சனி, 29 ஜனவரி, 2011

மனதோடுதான் நான் பேசுவேன்... - பகுதி 1

அன்பு நண்பர்களே !
                                இந்த நாள் வரை எனக்கு தெரிந்ததை, பார்த்ததை, பழகியதை, கேட்டதை, படித்ததை, அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை உங்களுடன் இந்த இணைய உலகில் பகிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மனதோடுதான் நான் பேசுவேன் இடுகை. மனிதர்கள் பலவிதம் மாற்றம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் மனித மனங்களைப் பற்றியும் அதன் பண்பாட்டு உட்கூறுகளைப் பற்றியும் விவரிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். காத்திருங்கள் எதிர்வரும் நாட்களில் உங்கள் மனதோடும் நான் பேசுவேன்......
                                 எந்த ஒரு நிகழ்வானாலும் அது இறைவணக்கத்தைக் கொண்டிருக்கும்.அதுபோல நானும் ஆரம்பிக்கிறேன். ஆன்மீகத்தையும் இயற்கையையும் இணைந்து பார்ப்பது நம் பண்பாட்டில் ஊறிவிட்டது அதுவே நிதர்சனமான உண்மையும் கூட இருந்தபோதிலும் சிலர் சொல்கிறார்கள் கடவுள் இல்லை என்பவர்களுக்கு போதிக்கவே இயற்கை சீற்றங்கள் வருகிறது இப்போதைய சூழ்நிலையில் நாஸ்திக வாதங்கள் தலை தூக்கி வருகிறது அதனால்தான் உயிர் பலிகள் அதிகரித்துவிட்டது என்கிறார்கள்.சரி பொதுவாக நம் பழக்கம்தான் என்ன? நமக்கு பாதிப்பு வந்தால் கடவுளிடம் அழுது புலம்புவது, இனிமேலாவது என்னை  காப்பாத்து என்று வேண்டிவிட்டு பழையபடி
அதே முட்டாள்தனத்தை தொடர்வது. ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டுவிட்டால் கடவுள் உன்னை காப்பாத்த வேண்டும் என்று என்ன சட்டமா?
                                   கடவுள் உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக காப்பாற்றவும் மாட்டார், போடாதவர்களை தண்டிக்கவும் மாட்டார்.
                                   நாம் என்ன செய்கிறோம்? " எல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்குவான் " அப்டின்னு யாரோ சொன்னத நம்பி நம்மள நாமே ஏமாத்திக்கறோம், கடவுளுக்கு அத பண்ணலாமா இத பண்ணலாமா? எத பண்ணினா கடவுள் சந்தோஷப்பாடுவாரு அப்டின்னு யோசிக்கறோம்.
                                   கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நம்மை இவ்வளவு சிறப்பாக படைத்திருக்கும் வேலையை செய்திருக்கிறாரே அது ஈடு செய்ய முடியாத சாதனை அல்லவா? அதை பயன்படுத்திக் கொண்டு நமக்குத் தேவையானவற்றை நாம்தானே தேடிக்கொள்ள வேண்டும். யாராவது எதையாவது சொல்லிவிட்டால் அவற்றை   கண்ணை   மூடிக்கொண்டு முட்டாள்தனமாக யோசிக்காமல் பின்பற்றுவது நம் பழக்கமாக இருக்கிறது.
                                    ஒரு கதை ஒரு ஆபீசில மூணு பேரு தினமும் ஒன்னாதான் மதியம் லஞ்ச் சாப்டுவாங்க. அதுல ஒருத்தர் சொன்னாரு " பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே புளியோதரைதான் நாளைக்கும் இதே புளியோதரை இருந்தா நான் என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னார்.
                                    அடுத்தவர் சொன்னாரு " அதே கதைதான் இங்கயும் பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே தயிர்சாதம்தான் நாளைக்கும் இதே  தயிர்சாதம் இருந்தா நானும் என் தலையை உடைச்சுக்குவேன். "
                                    அடுத்து நம்ம ஆளு சொல்றாரு " எனக்கும் அப்டித்தாங்க, பனிரெண்டு வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே இட்லிதான் நாளைக்கும் இதே  இட்லி  இருந்தா நானும் உங்களோட சேர்ந்து என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னு சொல்றாரு,
                                    அடுத்த நாளு பார்த்தா மூணு நண்பர்களின் டப்பாக்களிலும் உணவு மாறவில்லை வழக்கம்போல அதே புளியோதரை தயிர் சாதம் இட்லி தான். பாத்தாங்க மூணு பேரும் நல்ல பாறாங்கல்லா பாத்து தலையில முட்டி மண்டைய உடைச்சுக்கிட்டு மருத்துவமனையில போய் படுத்துகிட்டாங்க, மூணு பேரோட  மனைவியும் வந்தாங்க, ஒருத்தி " என் வீட்டுகாரரு இந்த அளவுக்கு  புளியோதரையை வெருத்திருப்பாருன்னு தெருஞ்சா நா வேற கொடுத்திருப்பனே ! " அப்டின்னு அழுதா, அடுத்தவள் " நானும் அது தெருஞ்சா இந்த தயிர் சாதத்த விட்டுட்டு வேற செய்து தந்திருப்பனே" அப்டின்னு சொன்னா
                                     அடுத்து நம்ம ஆளு மனைவி " இதுல தப்பு எங்க நடந்திருக்குன்னு தெரியல, கல்யாணமான நாளிலிருந்து தினமும் அவருக்கு தேவையானதை அவரே தான சமைச்சு எடுத்துட்டு வந்தாரு "
                                       நம்ம ஆளைப்போலதான் நாமும் நாம் விரித்தவலையில் நாமே மாட்டிக்கொள்கிறோம். ஆக நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.அது ஆன்மீகமாகட்டும் வேறு எந்த துறையாகட்டும் நமக்கு நாம்தான் நண்பனும் எதிரியும் என்பதை நினைவில் கொண்டு சரியான புரிதலுடன் வாழ்க்கையில் பயணிப்போம்.

டிஸ்கி :
                 பத்திரிகை உலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பதிவுலகில் பதிவரின் அனுமதி இல்லாமல் அவரின் படைப்பை திருடுவது என்பது பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை திருடும் செயலுக்கு ஒப்பானது. நாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு எப்படியோ தெரியாது, நாங்கள் எங்கள் குழந்தையைப் போல்தான் பாவிக்கின்றோம். ஆக அனுமதி இல்லாமல் எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்றும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

( இன்னும் பேசுவேன்........  )