வெள்ளி, 31 ஜூலை, 2015

கானல் நீர் - அத்தியாயம் 1

 "திருப்பூர்" பல்வேறு பரிணாமங்களில் எத்தனையோ முகங்களைக் கொண்ட தன் இராட்சத ரூபத்தை அமைதியாய் அடக்கிக்கொண்டு அந்த அதிகாலைப் பொழுதில் இனிய தென்றலை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. ரகுராம் என்கிற ரகு காலை நேர சில்லிப்பை ரசித்தவாறு புதிய பேருந்து நிலைய டீக்கடை ஒன்றில் நின்று கொண்டு மதுரைக்கு புறப்படும் அடுத்த பஸ்ஸை பற்றி யோசித்த வேளையில் தன் மதுரை பயணம் பற்றி ஞாபகங்களை அசை போடத்துவங்கினான். 
"சீதா" இந்தப் பெயரால் தான் இவன் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறான். 
" சீதா நா இன்டிபென்டன்ஸ் டே மெசேஜ் அனுப்பினேன் பாக்கலயா.? ரிப்ளையே வரலேயே.." என்ற ரகு அப்போதுதான் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான். அங்கு ஏற்கனவே பணிபுரியும் சீதாவிற்கு அவளுக்கு தெரியாமலேயே அவள் மொபைல் எண் பெற்று ஏதோ ஒரு உந்துதலில் மெசேஜ் அனுப்பி வைக்க, என்ன சொல்வாளோ என்ற உதறலிலேயே இந்த கேள்வியை கேட்டு வைத்தான் ரகு.
" ஏங்க அது நீங்கதானா.? நான் யாரோன்னு நினச்சு ரிப்ளை பண்ணல. அதோட மெசேஜ் கார்டு போடல. சோ ரிப்ளை பண்ண முடில.நான் கார்டு போட்டுட்டு உங்களுக்கு மெசேஜ் பண்றேன். எனிவே ஹேப்பி இன்டிபென்டன்ஸ் டே லேட்டர் விஷஷ் " என்று கூறி நாணத்தோடு கை நீட்டியவளை ஏதோ நேஷனல் அவார்டு வின்னர் போல கையை குலுக்கிவிட்டு சென்ற அவள் உள்ளங்கை ஸ்பரிசத்தை ஆயுட்காலம் முழுவதும் உணர்வு நினைவுகளாக சேமித்து வைக்க தன் மூளைக்கு கட்டளையிட்டுக்கொண்டான் ரகு. சீதா என்கிற சீதாலஷ்மிக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில், பள்ளிப்படிப்பை முடித்து டிப்ளமோ செய்தவள் இங்கு வேலைகிடைத்ததால் திருப்பூர் வந்து இரண்டு வருடங்களாகிறது. காண்போரை கவரும் கன்னிகை இல்லை என்றாலும் இயற்கை அழகை அள்ளி அளித்து விட்டான் பிரம்மன். ஏற்கனவே இருவருக்கும் புன்சிரிப்பு மட்டுமே வார்த்தைகளாக இருந்த நிலையில் ரகுவின் இந்த துணிவான செயல் நல்ல முன்னேற்றம் தந்ததை இருவரது விழிகளும் உறுதி செய்தது. சீதாவிற்கும் ரகுவின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் இருந்து வந்தது. இப்படியாக தோன்றிய காதல் அன்று மதியமே சீதா மெசேஜ் கார்டு போட்டு ரகுவிற்கு ரிப்ளை அனுப்பியதிலிருந்து மண்ணைத் துளைத்து முளைவிடும் மரமென வளரத்துவங்கியது.
நாசித்துவாரத்தில் மல்லிகை மணம் தாக்கியதால் நினைவுகளை நிறுத்திவிட்டு அருகிலிருப்பவர்களை கவனித்தான் ரகு. இரு பெண்கள் தம் கணவன் குழந்தைகளுடன் எங்கோ விஷேசத்திற்கு செல்கிறனர் போலும். அதற்குள் மதுரை செல்லும் பஸ் புறப்பட பஸ்ஸிலேறி அமர்ந்தான். கையில் மணியைப் பார்த்தான் ஐந்தரை என்று காட்டியது. இன்னும்விடியவில்லை.திருப்பூரிலிருந்து இருபது கிமீ தொலைவிலிருக்கும் தன் ஊரிலிருந்து மூன்றரை மணிக்கு எழுந்து புறப்பட்டு 
"அம்மா இன்னிக்கு ஆபிஸ்ல ஒரு பங்ஷன் நேரமே கிளம்பனும் " என்று அம்மாவிடம் நேற்று இரவு கூறிய பொய்யை உறுதிப்படுத்தி, பைக்கை எடுக்கும் முன்பு
" அப்பா படத்தை கும்பிட்டு போப்பா" என்று அம்மா வெகுளியாய் கூறியது உள்மனதில் எங்கோ இடிக்க, அந்தக் கணம் காதல் வந்து சீக்கிரம் கிளம்புடா என்று நரம்புகளை மீட்ட, பைக்கை அலுத்திப்பிடித்து வந்த போது மணி ஐந்து இருபது. இவ்வளவு வேகமாக வந்ததே இல்லை என்று பெருமூச்சுடன் கொட்டாவி விட்டபடியே சீட்டில் தலையை சாய்த்தான் ரகு. சிறிது கண்ணயர்ந்து எழுந்தபோது பஸ் கொடுவாய் தாண்டி சென்று கொண்டிருந்தது. மையில் எழுதிய காகிதம் மழையில் நனைந்ததைப் போல வானம் நீலத்தில் நனைந்திருந்து. முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் சீதாவைப்போல் ஹேர் ஸ்டைல் கொண்டிருந்ததால் விழித்திரை வழி நினைவுகள் ஓடியது.
ரகு தன் காதல் மரம் வளர மொபைலில் தினமும் நீர்விட்டு வந்தான். 
"சீதாக்குட்டி சாப்டாச்சா.?"
"சாப்டேன்பா நீங்க போய் சாப்பிடுங்க முதல்ல இன்னுமா சாப்டாம இருப்பாங்க?"
இப்படியான சம்பாஷனைகளில் மூன்று வேளையும் தொடந்தது.
ரகு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான்.
"செல்லக் குட்டி நான் ஒன்னு சொல்வேன் கோவிச்சுக்க கூடாது சரியா? "
"என்னபா சொல்லுங்க முதல்ல"
"இல்ல... அது... வந்து..."
"ப்ச்... என்னமா தயங்கறீங்க.. நான் யாரு உங்களுக்கு.? "
"வைப் ஐமீன் பொண்டாட்டி"
"அப்பறம் எதுக்கு தயக்கம்? சொல்லுபா"
"வெளிய எங்காவது மீட் பண்ணலாமான்னு......"
"ஹ் ஹாஹக்..ஹ... இதுக்குதான் இவ்வளவு தயக்கமா ? பேருக்குதான் பெரிய ஆபீஸர் ஆனா பொண்டாட்டி கிட்ட இத கேட்க கூட தயங்குவாறு... ஹ....ஹ்...ஹா.. "
"ஏய் குட்டவாத்து இப்ப வெளிய போலாம் வாடி... இப்பவே உன்ன தூக்கிட்டு போறேன் வாடி..."
"அடடா கருவாபயலுக்கு கோபத்த பாருங்க... சரி தங்கம் போலாம் பட் நமக்கு தெரிஞ்சவங்க யாரும் வராத இடமா பார்த்து சொல்லுங்க.. சரியா.?
"இதுதான் என் சீத்தாகுட்டி.... ஓகே பக்கத்துல ஒரு டேம் இருக்கு அங்க போவோம்"
இரண்டொரு தினங்களில் வெளியே சந்திப்பது என்று முடிவாகியது. ரகு சொல்லொனா உணர்வில் ஆழ்ந்தான். ஏதோ நெஞ்சில் தைத்தது போன்று, அருவியில் வீழப்போகும் மரக்கிளை முன்னரே பாறை இடுக்கில் சிக்கியது போன்ற உணர்வில் இருந்தான். 
அன்றைய நாளும் வந்தது. பச்சை வண்ண உடையில் பளிங்கு சிற்பம் போல புன்முறுவலுடன் ரகுவின் கரங்களை பற்றி தோள்மீது தோள் சாய்த்தவாறு அந்த அணையின் பூங்காவில் நடைபயின்ற போது சத்தியமாக ரகு மானிடனாய் அல்லாமல் வானத்து தேவர்களாய் மிதந்தது என்னவோ உண்மைதான். இவளது முதல் ஸ்பரிசம் மழைத்துளி போல தூய்மையானது. மலரின் மெல்லிய இதழ் போல மிருதுவானது. சிசுவின் உயிர்போல் புனிதமானது. என்ற கற்பனையில் மிதந்த ரகுவை 
"அங்க உட்காரலாமாப்பா."
என்ற சீதாவின் குரல் கலைத்தது.
அமர்ந்தனர்
தன் தலையை ரகுவின் தோள்மீது சாய்த்த சீதாவின் இரு கைகளைப்பிடித்தபடி நேருக்கு நேராக அமர்ந்த ரகு கண்களை கண்ணுக்குள் புகுத்துவது போல் பார்வையை செலுத்துகிறான்.
" ரகு ப்ளீஸ் அப்டி பார்க்காத.. உன் கண் என் கண்ண திங்கறமாதிரி இருக்குப்பா..."
"சீதா...! இப்ப நான் உன் கிட்ட ஒரு முக்கியமான பெரிய விஷயம் சொல்லப்போறேன். அத சொன்னதும் நமக்குள்ள சண்டை வரலாம். நாம ஒன்னு சேரதுக்கு முன்னாடியே பிரிஞ்சுகூட போலாம். பட் மை ஹம்புல் ரிக்வஸ்ட், ப்ளீஸ் சீதா குட்டி என்ன வெறுத்துடாதடி..." என்ற ரகுவின் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்தது.
" ஹேய் என்னப்பா சொல்றீங்க? நான் எதுக்கு உங்கள வெறுக்க போறேன்? எனக்கு பயமா இருக்கு ரகு ப்ளீஸ் சீக்கிரம் சொல்லுங்க.." சீதாவின் முகத்தில் கலவர ரேகை படர்ந்ததையும், உள்ளங்கை வியர்த்ததையும் கண்ட பெருமூச்சுடன் இன்னும் கையை இருக்கியபடி

" சீதா...! ஐயம் மேரிட்.... எஸ்..... நான் ஏற்கனவே கல்யாணமானவன்"

"தாராபுரம் எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் இறங்குங்க பார்க்கலாம்.." பஸ் தாராபுரம் பேருந்து நிலையத்திற்குள் நுழைகிறது. சூரியன் தன் கிரணங்களை மெல்ல வியாபிக்கச்செய்கிறது.
(தொடரும்....)