புதன், 5 ஆகஸ்ட், 2015

கானல் நீர் - அத்யாயம் 2


August 2, 2015 at 8:28pm
தாராபுரத்திலிருந்து பஸ் வெளியேறி அமராவதி ஆற்றுப்பாலத்தைக் கடந்து பைபாஸைத் தொட்ட போது மீண்டும் நினைவில் மூழ்கினான் ரகு.
தான் திருமணமாகிவிட்டவன் என்று சொன்னவுடன் ஒரு பிரளயத்தை எதிர் பார்த்திருந்தான் ஆனால் சீதா அவனை ஆழமாக கண்களால் ஊடுவிக்கொண்டிருந்தாள். முகத்தில் ஏதும் இல்லாத வெறுமையை கொண்டவளாக அதேநேரம் என்னவென்று அறிய இயலாத முக பாவத்தை பதிலாகக் காட்டினாள் சீதா.
" சீதா...! நான் உன்கிட்ட இதை நான் முன்னாடியே சொல்லிருக்கனும் பட் நேர்ல சொல்லிடலாம்னுதான் வெயிட் பண்ணினேன். நம்ம ஆபீஸ்ல எம் டியை தவிர இது யாருக்கும் தெரியாது. ஆனால் கட்டிக்க போற உன் கிட்ட இத மறைக்க சத்தியமா நான் விரும்பல.. ரொம்ப டீப்பா இன்னும் நாம பழக ஆரம்பிக்கல. இப்ப நினச்சாகூட நாம பிரிஞ்சிடலாம்.பாதிப்பு அதிகம் இருக்காது. நாம பழக ஆரம்பிச்சதிலிருந்து இத எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு என் மனசு எவ்வளவு பாடுபட்டுச்சு தெரியுமா.? . ஐயம் வெரி சாரி சீதா.... ஆனா என்னோட மேரேஜ் லைப் ரொம்ப பரிதாபமானதுப்பா... அதோட ஆயுள் வெறும் ரெண்டு நாட்கள் தான். " என்று மடை திறந்த வெள்ளமாய் ரகு மனதில் உள்ளதை கொட்டிவிட இப்போது வரை இருவரின் கைகளும் பற்றிக்கொண்டிருந்ததை சீதாவின் மௌனத்தினால் ரகு சற்றே தளர்த்தி விடுபட எத்தனிக்க,
" இறந்துட்டாங்களாப்பா...? " என்ற சீதாவின் கேள்வியும் விடுபட்ட ரகுவின் கையை எடுத்து சீதா தன் மடிமீது வைத்துக்கொண்டதும் ரகுவிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
" இல்லப்பா... அந்த பொண்ணு மனநி.... வேண்டாம் சீதா. நான் அந்த கசப்பான நாட்களை உன்கூட இருக்கும் போது நினைச்சு பார்க்க கூட விரும்பலப்பா... பட் ஒவ்வொரு ஆணும் எவ்வளவு கனவுகளோட தன்னோட கல்யாண வாழ்க்கைக்குள் நுழைவான் தெரியுமா.? அந்த கனவுகள் எல்லாம் என் லைப்ல முதல் நாளே சுக்கு நூறாகிப்போய்டுச்சு சீதா... ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன் அந்த பிரிவுல என் தப்பு ஒரு துளிதுளிகூட இல்ல இது எல்லாருக்கும் தெரியும் .கல்யாணம் ஆகாததுக்கு முன்னாள் எப்படி இருந்தனோ அதே மாதிரிதான் இப்ப உன் முன்னாடி நிக்கறேன். கல்யாணம் ஆனவன்ங்கனற பேர தவிர... " என்று சொல்லி சீதாவின் பதிலை எதிர்பார்த்து முகத்தை உற்று நோக்க.. தன் மடியில் வைத்த ரகுவின் கையை எடுத்து விட்டு தூரத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் பார்வையைச் செலுத்தினாள் சீதா.
" என்ன சீதா.... இப்ப எப்படி இவன விட்டு விலகறதுன்னு யோசிக்கறியா.? கொஞ்சம் அவசரப்பட்டு இவன்கிட்ட மாட்டிகிட்டோமேன்னு வருத்தப்படுறியா.? எதுவாயிருந்தாலும் சொல்லிடு சீதா நான் இப்போ எல்லாதுக்கும் தயாராகத்தா இருக்கறேன். நீ வேணான்னு சொல்லிட்டா என்ன ஒரு ரெண்டு மாசம் தாடி வளர்த்துட்டு திரிவேன். அவ்ளோதான் அப்புறம் எல்லாம் சரி ஆகிடும். ஆனா இந்த ஆபீஸ்ல இருந்து ரிசைன் பண்ணிடுவேன். ஏன்னா உன்ன பார்க்கும்போது எல்லாம் இந்த குற்ற உணர்ச்சி என்ன கொன்னுடும்பா.... ப்ளீஸ் சீதா ஏதாவது சொல்லுப்பா..." என்ற ரகுவின் கைகள் சீதாவின் தோள்களைப் பற்றின...
எங்கோ பதிந்த பார்வையை திருப்பிய சீதா தன் எதிரே அமர்ந்திருந்த ரகுவின் அருகில் சென்று அவன் வலக்கையை தன் இடக்கையில் பற்றியபடி அமர்ந்து அவனது தோள்களில் தன் தலையை சாய்த்தாள்.
ரகுவிற்கு அவர்களது காதல் முடிவு பெறவில்லை சீதாவிற்கு தன்மீது கோபமில்லை என்றும் தெளிவாக தெரிந்தது.. இருந்தாலும் அதை அவள் வார்த்தைகளில் வெளிக்கொணர முற்பட்டான் ரகு.
" சொல்லு சீதா இந்த தப்புக்கு நீ எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன். " என்ற ரகு சீதாவிடமிருந்து பிரிந்து அவள் முன்பிருந்த இடத்தில் அமர்ந்தான்.
தொடுவானத்தை நோக்கிய பார்வையுடன் சீதா,
"ரகு....! அந்த இன்டிபென்டன்ஸ் டே மெசேஜ் வர்ரதுக்கு முன்னாடிவரை நான் உங்களை சகஜமாகதான் பார்த்தேன். உங்க அமைதி, பொண்ணுங்ககிட்ட பழகறவிதம், இதெல்லாம் மேலோட்டமா என்னை இம்ப்ரஸ் பண்ணிணாலும் நாம போன்ல பேச ஆரம்பிச்சுதுக்கு அப்றமாதான் தெரிஞ்சுது நான் விரும்பிய கேரக்டர் நீங்கதான்னு.. கெட்ட பழக்கம் ஏதும் இல்லாதது, கண்ணிய குறைவா பேசாததுன்னு ஒரு க்ளீன் இமேஜை என் மனசுல ஆழமா பதியவச்சுடீங்க, எனக்கே தெரியாம நான் உங்கள நேசிக்க ஆரம்பிச்சேன். என்ன மாயமோ மந்திரமோ தெரியல நீங்க கேட்டதும் நான் சம்மதிச்சேன். ஆனா அது என் முழு மனப்பூர்வமான சம்மதம்.என் வாழ்க்கைல நீங்க மட்டும்தான்னு நான் தீர்க்கமா எடுத்த முடிவு. என் முடிவு எப்பவும் சரியானதாத்தான் இருக்கும். உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு ரகு. இப்ப கூட உனக்கு இஷ்டமில்லைனா பிரிஞ்சுடலாங்கற அந்த மனசு யாருக்கு வரும். உங்கள நான் இழந்தால் என் உயிரையே இழக்கற மாதிரி ரகு. நீங்க பேசு சீதா ன்னு சொல்றப்போ கூட இந்த மேட்டர வீட்ல எப்படி சமாளிக்க ன்னு யோசிச்சிட்டு இருந்தனே தவிர.. விலகறத பத்தி இல்ல.. வாட்டெவர் இட் ஈஸ் ஜஸ்ட் லீவிட் டியர் லைக்க பாசிங் க்ளௌட். உங்களுக்கு நான் இருக்கறேன் ரகு. இனி உங்க விஷயம் பத்தி எப்பவும் நானும் பேசமாட்டேன் நீங்களும் பேசாதீங்க. இந்த விஷயத்த நீங்க சொல்லாத போது எப்படி நான் இருந்தனோ அப்படியேதான் இப்பவும் இருக்கு சோ உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வர வேண்டாம். ஐ லவ் யூ சோ மச் ரகு பார் எவர்... " என்று கூறி இதழோர புன்னகையுடன் முடித்தாள் சீதா.
" சீதா....! " என்று கூவியபடி தான் இருப்பது பொது இடம் என்பதையும் மறந்து கண்களில் நீர் திரள சீதாவைக் கட்டிக்கொண்டான் ரகு. ஆனால் அந்த அரவணைப்பு என்பது வழிதெரியா ஆட்டுக்குட்டி மேய்ப்பவனிடம் கிடைத்தபோது அது கொண்ட அரவணைப்பு, பாறையிடுக்கில் சிக்கிய மரக்கிளை அருவி வழிவீழ்ந்து ஆற்றில் கலந்த போது ஆற்றின் மீது மரக்கிளை கொண்ட அரவணைப்பு, போன்றது என்று ரகுவிற்கு மட்டுமே தெரியும்.
" ஏங்க... ரகு... இங்க பாருங்க.... என்ன சின்ன குழந்தையாட்டம் அழுதுட்டு... " என்றபடி அணைத்துக்கொண்டிருந்தவனை விடுவித்து தன் மடியில் கிடத்தி கண்ணீரை தனது கைக்குட்டையால் துடைத்தாள் சீதா.
கிட்டதட்ட ஒரு மணிநேரம் இப்படியே நகர, ரகுவின் தலையை கோதியபடி இருந்த சீதாவின் அன்பு தந்த அச்சுகத்தில் அகநானூற்றுத் தலைவன் தலைவி காதல் முதல் ஆர்யா அனுஷ்கா காதல் வரை எங்கெல்லாமோ சென்றுவந்தான் ரகு. இனிதே அந்த நாளை முடித்து தங்கள் காதல் வரலாற்றில் வண்ணங்களாய் அலங்கரிக்க இருவரும் இணைந்து போட்டோ எடுக்கவும் தவறவில்லை ஆனால் அதுவே பின்னாளில் ஓர் விவாதப் பொருளாய் மாறும் என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை. ஆபீஸில் இருவருடைய விஷயமும் கண்டிப்பாக யாருக்கும் தெரியக்கூடாது என்ற சங்கல்பத்துடன் அணைப் பூங்காவிலிந்து வெளியேறினார்கள்.
இப்படியாக நாளொரு மொபைலும் பொழுதொரு பூங்காவுமாக சந்திப்புக்களும் பேச்சுக்களும் தொடர்ந்தன.
ஒரு சந்திப்பில்,
" உங்க வீட்ல நம்ம மேரேஜ் க்கு ஓகே சொல்லிடுவாங்கதான சீதா"
" கண்டிப்பா நடக்காது பட் எனக்கு இருக்கற நம்பிக்கை எல்லாம் எங்க அப்பா மட்டும் தான் அவர் என் விருப்பத்துக்கு எதிரா எதும் செய்யமாட்டாருப்பா... பட் முதல் அக்கா தீபலட்சுமியும் மச்சானும் கண்டிப்பாக ஒத்துக்க மாட்டாங்க... இரண்டாவது அக்கா ஹேம லட்சுமி ஓகே சொல்லுவா ஆனா மச்சான் கூட அவ பயங்கரமா சண்டை போடறா பாவம் அவங்க குழந்தை ஷாலினி... இதெல்லாம் விட நீங்க என் அத்தை பையன் மூர்த்தியை சமாளிக்கனும் அவன் என்னை ஸ்கூல்ல கிண்டல் பண்ணியவங்களை எல்லாம் இப்ப ஊர் ஊரா விரட்டிட்டு போய் கைகால முறிக்கறான்... என்ன மாப்பு இதுக்கே தலைய சுத்துதா.? "
" அம்மா தாயே உன் அம்மாவாவது நம்ம சப்போர்ட் பண்ணுவாங்களா.? "
" ஹே ஹேய்... அவங்க போனவாரம் ஒரு பொண்ணுக்கு செய்வினை வச்சு அவ லவ்வரயே மறக்க வச்சுட்டாகல்ல... "
" பாத்து சீதா உங்கம்மா உனக்கே பாயசத்த போட்ற போறாங்க"
ஆக தங்களது காதல் தெரிந்தால் சீதா குடும்பத்தினரே எதிர்ப்பார்கள் என்றும்... சீதாவை எப்போது வேண்டுமென்றாலும் தூக்கிப்போய் அத்தைமகன் மூர்த்தி மணம் செய்ய வாய்ப்புள்ளது என்றும்... சீதா தென் மாவட்டங்களில் அதீத செல்வாக்கு பெற்ற இனத்தை சார்ந்த பெண்சிங்கம் என்றும் தெரிந்தாலும் தான் சீதாவின் மேல் கொண்ட அளவற்ற காதலாலும், பாசத்தாலும் எதையும் சமாளிக்கத் துணிகிறான் ரகு.
இடையே ஒவ்வொரு சந்திப்பின் போதும் இவர்களது அன்யோன்யம் கூடிக்கொண்டு செல்வதை ரகு தன் டைரிக்குறிப்பாக வடிக்கிறான் ரகு....
அன்றொரு நாள்....
இளவேனிற்காலத்து அந்திமாலை நேரம்....
சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடுகிறது.....
அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் அருகே நீ.....
அதிகாலை நேரத்து பனித்துளியாய் உன் ஸ்பரிசம்...
ஜன்னல் ஓரத்துக் காட்சிகளாய் நினைவுகள் பயணிக்கிறது.....
இருவரின் கண்களும் சங்கமிக்கிறது ஸ்பஷ்டமாக....
கைகள் மலர்க் கொடி போல பின்னிக் கொண்டன.....
இருவரின் உயிரும் கண்களின் வழியே கூடுவிட்டு கூடுபாய தொடங்கியது.....
உயிரே உணர்விற்குள் கலந்துவிட்ட போது இதழ்கள் மட்டும் ஏமாந்துவிடுமா?....
- ரகு ராமன் தேடிய சீதைக்காக....
ரகு.
இவர்களது இனிய சந்திப்புக்களை இனிதே பதிவு செய்தது இருவரின் மொபைல்களும்...இப்படியாக வளர்ந்தது இவர்களின் காதல்.
ஒருநாள், ஆபீஸிற்கு வந்ததும் சீதாவைத் தேடுகிறான் ரகு காலையில் எப்போதும் சீதைவை போனில் எழுப்புவது ரகுவின் வழக்கம். இன்று காலை போன் எடுக்கவேயில்லை நேற்று இரவு பத்து மணிக்கே பேசி முடித்துவிட்டோம். என்னாச்சு ன்னு தெரியலையே என்று புலம்பியவன் சீதாவின் தோழி வனிதாவிடம் எதேச்சையாக விசாரிப்பது போல் விசாரிக்கும்போது சீதா நேற்று இரவு பதினோறு மணிக்கே கிளம்பி ஊருக்கு சென்றுவிட்டதாகதெரிகிறது.. ரகு குழப்பத்தில் ஆழ்ந்தவனாக மீண்டும் மீண்டும் போனில் முயற்சிக்கிறான் சிறிது நேரத்தில் போன் சுவிட்ச் ஆப் செய்துவிட்டதை அன்பாக அறிவிக்கிறது பெண்குரல். ரகுவின் மனம் முழுவதும் சீதா நினைவுகள் ஓட, மாலைவரை காத்திருந்து மாலை போனில் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் ரிங் போகிறது........
" பஸ் பத்து நிமிஷந்தாங்க நிற்கும் சாப்பிடறவங்க சீக்கிரம் சாப்பிட்டு வாங்க....." பஸ் வாடிப்பட்டி பிரிவிற்கு அருகே உள்ள மோட்டலில் நிற்கிறது மணி 8:45AM.
(தொடரும்....)