வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இது துரோகமா ? - சிறுகதை

                                    அந்த அழகான மலை கிராமத்தில் ஒரே ஒரு டீக்கடை மட்டுமே உண்டு. மொத்தமாகச் சேர்த்து இருபது வீடுகளுக்குள் இருக்கலாம்.1990 களின் மத்தியில் நான் அங்கு சென்றதாக ஞாபகம். ஒரு அயல் நாட்டு மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் கம்பனிக்கு மொத்தமாக சில மூலிகைகள் ஏற்றுமதி செய்யும் ஆர்டரைப் பெற்றிருந்த போது அங்கு சென்றேன். அந்த ஊருக்கு ஒரே ஒரு பேருந்துதான் உண்டு அதுவும் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்லும். நான் இறங்கியதும் என்னுடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த  இரண்டு மூன்று நபர்கள் புதுசா இருக்கே என்பது போன்ற பார்வையுடன் பேருந்து நிறுத்தத்திலிருந்த அந்த டீக்கடையை நோக்கி சென்றனர்.நானும் பின் தொடர்ந்தேன். எங்கும் பசுமை படர்ந்த மரங்களும் மலைகளும் வியாபித்திருந்தது. நான் அந்த கடைக்குள் நுழைந்தேன். இதோ இங்கு டீ தயாரிக்கிறாரே முத்தையா கொஞ்சம் வயதானவர் இருந்தாலும் இளமையோடு இருக்கிறார்.
                                      எனக்கு போட்ட டீயை என்னிடம் கொடுத்துவிட்டு " ஐயா யாருங்க ? புதுசா இருக்கே !" என்று விசாரித்தார்.நான் ஒரு கம்பெனி ஆர்டர் விஷயமா மூலிகைகள் சேகரிக்க வந்திருக்கேன், இந்த கிராமத்த சேர்ந்த துருவனும் கண்ணையாவும் எனக்கு உதவறதா சொல்லிருக்காங்க,முதல்ல நான் மூலிகையோட மாதிரியை எடுத்துட்டு போய்டுவேன் அப்புறம் ஆளுங்க வருவாங்க " என்று என் வருகையின் அவசியத்தை அவரிடம் சொன்னேன்.
                                       " ஒ அப்படிங்களா! மணி இப்பவே அஞ்சுக்கு மேல ஆகுது இனி நாளைக்கு இதே நேரத்துக்குதான் டவுனுக்கு போக பஸ் வரும்.துருவன் வீடு இன்னும் வெகு தொலைவு காட்டுக்குள்ள போகணும் போக முடியுமா உங்களால ?" என்று கேட்க
                                       " ம் போய்த்தான ஆகணும் என்ன ஆகிடப் போகுது " என்று நான் பதிலளிக்க இந்த சம்பாஷணையைக் கேட்ட அந்த கிராமவாசிகள் மூவரும் ஆரம்பித்தார்கள்,
                                        " சார் காட்டு வழியில காட்டெருமை,சிறுத்தை மாதிரி மிருகங்க எல்லாம் இங்க நிறைய சுத்திகிட்டு இருக்கு, நீங்க எங்க கூடவே வரலாம் ஆனா ஏதாவது அசம்பாவிதம் நடந்தா எங்களுக்கு பழக்கப்பட்ட காடுங்கரதனால நாங்க சாமாளிச்சுக்குவோம் உங்களால முடியாது சார்."
                                        இதைக் கேட்ட முத்தியா தொடர்ந்தார்" ஆமா கருப்பா நீ சொல்றது சரிதான்! நீ ஒன்னு செய், இவரு இன்னிக்கு இங்கயே தங்கட்டும், நீங்க போய் துருவன்கிட்ட சொல்லுங்க, அவன் தேவையான மாதிரிகளோட இங்க வந்து சார பாக்கட்டும்.என்று சொல்லி என்னைப் பார்த்து என்ன சார் சரியா ?" ன்னு கேட்க, நான் சரி என்று ஆமோதித்தேன்.மூவரும் கிளம்பிவிட்டனர்.வானம் இருட்டத்தொடங்கியது.இனி அந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் யாரும் வரப்போவதில்லை என்ற நம்பிக்கையோடு கடையை அடைக்க ஆரம்பித்தார் முத்தையா,
                                          அழகான காடு அதில் ஒற்றையாய் ஒரு கடை, அங்கு செய்யாப் பட்டிருந்த பூ வேலைப்பாடுகளை கவனித்தேன்.ரொம்ப நேர்த்தியாக அழகு மிளிர செய்யப்பட்டிருந்தது.காட்டு மூங்கில்கள், பூக்கள், கொடிகள், கற்கள் போன்றவற்றினால் ஆன வேலைப்பாடுகள் என்னை ரசிக்க வைத்து ஆச்சர்யப் பட வைத்தது.
                                           ஆனால் இதையெல்லாம் ஒரு ஆண் செய்திருக்க வாய்ப்பில்லை.அப்படியானால் இங்கு ஒரு பெண் இருக்க வேண்டும்.யாராக இருக்கும்? என்ற நினைவில் நான் சூழ்ந்துகொள்ள
                                             " அம்மா வசந்தி இங்க வாம்மா,நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்காரு, அவர கொஞ்சம் கவனுச்சுக்கம்மா என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து " என் ஒரே மகா சார் " என்றார் பெருமை பொங்க,
                                              நாம் நினைத்தது போலவே இங்கு ஒரு பெண் இருக்கிறாள் என்ற நினைவில் இருக்கும்போது திரைச்சீலையை விலக்கிவிட்டு வெளிவந்து என்னைப்பார்த்து ஒரு வணக்கம் சொல்லி புன்னகைத்து கடையின் வாசல் பக்கம் விருட்டென பாய்ந்து சென்றாள். அவளுடைய அழகைக்கண்டு நான் மலைத்து போய்விட்டேன். கலப்படமில்லாத உண்மையான கலையான முகம் ஒப்பனை துளியும் இல்லாமல் இவ்வளவு தெளிவான முக அழகை நான் இதுவரை கண்டதே இல்லை.ஆச்சர்யத்துடன் " இது உங்க மகளா ?" என்று கேட்டேன்.
                                               " ஆமா சார் " என்று ஆத்ம திருப்தி தோன்ற விடையளித்தார் முத்தையா தொடர்ந்து ரொம்ப புத்திசாலி, ரொம்ப துடி, எப்பவும் துரு துருன்னு எதையாவது செய்துகிட்டே இருப்பா, அவளோட இறந்துபோன அம்மா மாதிரியே " என்று கூறிவிட்டு அவரது அன்றாட பணிகளில் ஆழ்ந்தார் முத்தையா.
                                               சிறிது நேரம் நான் அங்கிருக்கும் அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த பொருட்களின் அழகில் மயங்கி அதில் ஆழ்ந்து கொண்டிருந்தேன்.கடை மிகவும் நேர்த்தியாக தூசி துளியும் இல்லாமல் சுத்தமாக இருந்தது. சிறிது நேரத்தில் வசந்தி திரும்பி வந்துவிட்டாள்.தன்னுடைய அழகு என்னை வசீகரித்துவிட்டது என்பதை இரண்டாவது பார்வையிலேயே அறிந்து கொண்டாள் அந்த அழகி.தனது பெரிய கருமையான விழிகளை நாணத்துடன் தாழ்த்திக்கொண்டாள்.
                                                 " சார் போய் கை கால் முகம் அலம்பிட்டு வாங்க, நான் சாப்பிட தயார் பண்ணறேன்." என்று பல நாள் பழகியதுபோல பேசினாள்.மேலும் அவளிடம் பேச்சு கொடுத்தேன். அவளோ உலக விவகாரங்களில் பரிட்சயம் ஆனவள் போலவே ஒருவிதமான கூச்சமும் இன்றி எனக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.நான் குளித்துவிட்டு வந்ததும் தேநீருடன் இரவு உணவு தயாராக இருந்தது ரசித்து உண்டேன்.பின்பு முத்தையா சாராயத்தை எடுத்து அதை அமிர்தம் போல பாவித்து டம்ளரில் ஊற்றினார்.என்னை கொஞ்சம் சுவைத்து மட்டும் பார்க்கச்சொல்லி வற்ப்புறுத்த நான் அன்புடன் மறுத்தேன்.வசந்தி என்னைப் பார்த்து புன்முறுவலை அளித்தாள்.ஆனந்தமாய் ஏற்றுக் கொண்டேன்.பின்பு மூவரும் ஏதோ யுகக்கணக்கில் பழகியவர்கள் போல உரையாடலில் ஆழ்ந்தோம்.அன்றைய இரவு நிம்மதியான தூக்கத்தில் கழிந்தது.
                                     பொழுது புலர்ந்ததும் துருவனும் கண்ணையாவும் வந்து காட்டுக்குள் கூட்டிச் சென்றனர். எனது வேலைகளை முடித்து புறப்படும் நேரம் வந்தது. பஸ் புறப்படத்தயாராக இருந்தது என்றாலும் முத்தையாவையும் அவரது மகளையும் விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை முடிவில் அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டேன். முத்தையா நல்லபடியா போயிட்டு வாங்க என்று விடையளித்தார்.வசந்தி என்னை பஸ் வரை வழி அனுப்ப வந்தாள்.நிறுத்தத்திற்கு அருகில் உள்ள குத்துக்கல்லில் சாய்ந்து நின்றபடி மெதுவாக கையசைத்தாள்.
                                      நான் எனது பணிகளில் எவ்வளவோ ஊர்களுக்கு சென்றுருக்கின்றேன்.அங்கு நடைபெற்ற எவ்வளவோ விடையளிப்பைக் கணக்கிட முடியும்.ஆனால் அவற்றில் ஒன்றுகூட என் நினைவில் இவ்வளவு நீண்டகாலம் இதுபோல இன்பகரமானதாக பதிந்திருக்கவில்லை.வசந்தியும் முத்தையாவும் பழகிய ஓரிரு நாட்களிலேயே நெடுநாளைய சொந்தம் போல நீங்காது இடம் பெற்றுவிட்டனர்.
                                       பல வருடங்கள் கழிந்தன நிலைமைகள் என்னை மீதும் அதே பாதையில் அதே இடங்களுக்கு இட்டுச்சென்றன.முத்தையாவின் மகளை நினைவு கூர்ந்து அவளை மீண்டும் காணப்போகிறோம் என்ற எண்ணத்தால் மகிழ்ச்சி அடைந்தேன்.வயதான முத்தையாவுக்கு ஒருவேளை மிகவும் முடியாமல் போயிருக்கலாம் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடியது.இருவரில் ஒருவர் காலமாகி இருக்கலாம் என்ற சிந்தனையும் என் மனதில் தோன்றி மறைந்தது.கவலை நிறைந்த முன்னுணர்வுகளுடன் பஸ்ஸை விட்டு இறங்கினேன்.இப்போது எனக்கு வேளை இந்த ஊரில் இல்லை இங்கிருந்து வெகுதொலைவில்தான் இவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் போவதற்கு மனமில்லாமல் வந்தேன் சற்று நிதானமாக ஆவலுடன் கடையை நெருங்கி உள்ளே சென்றதும்.அறையில் பொருட்கள் பழைய நிலையிலேயே இருந்தன.ஆனால் மலர்களில் ஆன வேலைப்பாடுகள் இல்லாமல் இருந்தது.நாலாப்பக்கமும் இருந்த நிலைமை கவனிப்பின்மையை பறைசாற்றியது.
                                   அந்த பெஞ்சின் ஓரத்தில் தலைவைத்து கம்பளியால் போர்த்தி படுத்திருந்தார் முத்தையா.என் வரவு அவரை உசுப்பிவிட்டது.அவர் எழுந்து உட்கார்ந்தார். அதே முத்தையாதான் ஆனால் எவ்வளவு கிழடு தட்டிப் போய்விட்டார்.நான் டீ போட சொல்லியதும் டீயை தயாரிக்கையில் நான் அவரது நரை முடியையும் மழிக்காத கன்னங்களில் இருந்த சுருக்கங்களையும் கூன் விழுந்த தோள்களையும் நோக்கினேன். தள தளவென்று நன்றாக இருந்த ஆண்மகனை காலம் மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் குடு குடு கிளைமாக ஆக்கிவிட்டதை எண்ணி என்னால் மலைத்துப்போகாமல் இருக்கமுடியவில்லை என்னால்.பேச்சை ஆரம்பித்தேன் " ஐயா என்னை அடையாளம் தெரியுதா ? நாம ரொம்ப காலத்துக்கு முன்னால அறிமுகம் ஆனவர்கள் தெரியுமா?" என்று கேட்டேன்." இருக்கலாம் இங்க டேம் கட்றாங்க எவ்ளோவோ பேர் வராங்க போறாங்க, எப்படி ஞாபகம் வச்சுக்கறது ?" என்று உற்சாகமின்றி பதிலளித்தார்.
                                  " உங்க பொண்ணு வசந்தி சௌக்கியமா?" என்று கேட்டேன்.அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் " என்றார். " ஒஹோ கல்யாணம் ஆகிடுச்சா? " என்று விசாரித்தேன்.அவர் நான் சொல்வதைக் காதில் வாங்காதவர் போல என்னிடம் வந்து டீயைக் கொடுத்துவிட்டு அவரது வேலையில் ஆழ்ந்தார்.ஆனால் ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டுமென்று உணர்ந்து கொண்டேன்.ஆனால் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளத் தலைப்பட்டேன். முத்தையா வாயைத்திறக்க என்ன வழி என்று யோசிக்கும் போது சாராயம் என் நினைவிற்கு வந்தது. கொஞ்ச தூரத்தில் இருந்த சாராயக்கடையில் ஒரு பாட்டில் வாங்கிக்கொண்டு முத்தையாவிடம் கொடுத்தேன்.
                                     நான் நினைத்தது சரியாகப்போனது.முத்தையா அதை வேண்டாமென்று சொல்லவில்லை. சாராயம் முத்தையாவின் உட்சாகமின்மையை அகற்றி விட்டது என்பதை கவனித்தேன்.இப்போது முத்தையாவின் வாய்ப்பூட்டு கழண்டு கொண்டது.என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டார்.அவர் பேச ஆரம்பித்து வசந்தியைப் பற்றி அவர் கூறிய கதை என் உள்ளத்தை உருக்கி மிகவும் ஈர்த்துவிட்டது.
                                    ஒரு பகுதி சாராயம் காலியான பின் பெருமூச்சுடன் ஆரம்பித்தார்." ஹும் வசந்தி!....யாருக்குத்தான் வசந்தியைப் பிடிக்காது? எல்லோருமே அவளைப் பாராட்டுவாங்க. எல்லார்கிட்டயும் அன்பா பேசறதால ரொம்ப நேரம் இங்கயே இருந்து நிறைய வியாபாரம் செய்துட்டுப் போவாங்க.டேம் கட்ட ஆரம்பிச்சதிலிருந்து வந்த ஆபீசருங்க எல்லாரும் கூட அப்டிதான் இருந்தாங்க. அதிகாரிங்க எவ்ளோ கோபமா வந்தாலும் இங்க வந்தா அப்டியே மாறிடுவாங்க, சார் நம்புவீங்களோ இல்லையோ டேம் கட்ட வந்துட்டும் போயிட்டும் இருக்கற ஆபீசருங்க இந்த வழியில போகும்போது ஒரு கால்மணி நேரமாவது நின்னு பேசாம போகமாட்டாங்க.இந்த கடையே அவள் பொறுப்புல தான் இருந்தது.வீட்டையும் கடையையும் சுத்தம் பண்றதுலையும் சாப்பாடு செய்யறதுலயும் அவளுக்கு எப்படியோ நேரம் கிடைத்துவிடும். எனக்கு என் பொன்னைப் பார்க்கப்பார்க்க சந்தோசம் தாளாது.எவ்வளவு அதிகமா பாசம் வைத்திருந்தேனோ அதுக்கு அதிகமா அவமேல நான் நம்பிக்கை வைத்திருந்தேன்.எதுலயும் எந்த குறையும் இல்ல.நல்ல வரனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ரொம்ப ஆசைப் பட்டேன். என்ன செய்ய நடக்கறது நடந்தே தீரும் இல்லையா?" என்று சொல்லி இன்னும் விவரமாக வசந்தியைப் பற்றி கூற ஆரம்பித்தார் முத்தையா.
                                     நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் முத்தையா கடையில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.வசந்தி கடையின் பின்புறம் இருந்த வீடு போன்ற அறையில் இருந்தாள்.அப்போது கடையின் முன்பு வந்து நின்றது ஒரு ஜீப். அதிலிருந்து பேன்ட் சர்ட் இன் செய்து கொண்டு பட்டினத்திலிருந்து வந்தவன் போல அதிகாரி தோரணையில் கடைக்குள் வந்து டீ வேண்டும் என்று கேட்டான்.கூடவே ஜீப்பில் இரண்டு போலீஸ்காரர்கள் இருவரும் இருந்தனர்.பார்ப்பதற்கு மிகவும் இறுக்கமாக காணப்பட்டான்.டேம் கட்ட ஆரம்பித்ததிலிருந்து இந்த மாதிரிகாட்சிகளுக்கு பழக்கப்பட்ட வசந்தி,பின்னாலிருந்து ஓடி வந்து ஏதாவது சாப்பிட வேண்டுமா என்று கேட்டாள்.வசந்தியின் வருகை எப்போதும் போலவே பயனளித்தது.வசந்தியைப்பார்த்த அந்த அதிகாரியின் கோபம் பறந்து போயிற்று.கொஞ்சம் ஆசுவாசமாய் பெஞ்சில் உட்கார்ந்து ஏதாவது கொண்டுவருமாறு வேண்டினான்.விரைவிலேயே அவன் முத்தையாவிடமும் வசந்தியிடமும் சரளமாகப் பழகினான்.டேம் கட்டும் வேளையில் ஆட்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளதாகவும்,இன்னும் ஓரிரு தினங்களில் இந்த ஊரில் தங்க வேண்டியது வரும் என்றும் கடைக்கு முன்ப தற்காலிக தங்குமிடம் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்குமாறும் வேண்டினான்.முத்தையாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உள்ளே இருந்த போலீஸ்காரர்களைப் பார்த்து கொஞ்சம் பயந்துதான் போய்விட்டார்.சரி என்று சம்மதித்தார்.அந்த ஓரிரு தினங்களும் அவன் முத்தையாவாலும் வசந்தியாலும் நன்கு கவனிக்கப்பட்டான்.அதற்க்கு ஏற்றதுபோல அவனும் பணத்தை வாரி வழங்கினான்.அதிகாரி ஊருக்குச்செல்லும் நாளும் வந்தது.ஜீப்பும் வந்து விட்டது.முத்தையா அதிகாரி இருந்த இடத்திற்கு சென்றதுமே அவன் உணர்விழந்து படுத்திருப்பதைக் கண்டார்.அவனுக்கு உடம்பு சரியில்லையாம், பிரயாணம் செய்ய இயலாதாம், என்ன செய்வது? மறுநாள் காலை உடம்பு தேறாவிட்டால் டவுனிலிருந்து டாக்டரை வரவழைப்பது என்று தீர்மானமாயிற்று,
                                  மறுநாள் அதிகாரியின் நிலைமை இன்னும் மோசமாயிற்று,அவனுடைய ஆள் டாக்டரை அழைத்து வர டவுனுக்குச்சென்றான், வதந்தி அருகிலிருந்து அதிகாரியின் தேவைகளை கவனித்துக்கொண்டாள்.அத்தினியும் செய்து கொண்டே வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தாள்.அதிகாரியை விட்டு வசந்தி அகலவேயில்லை. மருத்துவரும் வந்தார் டவுனிலிருந்து. அவர்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிவிட்டு அவனுக்கு வேண்டியதெல்லாம் ஓய்வுதான் என்றும் இன்னும் ஓரிரு நாளில் வெளியே சென்று தன் அலுவல்களைத்தொடரலாம் என்றும் கூறினார்.டாக்டருக்கு கொஞ்சம் தாராளமாகவே பணம் வழங்கினான் அந்த அதிகாரி.இன்னும் ஒருநாள் கழிந்தது.அதிகாரியின் உடம்பு முற்றிலும் சொவ்க்கியமாகி விட்டது. அவன் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இருந்தான்.முத்தையாவிடமும் வசந்தியிடமும் இடைவிடாது பேசி அளவலாவிக்கொண்டிருந்தான்.கடைக்கு வருபவர்களோடு நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான். வெள்ளை மனம் கொண்ட முத்தையாவிற்கு அந்த இனிய அதிகாரியை விட்டுப்பிரியவே மனமில்லை. அன்று வெள்ளிக்கிழமை.வசந்தி சற்று தொலைவிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்ல ஆயத்தமாகிகொண்டிருந்தால். அதிகாரியின் ஜீப்பும் வந்தது.சாப்பாட்டிற்கும் தங்கும் வசதிக்கும் முத்தையாவிற்கு கொஞ்சம் தாராளமாகவே பணம் அளித்து விடைபெற்றுக்கொண்டான்.வசந்தியிடமும் பிரிவு சொல்லிக்கொண்டவன் கிராமத்தின் மறு கோடியிலுள்ள அம்மன் கோவில் வரை அவளைத் தன் வண்டியில் ஏற்றிச்செல்வதாக கூறினான்.வசந்தி தயங்கி நின்றாள். ஆனால் அவள் தகப்பன் முத்தையா " எதற்க்காக பயப்படுகிறாய் வசந்தி? அவர் ஒன்றும் பேய் பூதம் கிடையாது உன்னைத் தின்று விடுவதற்கு, எரிப்போ அம்மன் கோவில் வரை " என்றார்.வசந்தி ஏறிப்போய் அதிகாரியின் பக்கத்தில் அமர்ந்தாள்.அதிகாரி உத்தரவிட்டதும் ஜீப் புளுதிக்காட்டில் மறைந்தது.
                                       வசந்தியை அந்த அதிகாரியுடன் போகும்படி அனுமதிக்க தன்னால் எப்படி முடிந்தது? இந்த குருட்டுத்தனம் தன்னிடம் எப்படி வந்தது? தன் புத்திக்கு எப்படி என்னதான் நேர்ந்தது? என்று பாவம் அந்த அப்பாவி முத்தையாவிற்கு புரியவில்லை. கவலை ஒரேயடியாய் ஆட்கொண்டு விடவே,அவரால் போருக்க முடியவில்லை.தானே அம்மன் கோவிலுக்குச் சென்றார்.அங்கிருந்த பூசாரியிடமும் அக்கம்பக்கத்திளிருப்பர்களிடமும் வசந்தி வந்தாளா? என்று விசாரித்தார்.எல்லோரும் வசந்தி இங்கு வரவேல்லை என்றார்கள்.குற்றுயிரும் குலை உயிருமாக வீடு திரும்பினார் முத்தையா.ஜீப்பும் திரும்பக்காணோம்.கடைசியில் இரவு வந்ததும் தனியாக ஜீப்பை ஒட்டிக்கொண்டு குடிமயக்கத்தில் வந்த டிரைவர் "வசந்தி டவுனுக்குப் போற பஸ்ஸில் அதிகாரியுடன் சென்றுவிட்டாள் " என்று கொள்வது போன்ற செய்தியைக் கொண்டுவந்தான்.முத்தையா தன் துர்ப்பாக்கியத்தை தாங்க முடியாதவராய் கட்டிலில் அக்கணமே விழுந்துவிட்டார். இப்போது எல்லா நிலைமைகளையும் எண்ணிப்பார்க்கையில், அதிகாரி அசொவ்க்கியமுற்றது வெறும் பாசாங்கே என்பதை முத்தையா ஊகித்துக்கொண்டார்.முத்தையாவுக்கு கடும் ஜுரம் வந்து விட்டது.முத்தையாவுக்கு வைத்தியம் பார்க்க டவுனுக்கு அதே வைத்தியனிடம் கூட்டிக் கொண்டு போனார்கள்.அந்த அதிகாரி முற்றிலும் ஆரோக்கியமாகவே இருந்ததாகவும் அவனுடைய தீய நோக்கங்களைத் தான் அப்போதே யூகித்துக் கொண்டதாகவும் அவனது செல்வமும் செல்வாக்கும் தன் வாயை அடைத்துவிட்டதாகவும் இப்போது அவன் உறுதியாகக் கூறினான்.அந்த டாக்டர் உள்ளதைச் சொன்னானோ அல்லது தன் துரதிர்ஷ்டத்தைக் கண்டு கேலி செய்தானோ தெரியவில்லை.ஆனால் தன்னிடம் சிகிச்சை பெறவந்த நோயாளிக்கு அவன் எவ்வித ஆறுதலையும் அளிக்கவில்லை.
                                       உடம்பு சரியானதும் தன் கடையைப் பூட்டிவிட்டு சேர்த்து வைத்த காசை எடுத்துக் கொண்டு தன் நோக்கம் பற்றி யாருக்கும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், மகளைத் தேடி கால்நடையாகச் சென்றுவிட்டார்.டவுனிலிருக்கும் அந்த அதிகாரியின் துறை சம்பந்தமான அலுவலகத்திர்க்குச் சென்று அவன் ஊரைத் தெரிந்து கொண்டு விலாசம் வாங்கிக் கொண்டார்.கடவுள் துணை நின்றால், வழிதவறிய கன்றை மீண்டும் வீடு சேர்ப்பேன் என்று நினைத்துக் கொண்டார்.இந்த நினைப்புடன் அவர் நீண்ட தூரத்திலிருந்த நகரத்திற்கு வந்து விலாசத்தை தேடி அலைந்து அதிகாரியின் வீட்டு வாசலை அடைந்தார்.அங்கு வீட்டு முன் வேலை செய்துகொண்டிருந்த பணியாளிடம் ஒரு ஏழைக் கிழவன் முத்தையா வந்திருப்பதாக சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் ஐயா உறங்குவதாகவும் பத்து மணிக்கு முன் அவர் யாரையும் பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தான்.முத்தையா வெளியே சுற்றிவிட்டு குறித்த நேரத்தில் திரும்பி வந்தார்.இப்பது அதிகாரியே முத்தையாவை எதிர் கொண்டான்." உனக்கு என்ன வேண்டும் ஐயா என்று கேட்டான்.முத்தையாவின் உள்ளத்தில் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பொங்கின,கண்களில் நீர் மங்கின," ஐயா தயவு செய்து என் பொண்ணு எனக்கு வேணும் அவள அனுப்பிடுங்க.நீங்க எல்லாம் பெரிய மனுசங்க, இந்த ஏழையோட பொண்ணு உங்களுக்கு வேண்டாம்.இந்த கிழவனுக்கு அவளைத்தவிர வேற துணை இல்ல. யாராவது பையன எங்க சாதிசனத்துல பார்த்து கல்யாணம் முடுச்சுட்டு அவ ஆதரவுல நான் காலத்த தள்ளலான்னு இருந்தேன்.இப்போ இப்படி பணிட்டீங்களே?" என்று குரல் தழுதழுத படியே கூறினார் முத்தையா.அதிகாரி அவரை சட்டென மேலும் கீழும் பார்த்தவன். முகம் குப்பென்று சிவக்க முத்தையா கையைப் பற்றி தனது வீட்டுக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த அறைக்கு இழுத்துச் சென்று கதவைச் சாத்தி உட்புறம் தாளிட்டான். " இத பாருங்க முத்தையா நடந்ததை மாற்ற முடியாது.உண்மைதான் நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன். அதுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.ஆனால் வசந்தியைக் கைவிட்டுடுவ்ன்னு மட்டும் நினைக்காதீங்க. அவள் உங்க கிட்ட இருப்பதை விட இங்க இருந்தா ரொம்ப சந்தோசமா இருப்பான்னு சத்தியமா சொல்வேன். உனக்கு அவள் எதுக்கு வேணும் இனி? அவள் என்னைத்தான் காதலிக்கறாள். தன்னோட பழைய நிலைமையை அவள் மறந்தே போய்விட்டாள். அந்த மாதிரி வாழும் பழக்கமே அவளுக்கு இப்ப இல்ல. தயவு செய்து என்ன தொந்திரவு பண்ணாத வெளிய போய்டுங்க," என்று கூறி விட்டு முத்தையாவின் சட்டை பையில் எதையோ திணித்துவிட்டு கதவுத் தாழ்ப்பாளைத் திறந்தான். எப்படி என்று கூடத் தெரியாமல் தெருவுக்கு வந்து சேர்ந்தார் முத்தையா.
                                   நெடு நேரம் அசையாமல் நின்று கொண்டிருந்த பின்பு அவர் தனது சட்டைப்பையில் ஏதோ காகிதக் கற்றை இருப்பதை உணர்ந்தார்.அதை வெளியிலேடுத்தவர் அது நூறு ரூபாய் நாடுகள் பல கொண்ட கட்டு என்பதை உணர்ந்தார். மீண்டும் அவர் விழிகளில் நீர் பெருக்கெடுத்தது, இது ஆத்திரக் கண்ணீர்.நோட்டுக்களை கசக்கி சுருட்டி தரையில் எறிந்து தன் ரப்பர் செருப்பால் தேய்த்துவிட்டு அப்பால் நகர்ந்தார்... சில வினாடிகள் கடந்தபின் நின்று யோசித்துவிட்டு திரும்பி நடந்தார் அந்த நோட்டுக்களைத் தேடிய பொழுது நல்ல உடை உடுத்திய வாலிபன் ஒருவன் அதை எடுத்துக் கொண்டு வீதியில் பாய்ந்தான், முத்தையா அவனை விரட்டச் செல்லவில்லை. தனது ஊருக்கே திரும்பச் செல்வதென தீர்மானித்தார்.இருந்தாலும் போவதற்கு முன் வசந்தியை ஒரு தரம் பார்த்துவிட்டுச் செல்வதென விரும்பினார். ஆகவே இரவை தெரு ஓரங்களில் கழித்துவிட்டு அடுத்த நாள் அதிகாரியின் வீட்டிற்க்குச் சென்றார். ஆனால் வேலைக் காரன் அவரை வெளியே தள்ளி கதவை படீரென சாத்தி வைத்தான். மெதுவாக தள்ளாடியபடியே வெளியே வந்தார் முத்தையா. அங்கிருந்த இன்னொரு வேலைக்காரன் முத்தையாவிடம் வந்து " ஐயா உங்கள பார்த்தா பாவமா  இருக்கு நீங்க அந்த பொண்ணோட அப்பான்னு எனக்குத் தெரியும் அந்த பொண்ணு இங்க இல்லங்க அதோ அந்த வீட்டுல இருக்கு, இப்போ எங்க ஐயாவும் அங்கதான் இருக்காரு அங்க போய் முடிஞ்சா உங்க பொண்ண பாருங்க உங்க நிலைமை எனக்குத்தெரியும் ஐயா " என்று  கொஞ்ச தூரம் தள்ளி இருந்த வீட்டைக் காட்டி சொல்ல முத்தையா கண்ணீருடன் நன்றி சொல்லி நகர்ந்தார்.
                                 கதவு பூட்டியிருந்தது அழைப்புமணியை அடித்துவிட்டு காத்திருந்தார். உள்ளிருந்து ஒரு பணிப்பெண் வந்து கதவைத் திறந்தாள். அந்த அதிகாரி இங்குதான் வசிக்கிறாரா என்று கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் உள்ளே நுழைந்தார் முத்தையா.பணிப்பெண் தடுப்பதைக் கூட பொருட்படுத்தாமல் முத்தையா செல்வதைப் பார்த்து அப்பெண் " ஐயா உங்களைப் பார்க்க யாரோ வராங்க என்று கத்தினாள். அதற்குள் முத்தையா இரண்டு அறைகளைக் கடந்து உள்ளே இருத்த அறைக்கு சென்றுவிட்டார்.அரை வாயில் வரை சென்றவர் அப்படியே நிலைத்து நின்றுவிட்டார்.முதலிரண்டு அறைகளும் இருட்டாய்க் கிடக்க மூன்றாவது அறையில் மட்டும் வெளிச்சம் வந்தது.அங்கு மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அறையில் அந்த அதிகாரி சிந்தனையில் ஆழ்ந்தவனாக வீற்றிருந்தான். வசந்தி மிக மிக நாகரீகமாக உடை அணிந்து, அவனது நாற்காலியின் கைப்பிடியின் மீது உட்கார்ந்து வைர மோதிரங்கள் ஜொலித்த விரல்களினால் அதிகாரியின் தலைமுடியை கொதியவண்ணம் அவனை கண்களில் காதல் ததும்ப நோக்கிக் கொண்டிருந்தாள். பாவம் முத்தையா தன் மகள் இவ்வளவு அழகாக இதற்குமுன் அவருக்கு ஒருபோதும் தோன்றியதே இல்லை. தன் சுய நினைவு இன்றியே அவளை வியந்து பார்த்தார் முத்தையா. " யாரது ? " தலையை உயர்த்தாமலே கேட்டாள் வசந்தி. முத்தையா வாயே திறக்கவில்லை.விடை கிடைக்காதபடியால் வசந்தி நிமிர்ந்து பார்த்தாள்.... ஐஓஒ என அலறிக்கொண்டு தரை விரிப்பின் மீது விழுந்துவிட்டாள். அதில் கலவரமுற்ற அதிகாரி வசந்தியை தூக்குவதற்காக பாய்ந்தவன், கழட்டு முத்தையா நிர்ப்பது கண்ணில் படவே வசந்தியை விட்டுவிட்டு கோபத்தால் முகம் சிவக்க பற்களை கடித்துக் கொண்டு " யோவ் உனக்கு என்னைய வேணும் எதுக்கு எங்க பின்னாடியே நாய் மாதிரி சுத்துற, என் உயிரை வாங்கவே வந்திருக்கியா? போய்த்தொலை கிழட்டு நாயே ! "என்று சீரியபையே தன் வலிமையான கையினால் முத்ஹ்டையாவின் சட்டை காலரை பிடித்து வெளியே தள்ளினான் அந்த அதிகாரி.      
                                   முத்தையா தன் வீட்டிற்கு திரும்பினார்.எல்லோரும் அதிகாரியின் மேல் வழக்கு போடும்படி ஆலோசனை கூறினார்கள் ஆனால் முத்தையா தீர யோசித்து விட்டு தன் மகள் தனக்கு சாதகமாக இல்லை என்றும் இதை அப்படியே விட்டுவிடுமாறு இருக்கிறேன் என்றும் கூறினார்.பின் முத்தையா தமது வேலைகளைத் தொடர்ந்தார்.என்று நடந்ததை கூறிய முத்தையா தொடர்ந்தார் " ஆயிற்று அநேகமாக மூன்று வருடம் நான் வசந்தி இல்லாமலே அவளிடமிருந்து ஒரு தகவலும் இல்லாமலேயே வாழ்ந்து வருகிறேன்.உயிரோடுதான் இருக்கிறாளா ?  இல்லையா என்பதை ஆண்டவன்தான் அறிவான். எதுவும் நடக்கக் கூடும், வாலிப முறுக்கில் panam இருக்கும் மமதையில் கொண்டுபோய் குடும்பம் நடத்திக் கொண்டு இருந்துவிட்டு தெருவில் விட்டுவிடும் முதல் பெண் வசந்தி இல்லை கடைசிப் பெண்ணும் அவள் இல்லை. இன்றைக்கு பட்டும் வைரமுமாக பகட்டிவிட்டு நாளைக்கு வீதியில் பொறுக்கித்திரியும் இவளைப் போல மூடப்பென்கள் ஊரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வசந்தியும் இந்த நிலைக்குத்தான் ஆளாவாள் என்பதை அறியும்போது சில சமயம் அவள் புதை குழியில் சேர்ந்துவிட்டால் நல்லாருக்குமே என்ற எண்ணம் தன்னை அறியாமல் உண்டாகிவிடுகிறது " என்று கூறி முடித்தார் முத்தையா.
                                      என் நண்பரான முத்தையா சொன்ன கதை இதுதான். நடு நடுவே கண்ணீர் கதையை இடை  முறித்துவிடும் அவர் கதை சொல்கையில் குடித்த சாராயம் இந்த கண்ணீருக்கு ஓரளவிற்கு காரணம் என்றாலும் அது என் மனதை வெகுவாக உருக்கி விட்டது. விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடு நேரம் வரை முத்தையாவை மறக்க முடியவில்லை. வசந்தியைப் பற்றி ரொம்ப நேரம் சிந்தித்தேன்.
                                       சமீபத்தில் அந்த ஊரின் வழியே செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் முத்தையாவை நினைவு கூர்ந்தேன்.அவர் நீண்டகாலம் ஆட்சி செலுத்திய கடை இப்போது இன்னொரு உறவினரின் பொறுப்பில் உள்ளதாக அறிந்தேன். முத்தையா உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்விக்கு திருப்திகரமான பதில் அளிப்பவர் யாருமில்லை. இருந்தாலம் ஏதோ ஒரு உந்துதலின் காரணமாக அந்த ஊருக்குச் செல்லலாம் என முடிவெடுத்து ஐநூறு ருபாய் வாடகைக்கு காரை அமர்த்திக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
                                        இதோ சற்று முன்பு அந்த கிராமத்தை அடைந்து அந்த கடையின் முன் வண்டியை நிறுத்தினேன், சத்தம் கேட்டு ஒரு பெண்மணி கடையின் வாயிலில் வந்து நின்றாள். முத்தையா இறந்து ஒரு வருடம் ஆகிறது என்றும், இப்போத் உஅந்த வீட்டை உறவினர்களாகிய எங்களுக்கு வந்தது என்றும் கூறினாள் அந்தப் பெண். இப்போது எனது இந்த வீணாய்ப் போன பயணத்தைப் பற்றியும், ஐநூறு ரூபாய் வெட்டிச் செலவைப் பற்றியும் வருத்தப் பட ஆரம்பித்தேன். " அவரது மரணம் எப்படி நடந்தது அம்மா என்று கேட்டதற்கு , " ரொம்ப அதிகமாக குடினால் என்று பதில் வந்தது. அவரது உடலை அடக்கம் செய்த இடம் எங்குள்ளது என்று கேட்டேன். ஊருக்கு வெளியே உள்ளது என்றாள். எனக்கு அந்த இடத்தை காட்ட முடியுமா என்று கேட்டுக் கொண்டேன்.உடனே அந்தப் பெண் ஒரு போடிப்பையனை வரச்சொல்லி அந்த இடத்தை காட்டுமாறு கூறினாள் அந்த பெண்.
                                  கந்தை துணியினை அணிந்த ஒல்லியான அந்த சிறுவன் ஓடி வந்து என்னை அந்த அகிராமத்தின் கோடிக்கு இட்டுச் சென்றான்.நான் அந்த சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தேன் " அந்த முத்தையாவை உனக்கு தெரியுமா தம்பி?"
                                  " இம் தெரியாமல் எப்படி ? அவர் எனக்கு கடலை மிட்டாய் கொடுப்பார். பாவம் இப்போ அவர் இல்லை அதனால எனக்கு கடலை மிட்டாய் கொடுக்க யாருமே இல்லை "
                                   " யாராவது அவரைப் பற்றி விசாரிப்பாகளா?'
                                   " ம் இப்போ அதிகாரிக கொஞ்சம் பேர்தான் வராங்க, கொஞ்சம் பேர் போல கேட்பாங்க, போன மூணு மாசம் முன்னால ஒரு அம்மா வந்தாங்க ரொம்ப பணக்காரங்க போல, ரெண்டு குழந்தைகள் ஒரு வேலைக்காரி எல்லாம் கூட்டிட்டு கார்ல வந்து இறங்கினாங்க, தாத்தா காலமாகிட்டார்னு தெரிஞ்சதும் ஒ ன்னு அல ஆரம்பிச்சுட்டாங்க, அழுதுகிட்டே எல்லாரையும் விட்டுட்டு அவங்க மட்டும் தனியா வந்து இந்த சமாதியில் வந்து படுத்து கிட்டு ரொம்ப நேரம் அழுதுகிட்டே இருந்தாங்க.போகும்போது எனக்கு நூறு ரூபா கொடுத்துட்டு போனாங்க ரொம்ப நல்ல அம்மா அவங்க "
                                     நான் முத்தையாவின் சமாதியில் இப்போது கண்ணீர் விட்டேன். ஆம் இது உண்மையான கண்ணீர் அஞ்சலி.நானும் அந்த சிறுவனுக்கு நூறு ருபாய் கொடுத்தேன். இப்போது நான் இந்த பயணத்தையோ அதற்க்குச் செலவான ஐநூறு ருபாய் பணத்தையோ பற்றி துளி கூட வருத்தப்படவில்லை.....
                                                 ( முற்றும் )