வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மனதோடுதான் நான் பேசுவேன்...- பகுதி - 2

இன்றைய இளைய சமுதாயம்.

அன்பு நண்பர்களே !
                                     இன்றைய நவீன உலகில் இளைய சமுதாயம் முன்னேறியுள்ளதா ? அல்லது சீரழிந்துவிட்டதா ? என்று கேட்டால் நாம் இரண்டுவிதமான பதிலைக் கூற வேண்டியதிருக்கும். அறிவுசார் துறைகள்,விஞ்ஞானம் போன்றவைகளில் கண்டிப்பாக இளைஞர்களின் பங்கு அபரிதமான நிலையில் உள்ளது. ஆனால் நம் நாட்டின் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் மிகவும் சீரழிந்துவிட்டது என்பது கசப்பான உண்மையே ! நானும் ஒரு இளைஞன் என்ற முறையில் காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் 2000  வது ஆண்டிலிருந்தே இந்த புரட்சி ராக்கெட் வேகத்தில் பயணித்தது எனலாம். பொறியியல் படித்துவிட்டு அரசாங்கவேலைக்கு மனுப்போட்ட காலம் போய் அமெரிக்காவிற்க்கு விசா வாங்கும் காலம் மாறியது.அதுவும் இந்த கணிப்பொறி காலம் வந்தபிறகு வெள்ளைக்காரன் கொடுக்கும் அரைச் சம்பளத்திர்க்கு மாவரைக்கும் கால் சென்டர் வேலையும், மென்பொருள் துறையும் இங்கேயே நமது நாட்டிலேயே பரவத் தொடங்கின. இவர்கள் வந்தது யாருக்கு லாபம் என்றால், பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கும், அங்கு சில்லறை வியாபாரம் செய்பவர்களுக்கும் மட்டும்தான் ஏனென்றால் வெளிநாட்டின் அரைச் சம்பளம் நமக்கு பொக்கிஷம் போல இருக்கிறது.இதை செய்த புண்ணியவான்கள் இன்னொன்றையும் செய்தார்கள் அதுதான் கலாச்சார சீரழிவு. அதற்க்கு இவர்கள் மட்டுமே காரணம் என்று நான் சொல்லவில்லை. இவர்களும் முக்கிய காரணம் என்று சொல்கிறேன்.
                                    வாழ்க்கைக்கு தேவையான ஊதியத்தை விட பலமடங்கு கிடைத்ததாலும் பணி செய்யும் சூழ்நிலை மாற்றத்தாலும் யாரும் அறியாமலேயே இவர்களுக்குள் கலாச்சார மாற்ற புற்றுநோய் அதீதமாக பரவத் தொடங்கியது. இந்த மாற்றம் ஒருவகையில் உலகளாவிய மனித சமுதாயம் என்னும் உயர்ந்த பண்பை தோற்றுவித்தாலும், இந்தியக் கலாச்சாரம் என்னும் முறை அழிய காரணமாகவும் உள்ளது.  
                                      பணிபுரியும் சூழல் மிகுந்த மனச்சோர்வை ஏற்ப்படுத்துவதாலும் மிதமிஞ்சிய பணப்புழக்கத்தாலும் இவர்கள் மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை ஏற்ப்படுத்தும் வழியை நாடவேண்டியுள்ளது. அதன் விளைவுதான் பெருநகரங்களில் இருக்கும் பப், டேட்டிங்,டிஸ்கோதே போன்ற மகோன்னதமான விளைவுகள். நான் ஏன் மகோன்னதம் என்று சொல்கிறேன் என்றால் இவை அனைத்தும் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதியான பழக்கங்கள்.அவர்கள் இந்த மாதிரியான பழக்கங்கள் ஏன் கொண்டுள்ளார்கள் என்றால் சீதோஷ்ண நிலை சார்ந்த இயற்க்கை சமன்பாடுகளை நிலைப்படுத்தத்தான். அது எப்படி என்று பார்க்கப் போனால் நான் உங்களுக்கு ஒரு மானுடவியல் வகுப்பு எடுக்கவேண்டியதிருக்கும், அதை பின்னர் பார்க்கலாம்.  
                                   இப்போது நான் ஒன்று சொல்கிறேன், தங்களை புத்திசாலிகள் என்று எண்ணிக்கொள்வது இவர்களின் தலையாய கடைமைகளில் ஒன்று. சரி நீங்கள் சிட்டியில் வளர்ந்துவிட்டீர்கள்,மிக சாளரமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,கம்ப்யூட்டர் போன்ற சில உபகரணங்களை இயக்கத் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இதனாலெல்லாம் நீங்கள் புத்திசாலி ஆகிவிட்டதாக அர்த்தமா ?
                                      உங்களைப்போன்ற ஒரு நகரத்து இளைஞன் தனது கிராமத்து ஆசிரியருடன் பிரயாணம் மேற்கொண்டான்.இந்த இளைஞன் தனது உலக ஞானத்தை தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பினான். அதற்காக பார்க்கும் விஷயத்தை எல்லாம் பயங்கரமாக விளக்கிக்கொண்டிருந்தான். இரவு வேளை வந்தது கூடாரம் அமைத்துக் கொண்டு இருவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள் நடுஇரவில் திடீரென்று இளைங்கனுக்கு விழிப்பு வந்தது, ஆசிரியரை எழுப்பினான்.
                                      " ஐயா மேலே பாருங்கள் என்ன தெரிகிறது ?"
                                      " நட்சத்திரங்கள் " என்றார் ஆசிரியர்.தூக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலுடன்.
                                      " ஐயா அப்படி அலட்சியமாக சொல்லாதீர்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகின்றன என்று தெரிந்து நான் இரவில்கூட திசைகளை அறிந்துகொள்ளலாம்." என்று இளைஞன் தனக்கு தெரிந்த நட்சத்திர விசயங்களை எல்லாம் பெருமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
                                        ஆசிரியர் அவனை நிறுத்தினார்.
                                         " உனக்கு வேறு என்னென்னவோ தெரிகிறது.எனக்குப் புரிவது ஒன்றே ஒன்றுதான்.வானமே தெரிகிறது என்றால்,நம் கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்."
                                         அவர்களைப்போன்றவர்கள் பள்ளியில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள். மற்ற சிலர் வாழ்க்கையில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள்.


                                                                                     ( இன்னும் பேசுவேன்.....)