர் என்று நாடறியும். ஏற்கனவே காவிரியில் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று சிலையைத் திறந்து வைத்து மக்களை இனா வானா ஆக்கியது போதாதா? தன் சொந்த வீட்டில் வாய்க்கரிசி போட்டுவிட்டு, விருந்தாளிகளுக்கு உலை வைப்பது என்ன நியாயம். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் புண்ணியவான்களே ! முதலில் உங்கள் சொந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வளியுங்கள் பின்பு அடுத்தவன் வீட்டைப் பார்க்கலாம்.
                                  ( விடியோவிற்கான சுட்டி இங்கே பெண்கள் மற்றும் பலகீன மனம் உள்ளோர் பார்ப்பதைத் தவிர்க்கவும் ) இதைச் சொன்னால் அங்கு நடக்கும் அக்கிரமங்களை விடியோவாக்கிக்  காட்டுகிறார்கள். சரி அந்த விடியோவில் இருப்பது தமிழர்கள்தானா? அவர்கள் இலங்கை ரானுவத்தினர்தானா? அப்படியே இருந்தாலும் மறைவாக செய்யாமல் கேமராவை ஓடவிட்டு சுடுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியுமா உங்களால். போதுமய்யா தமிழ் தமிழ் என்று வாய்கிழியப் பேசிவிட்டு தன் வீட்டுப் பிள்ளைகளை டெல்லியில் ஹிந்தி பயில வைத்து நாடாளச் செய்து, தமிழ் நாட்டைப் பங்கு போட வைத்து, பதவி ஒதுக்கி பாங்கு செய்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கறை இல்லாத கர்ம வீரரையே குறை சொன்னபோதும் பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் இன்று வரை அறிவிலிகளாக பாமரர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததலிருந்து நாம் காந்தி பிறந்த மண்ணில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று சந்தேகமாக உள்ளது. தமிழ் வீரம் என்பது அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போராடுவதுதானா?
                                    இலங்கைத் தமிழர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்கள் சொந்த மண்ணில் வாழ்வதுதான் உங்களுக்குப் பெருமை, அங்கு அனைத்து உரிமைகளையும்  பாரபட்சமில்லாமல் பெறுவதுதான் உண்மையான வெற்றி. அதை விடுத்து இங்கே இருக்கும் அரசியல் தொழில் நடத்துபவர்களின் பேச்சைக் கேட்டீர்களானால்  ஏமாந்துதான் போவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நாளைக்கே உங்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் ஜாக்கிரதை! இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. எனது கோபமனைத்தும் தமிழ்நாட்டு அரசியல் ஜாம்பவான்களின் மீதுதான்.தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி பிழைப்பு நடத்தி லாபம் சம்பாதிக்கும் அவர்கள் சொந்த மண்ணிற்காக ஒன்றுமே செய்தது இல்லை. எங்கும் எப்போதும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம். யாருக்கும் தகுதிக் கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதில் ஊழல் இதில் ஊழல், வெட்டு குத்து கொலை, வன்முறை. முதலில் அனைவரும் இந்தியர்கள் பின்புதான்  தமிழர்கள் என்ற எண்ணமே இல்லை. அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்குக் காட்டும் பொய்யான அக்கறையை கொஞ்சம் தமிழகத்தின் மீது காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்.
                                              சரி இவர்கள் சொல்வது போல இரட்டைக் குடியுரிமை வழங்கிவிட்டோம் பின்பு இலங்கை அரசு இந்தியக் குடியுரிமை பெற்றவர்களின் இலங்கைக் குடியுரிமையை ரத்து செய்கிறோம் என்று சொன்னால் அகதிகளின் நிலை என்ன ? என்னதான் இருந்தாலும் தமது சொந்த மண்ணில் இருப்பதுபோல் வருமா?

டிஸ்கி :         இன்றைய சூழலில் இதைப் பற்றி துணிந்து எழுதிவிட்டேன். தவறுகள் இருப்பின் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இது என் கருத்து மட்டுமே. என் நிலை தெளிவு பெற்றபின் கருத்துகள் மாறலாம்.