செவ்வாய், 6 அக்டோபர், 2009

மனித சஞ்சாரம் - 2

அன்பு நண்பர்களே!
                      இன்று நகரத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் என்னை கொடுத்து வைத்த கழுதை என்றே சொல்லவேண்டும். நான் பிறந்ததிலிருந்தே கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். நடுவில் சில காலம் ஊட்டி கோயம்புத்தூர் சென்னை என்று ஜாகை மாறினாலும் பிடித்தது என்னவோ கிராமம்தான்.
                       சிறிய வயதில் காடு கரை தோட்டம் தொறவு என நான் சுற்றாத இடமே இல்லை. அப்போதே எனக்கு மனித சஞ்சாரம் இல்லாத இடங்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் ஒரு ஞாயிற்றுக் கிழமை வெளியே செல்ல முடிவெடுத்தோம். ஊருக்கு வெளியே கீழ் பவானி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. அதனையும் தாண்டி சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் செல்ல நினைத்த இடத்தின் பெயர் "அல மேடு". ஏன் அல மேடு என பெயர் வந்தது என அப்போது தெரியவில்லை. அந்த இடத்தைப் பார்த்தீர்களானால் ஒரு சிறிய மலை போலான மேட்டுப் பகுதி அது ஒரு எழெட்டு குன்றுகளாய் அலை போல நீண்டிருக்கும். ஒரு வேளை  "அலை மேடு" என்பதுதான் மருவி அலமேடு ஆனதோ என்னவோ தெரியவில்லை..
                          எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று ஊர்களைத் தாண்டி பல தோட்டங்களைத் தாண்டி செல்ல வேண்டும். அந்த இடத்திற்குச் செல்ல இன்றும் பஸ் வசதி கிடையாது. முக்கியச் சாலையிலிருந்து ஏழெட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்தே செல்வோம் பேசிக்கொண்டே ஏதாவது சருகம் பழம், கள்ளிப் பழம், மாங்காய் என அங்கங்கு கிடைக்கும் பழங்களையெல்லாம் தின்று கொண்டே செல்வோம். அங்கு ஒரு இயற்கையாய் அமைந்த என்றைக்கும் வற்றாத சுனை உள்ளது. அதன் அருகிலேயே வன பத்ர காளியம்மன் எழுந்தருளி அருள் பாலித்து வனத்தை காத்து வருகிறாள். சற்று முன்னேறினால் மிகப் பெரிய பாறைகள் கொண்ட அக்குன்று நம் கவனத்தை ஈர்க்கும். அங்கு விஷத் தேள்களின் அபாயம் அதிகம் என்று சொன்னார்கள் என்று ஒரு பெரிய கல்லை உருட்டினேன். உண்மையிலேயே அபாயம்தான் கல்லுக்குள் இருந்து பல அளவுகளில் தேள்கள் குதிததோடின.
                        இரண்டு மூன்று வீடுகளே அந்த மேட்டின் அடிவாரத்தில் இருந்தது. அங்கு சென்றோம் அவர்கள் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கனிவுடன் உபசரித்து தெளுவு என்று சொல்லப்படும் பதநீர் அளித்தார்கள் வெயிலுக்கு இதமாய் இருந்தது. அவர்கள் இன்னொரு அபாயத்தையும் கூறினார்கள் மாலை, இரவு நேரங்களில் வங்கு நரிகள் வருமாம், ( வங்கு என்பது குகை ( கேவ் ) வடிவிலான சிறிய குழி ) அவற்றை சமாளிக்கவே வேட்டை நாய்களை வளர்த்து வருவதாக கூறினார்கள். சற்று மிரட்சியுடன் நன்றி சொல்லி வெளியேறினோம்.
                          இங்கு வன பத்ர காளியம்மன் கோவில் பற்றி முதலில் சொன்னேன் அல்லவா?. அங்கு ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். அப்போது பெருவாரியான உள்ளூர் மக்கள் அங்கு சென்று வழிபட்டு வருவார்கள். அங்கு நடைபெறும் அன்னதானம் மக்களை பெரிதும் கவர்ந்தது ஆகும். கிடாய் வெட்டி கறிக் குழம்புடன் சாப்பாடு காலையிலிருந்து மாலை வரை அனைவருக்கும் உண்டு. அதுவும் சற்று வித்தியாசமாய், அதாவது சாப்பிடுவதற்கு தரையில் குழி பறித்து அதில் சேம்பை இலை எனப்படும் ஒரு வகை இலையை வைத்து அதில்தான் சாப்பாடு பரிமாறுவார்கள்.
                            இப்போதும் இங்கு திருவிழா தவிர்த்து மனித சஞ்சாரம் அற்ற நாட்களில்  செல்ல ஆசை உண்டு . அதற்க்கு நேரம் இல்லை அப்படியே இருந்தாலும் துணைக்கு வர யாரும் முன்வருவதில்லை  அப்படியே வந்தாலும் சின்ன வயதில் சென்றால் தப்பாய் எடுத்துக்கொள்ளாத இச்சமூகம் இப்போது அந்த மாதிரியான  ஆள்அரவமற்ற இடத்திற்கு சென்றால் ஏதோ தவறான செயலைச் செய்யப் போவது போல சந்தேகக்கனைகளைத் தொடுக்கும். ஆசைகள் இருந்தாலும் மனதில் வைத்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.