திங்கள், 4 அக்டோபர், 2010

ஊழலின் மறுபெயர் இந்தியா....

                                                                         கடந்த நூற்றாண்டுகளில் மக்களாட்சி நாடுகளில் அரசியல்வாதிகளின் ஊழல் மிகப்பெரிய விஷயமாகி பல தேர்தல்களில் அப்படிப்பட்டவர்களைக் களைந்துவிட்டு நல்லவர்களை நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. இந்தியாவில் மட்டும் ஆளும்கட்சி ஊழல்   அரசியல்வாதிகளைப் பற்றி எதிர்கட்சியினர் வாய்கிழியப் பேசிவிட்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இவர்களும் ஊழலில் ஈடுபடுகிறார்கள் எனும் நிலைமை உருவானது.
                                                                             கடந்த காலங்களில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளால் ஊழலில் ஈடுபட முடியாதபடி கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.நாளடைவில் பொறுப்பான அதிகாரிகளை இடமாறுதல் செய்து ஆளும்கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு ஊழலில் ஈடுபடத்துவங்கினர். இந்த சூழ்நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஊழல்களில் பாதிக்கப்பட்டன.
                                                                               நாம் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.அரசியல் கட்சிகள் இல்லாமல் நாடாளமன்ற மக்களாட்சி கிடையாது. அதனால்தான் வெளி நாடுகளில் ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகமான வேலையும் முக்கியத்துவமும் ஏற்ப்படும். நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இது புரியவே புரியாது.          
                                                                               பாராளமன்றம் செனட் போன்ற மன்றங்களில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசின் நடவடிக்கைகளை கவனமுடன் ஆராந்து விமர்சனங்களை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.இதனை ஆளும்கட்சி கவனமுடன் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இதில் சரியாக செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் தோல்வி உறுதி.என்கின்ற சூழ்நிலை ஐரோப்பாவின் பலநாடுகளிலும் உண்டு.
                                                                                  ஆனால் சென்ற சில ஆண்டுகளாக "உலகெங்கும் காணாத வகையில் பணம் எண்ணும் வஸ்த்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதை இந்தியா மண்ணில் காண்பதாக " உலகின் பல அரசியல் விமர்சனர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது பணம் இல்லாமல் தேர்தல்களில் யாராலும் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது.அதிலும் பணம் செலவழித்து தேர்தலில் வென்ற பின்னர் அதை திரும்ப எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி உள்ளதாக அவர்கள் கூற தொடங்கி உள்ளனர்.
                                                                                      அதாவது மேலே கூறிய விஷயங்களின் அடிப்படையில் " பணம் படைத்தவர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் தேர்ந்தெடுக்கப் படுவது நியாயம்தான் " என்று கட்சிகள் நினைக்கின்றன. அதை ஆமோதிக்கும் வகையில் மக்கள் தாங்கள் ஓட்டளிக்கும் போது வேட்பாளர்களிடம் பணத்தை எதிபார்க்கிறார்கள்.
                                                                                        எனவே ஊழல் நிறைந்த அரசியலமைப்பில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதும் பொதுத் தேர்தல்கள் தவறான அரசியல்வாதிகளைக் களைஎடுக்குமா என்பதும் விடை தெரியாத கேள்விகளாகி நம்மை பயமுறுத்துகின்றன.