ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இது எங்க வீட்டு கொலு....

தச மஹா வித்யா - 2

                                     நமது எண்ணங்களே நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. நான் நவராத்ரி, கொலு, தசமஹாவித்யா போன்ற விஷயங்களில் நான் கடந்த ஐந்தாறு நாட்களாக அறிவைப் பெற்று வருகின்றேன். என் இணைய தேடல்கள் பெரும்பாலும் இவற்றைப் பற்றித்தான் இருந்தன.நடைமுறையில் கூட வாழ்வியலில் கொலு பற்றிய அனுபவ அறிவு எனக்கு சிறிது ஏற்ப்பட்டது. அதன் விளைவுதான் கீழே நீங்கள் பார்க்கும் கொலு காட்சி.இது எங்க வீட்டு கொலு......


                                                  
                                                        


 அஷத்தோமா சத் க்ரமய !! 

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பெண்மையை போற்றுவோம் !

தச மஹா வித்யா

                        தயவு செய்து யாருப்பா அந்த வித்யா ன்னு கேட்டுடாதீங்க.இதுக்கு அர்த்தம் என்னான்னா, தசம் என்றால் பத்து அதாவது திசைகள் எட்டு மேலும் கீழும் இரண்டு ஆக மொத்தம் பத்து.இந்த பேரண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அதன் ஆக்க சக்தியும் பத்து விதமான நிலைகளில் இருக்கின்றது என்பது பொருள்.இந்த பிரபஞ்சம் நம் உடல் என்று பொருள் கொண்டால் அந்த பத்து விதமான சக்தியும் நம் உடலிலும் இருக்கும். அதனை வழிபடவே இந்த தசமஹா வித்யா என்னும் அறிவு பயன்படுகிறது.
                         இதன் காரணமாகத் தான் பெருமாள் பத்து அவதாரங்கள் எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார் என்று கூறுவார்கள். தச மகா வித்யா  என்ற இந்த பகுதியை விளக்க அற்பமான அடியேனால் முடியவே முடியாது. இதை விளங்கிக் கொள்வதற்கும் தகுதியை நம்மில் பலர் பெற்றிருக்கவில்லை.விரிவாக தெரிந்துகொள்ள இதே தளத்தில் உள்ள vedic eye என்ற இணைப்பை பார்வையிடவும்.
                           என் சிற்றறிவுக்கு எட்டியவரை சக்தி சொரூபமாகிய பெண்ணை போற்றும் ஒரு விழாவாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. முழுவதும் பெண்களை மையமாக வைத்து அவர்களுடைய அறிவுத்திறனையும் கலை ஞானத்தையும்  மெய்ப்பிக்கும் விதமாக இப்பண்டிகை அமைந்துள்ளது. ஆடல் பாடல் சுவையான சுண்டல்  கொலு பொம்மைகளை அடுக்கும் நேர்த்தி என்று பெண்களின் மொத்த அறிவையும் இந்த விழாக்களில் காணலாம்.எது எப்படியோ இது போன்ற விழாக்கள் நடைபெறும் போதுதான் பரஸ்பரம் மனிதர்கள் கூடி தங்களுக்குள்ளான மனிதத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.முடிந்தவரை வீட்டிலேயே கொண்டாலாம் முடியவில்லை என்றால் அருகிலுள்ள கோவில்களில் கண்டிப்பாக கொலு வைத்திருப்பார்கள் அங்கே கலந்து கொள்ளலாம். அனைவரும் அன்னையின் அருள் பெற்று இன்புற்று வாழ்வோமாக !!
நவராத்திரி கொண்டாடுவோம் !                                பெண்மையை போற்றுவோம் !!        

திங்கள், 11 அக்டோபர், 2010

அப்பா !

அப்பா !
இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு
இன்று வரையில் தெரியாது !

கடந்துவிட்டன மூன்று வருடங்கள் நீங்கள் மறைந்து,
இன்றுதான் நினைக்கிறேன் உங்களைப் பற்றி எழுத,

உங்களுடன் பயணித்த 23 வருடங்களை மெல்ல அசைபோடுகிறேன்.....

கடைசி வரையிலும் யாருக்கும் தெரியாத உண்மை
நாமிருவரும் நேருக்கு நேராய் ஒரு நிமிடம் கூட பேசியது கிடையாது,
அது என்ன மரியாதையா ? பயமா? குரோதமா? தெரியாது!
ஆனால் நாம் அப்படித்தான் இருந்தோம்!

எனக்கு நன்றாய் நினைவிலிருக்கிறது...
என் குழந்தைப்பருவமும் நான் வளர்ந்ததும்
கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் தண்டிப்பு என்றுதான் இருந்தன

நான் ஆறாம் வகுப்பிலிருக்கும்போது உங்களை இதய நோய் ஆட்கொண்டது
அனைத்தையும் நிறுத்திவிட்டீர்கள் புகைப்பதைக் கூட- ஆனால்
உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் மறந்தேவிட்டீர்கள்.
அன்றிலிருந்தே எனக்கு உங்கள் மீது கோபம்தான்
எதற்க்கெடுத்தாலும் மோதிக்கொள்வோம் பரம வைரிகளாய் !

மேல்நிலை முடிந்து பட்டம் பயில உதகை சென்றேன்
என்னுடம் மூச்சு வாங்க மலை ஏறி வந்தீர்கள்
உங்கள் இதயம் பற்றி கவலைப்படாமல்,
அப்போது என் கல் நெஞ்சத்திலும் ஈரம் கசிந்தது உண்மை.கோவையில் வேலை செய்தேன். சம்பளத்தை எப்போதாவது
வீட்டிற்கு கொடுப்பேன் அதையும் அம்மாவிடம்தான்
நான் எப்போதாவது உங்களுக்கு ஒரு நூறு ரூபாயை
தரும்போதெல்லாம் உங்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை உணர்ந்தும்
உணரமுடியாத பாவியாக இருந்தேன் அப்போது,


பின் சென்னையில் பிரபல மோட்டார் கம்பெனியில் வேலை
என்னைப் பார்க்க வந்த இரண்டு முறையும் உங்கள்
கண்களில் தெரிந்த பெருமையையும் ஆனந்தத்தையும் பிரமிப்பையும்
எடை போடத்தெரிந்த என்னால் உங்கள் மனதில் உள்ள பாசத்தை
எடை போட முடியவில்லை.


அப்பா ! நான் உங்களுக்காக மகன் என்ற முறையில் எதுவுமே செய்ததில்லை
ஆனால் நீங்கள் எனக்கு செய்த கடனை நான் எப்படி அடைப்பேன்?


அப்பா ! இப்போது உங்கள் தேவையை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன்
அதற்க்கான பக்குவமும் வயதும் புரிதலும் இப்போது என்னிடத்தில்
ஆனால் இதனைக் காண நீங்கள் இல்லையே ?


நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
உங்களின் அருமை உங்கள் மறைவிற்கு பின்தான் எனக்கும் தெரிந்தது,
நீங்கள் உலகத்தை அறிந்திருக்கவில்லைதான் ஆனால்
உலகம் உங்களை அறிந்து கொண்டததேன்னவோ உண்மைதான்,


அப்பா ! உங்கள் மரணப் படுக்கையில் கூட என்னால் உங்களுடன்
அதிக நேரம் இருக்க முடியவில்லை,


அப்பா ! உயிர் கொடுத்தீர்கள் உங்களை நேசிக்கும் உள்ளத்தை
ஏன் அப்போதே கொடுக்கவில்லை ?

உங்களைப் போலவே பாசத்தை மட்டுமல்ல எந்த உணர்ச்சிகளையும்
என்னால் நேரடியாக வெளிக்காட்ட முடியாதுதான்,

இப்போதும் சொல்கிறேன் நான் எரிமலை அல்ல
பாலைவனச்சோலை.....


அப்பா ! இதை எழுதுவது ஏதோ பக்கங்களை
நிரப்புவதற்காக அல்ல உங்களின் நினைவு முட்கள்
குத்திக் கிழித்த என் இதயத்தை குணப்படுத்த.....

- S -

திங்கள், 4 அக்டோபர், 2010

ஊழலின் மறுபெயர் இந்தியா....

                                                                         கடந்த நூற்றாண்டுகளில் மக்களாட்சி நாடுகளில் அரசியல்வாதிகளின் ஊழல் மிகப்பெரிய விஷயமாகி பல தேர்தல்களில் அப்படிப்பட்டவர்களைக் களைந்துவிட்டு நல்லவர்களை நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. இந்தியாவில் மட்டும் ஆளும்கட்சி ஊழல்   அரசியல்வாதிகளைப் பற்றி எதிர்கட்சியினர் வாய்கிழியப் பேசிவிட்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இவர்களும் ஊழலில் ஈடுபடுகிறார்கள் எனும் நிலைமை உருவானது.
                                                                             கடந்த காலங்களில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளால் ஊழலில் ஈடுபட முடியாதபடி கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.நாளடைவில் பொறுப்பான அதிகாரிகளை இடமாறுதல் செய்து ஆளும்கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு ஊழலில் ஈடுபடத்துவங்கினர். இந்த சூழ்நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஊழல்களில் பாதிக்கப்பட்டன.
                                                                               நாம் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.அரசியல் கட்சிகள் இல்லாமல் நாடாளமன்ற மக்களாட்சி கிடையாது. அதனால்தான் வெளி நாடுகளில் ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகமான வேலையும் முக்கியத்துவமும் ஏற்ப்படும். நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இது புரியவே புரியாது.          
                                                                               பாராளமன்றம் செனட் போன்ற மன்றங்களில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசின் நடவடிக்கைகளை கவனமுடன் ஆராந்து விமர்சனங்களை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.இதனை ஆளும்கட்சி கவனமுடன் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இதில் சரியாக செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் தோல்வி உறுதி.என்கின்ற சூழ்நிலை ஐரோப்பாவின் பலநாடுகளிலும் உண்டு.
                                                                                  ஆனால் சென்ற சில ஆண்டுகளாக "உலகெங்கும் காணாத வகையில் பணம் எண்ணும் வஸ்த்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதை இந்தியா மண்ணில் காண்பதாக " உலகின் பல அரசியல் விமர்சனர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது பணம் இல்லாமல் தேர்தல்களில் யாராலும் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது.அதிலும் பணம் செலவழித்து தேர்தலில் வென்ற பின்னர் அதை திரும்ப எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி உள்ளதாக அவர்கள் கூற தொடங்கி உள்ளனர்.
                                                                                      அதாவது மேலே கூறிய விஷயங்களின் அடிப்படையில் " பணம் படைத்தவர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் தேர்ந்தெடுக்கப் படுவது நியாயம்தான் " என்று கட்சிகள் நினைக்கின்றன. அதை ஆமோதிக்கும் வகையில் மக்கள் தாங்கள் ஓட்டளிக்கும் போது வேட்பாளர்களிடம் பணத்தை எதிபார்க்கிறார்கள்.
                                                                                        எனவே ஊழல் நிறைந்த அரசியலமைப்பில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதும் பொதுத் தேர்தல்கள் தவறான அரசியல்வாதிகளைக் களைஎடுக்குமா என்பதும் விடை தெரியாத கேள்விகளாகி நம்மை பயமுறுத்துகின்றன.