திங்கள், 11 அக்டோபர், 2010

அப்பா !

அப்பா !
இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு
இன்று வரையில் தெரியாது !

கடந்துவிட்டன மூன்று வருடங்கள் நீங்கள் மறைந்து,
இன்றுதான் நினைக்கிறேன் உங்களைப் பற்றி எழுத,

உங்களுடன் பயணித்த 23 வருடங்களை மெல்ல அசைபோடுகிறேன்.....

கடைசி வரையிலும் யாருக்கும் தெரியாத உண்மை
நாமிருவரும் நேருக்கு நேராய் ஒரு நிமிடம் கூட பேசியது கிடையாது,
அது என்ன மரியாதையா ? பயமா? குரோதமா? தெரியாது!
ஆனால் நாம் அப்படித்தான் இருந்தோம்!

எனக்கு நன்றாய் நினைவிலிருக்கிறது...
என் குழந்தைப்பருவமும் நான் வளர்ந்ததும்
கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் தண்டிப்பு என்றுதான் இருந்தன

நான் ஆறாம் வகுப்பிலிருக்கும்போது உங்களை இதய நோய் ஆட்கொண்டது
அனைத்தையும் நிறுத்திவிட்டீர்கள் புகைப்பதைக் கூட- ஆனால்
உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் மறந்தேவிட்டீர்கள்.
அன்றிலிருந்தே எனக்கு உங்கள் மீது கோபம்தான்
எதற்க்கெடுத்தாலும் மோதிக்கொள்வோம் பரம வைரிகளாய் !

மேல்நிலை முடிந்து பட்டம் பயில உதகை சென்றேன்
என்னுடம் மூச்சு வாங்க மலை ஏறி வந்தீர்கள்
உங்கள் இதயம் பற்றி கவலைப்படாமல்,
அப்போது என் கல் நெஞ்சத்திலும் ஈரம் கசிந்தது உண்மை.கோவையில் வேலை செய்தேன். சம்பளத்தை எப்போதாவது
வீட்டிற்கு கொடுப்பேன் அதையும் அம்மாவிடம்தான்
நான் எப்போதாவது உங்களுக்கு ஒரு நூறு ரூபாயை
தரும்போதெல்லாம் உங்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை உணர்ந்தும்
உணரமுடியாத பாவியாக இருந்தேன் அப்போது,


பின் சென்னையில் பிரபல மோட்டார் கம்பெனியில் வேலை
என்னைப் பார்க்க வந்த இரண்டு முறையும் உங்கள்
கண்களில் தெரிந்த பெருமையையும் ஆனந்தத்தையும் பிரமிப்பையும்
எடை போடத்தெரிந்த என்னால் உங்கள் மனதில் உள்ள பாசத்தை
எடை போட முடியவில்லை.


அப்பா ! நான் உங்களுக்காக மகன் என்ற முறையில் எதுவுமே செய்ததில்லை
ஆனால் நீங்கள் எனக்கு செய்த கடனை நான் எப்படி அடைப்பேன்?


அப்பா ! இப்போது உங்கள் தேவையை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன்
அதற்க்கான பக்குவமும் வயதும் புரிதலும் இப்போது என்னிடத்தில்
ஆனால் இதனைக் காண நீங்கள் இல்லையே ?


நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
உங்களின் அருமை உங்கள் மறைவிற்கு பின்தான் எனக்கும் தெரிந்தது,
நீங்கள் உலகத்தை அறிந்திருக்கவில்லைதான் ஆனால்
உலகம் உங்களை அறிந்து கொண்டததேன்னவோ உண்மைதான்,


அப்பா ! உங்கள் மரணப் படுக்கையில் கூட என்னால் உங்களுடன்
அதிக நேரம் இருக்க முடியவில்லை,


அப்பா ! உயிர் கொடுத்தீர்கள் உங்களை நேசிக்கும் உள்ளத்தை
ஏன் அப்போதே கொடுக்கவில்லை ?

உங்களைப் போலவே பாசத்தை மட்டுமல்ல எந்த உணர்ச்சிகளையும்
என்னால் நேரடியாக வெளிக்காட்ட முடியாதுதான்,

இப்போதும் சொல்கிறேன் நான் எரிமலை அல்ல
பாலைவனச்சோலை.....


அப்பா ! இதை எழுதுவது ஏதோ பக்கங்களை
நிரப்புவதற்காக அல்ல உங்களின் நினைவு முட்கள்
குத்திக் கிழித்த என் இதயத்தை குணப்படுத்த.....

- S -