வியாழன், 9 செப்டம்பர், 2010

ஒரு அழகிய தமிழ் மகளின் டைரிக்குறிப்பில்.....- 2

நண்பர்களே! 
                            மீண்டும் அதே டைரி, பக்கங்களைப் புரட்ட புரட்ட சுவாரசியமாக கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன.அந்தப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம் அனைத்தும் அதில் எழுதி இல்லை செதுக்கி வைத்திருகிறது. இதோ அதிலிருந்து மற்றொன்று.....  

என்னவனே !

உன்னோடு நான் வாழ்ந்த அந்த நாட்கள் 
என் வாழ்க்கைச் சரித்திரத்தில் ஒரு பொற்காலம் !
நீ உதிர்த்த புன்னகையும் வருடிய ஸ்பரிசமும் 
கலைந்து சென்ற மேகங்களாய் என் மனதில் !

நானும் இருந்தேன் சலனமில்லாத குளமாய் 
அதில் புயலாய் புகுந்தாய் நீ !

அமைதியின் வலி புயலில் தெரிவதில்லைதான்
எனது இந்த தனிமையின் வலி உனக்கும் தெரிவதில்லைதான் !

பூஜைக்குச் செல்லும் பூவுக்குத் தெரியாது
நாமும்  ஒருநாள் சருகாவோம் என்று !

காதலில் ஊடல் சகஜம்தான் 
கவிஞனும் புலவனும் சொன்னதுதான் !

என்றும் நமக்கு புரிதல் ஒரு பொருட்டாக இருந்ததில்லை 
அன்று மட்டும் உனக்கு என்னவென்று தெரியவில்லை !


ஊடலின் பின் கூடலாம் என்று விளையாட்டாக ஆரம்பித்தேன்
அந்த விஷயத்தை, வினை வரும் என்பது தெரியாமல் !


நீ சிரித்தாய் நானும் சிரித்தேன்
பின் மௌனமானாய் நான் உறைந்து போனேன் !


காட்டுத் தீ கொழுந்துவிட்டெரிய 
ஒரு தீப்பொறியின் உரசல் போதும் !


நீ எப்போதும் என்னிடம் பேசாமலிருக்க 
குற்றமென்ன செய்தேன் நான் ?
உன்னைக் காதலித்ததைத் தவிர !


உனக்குத் தெரியாது இந்த கேள்விக்கு பதில் 
என் மரணம் அதற்க்கு விடை சொல்லும் ! 


இப்போதும் அதே அன்புடன் 
அழகிய தமிழ்மகள்.


                                      இந்த கவிதை எழுதியபின் அப்பெண் இறந்துவிட்டாளா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் இதற்குப் பிறகும் அதில் கவிதைகள் நிறைய உள்ளது.