புதன், 16 செப்டம்பர், 2009

தனித்துவம்




உலகில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு தனித்துவம் என்பது உண்டு.ஆனால் அது மற்றவர்களிடமிருந்து அதிகமாக
மாறுபட்டிருக்குமானால் அவை பிறரை கவரலாம். அதுவே சிறப்பானதாகவும்
உயர்ந்ததாகவும் இருக்குமானால் அம்மனிதனை அத்தனித்துவம் புகழின் உச்சிக்கு
கொண்டுசென்றுவிடுகிறது. இப்போது மட்டுமல்ல எக்காலத்திலும் புகழ் பெற்ற
பிரபலங்களின் நிலை இதுதான். தன்னுடைய தனித்துவத்தை பிறர் அறியச் செய்யும் போதுதான் ஒரு மனிதன் பிரபலமாகிறான்,புகழடைகிறான்.அது கீழ்நிலையானாலும் சரி,
மேல்நிலையானாலும் சரி அதற்கும் உயர்நிலையானாலும் சரி.

இப்பொது ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்போம்.நமது நாட்டில் தனித்துவம் உடைய பெரும்பாலான மனிதர்களின் ஆரம்பகட்ட அல்லது சிறு பிராயத்தில் உள்ள அவர்களின் சிறந்த, உயர்வான, தனிப்பட்ட திறமைகள் அதற்குரிய அந்தஸ்தைப் பெறுகின்றதா? என்றால் அநேகம் பேருக்கு பதில் இல்லை என்றே வரும். அது பள்ளியாகட்டும்,வீட்டில் ஆகட்டும்,சமுதயத்திலாகட்டும் எங்குமே பலரது தனித்துவங்கள் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ சிலருக்கு கவனிக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் பலரது நிலைமை கவனிப்பின்மையே!

மேலை நாடுகளில் அதாவது மேற்கத்திய கலச்சாரம் பரவிய நாடுகளில் இந்த அவல நிலை உள்ளதா? என்றால் அதற்கும் விஷயமறிந்தவர்களிடம்
இல்லை என்றே பதில் வரும்.ஏன் இந்தப் பாகுபாடு ?

நான் ஆங்கிலப்படங்கள் மற்றும் சர்வதேச மொழித் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பவன். அதில் காணும் குழந்தை வளர்ப்பு
முறை மற்றும் கல்விமுறை இவற்றை பார்த்தது தான் நான் இந்த பதிவை எழுத தூண்டியது. நீ எப்படி ஒரு கற்பனையினால் ஆன ஒன்றுக்கும் உதவாத ஆங்கில
சினிமாவை வைத்து இதைக் கூறலாம்? என்று கேட்க நினைத்தால் உங்கள் எண்ணம் தவறு. நீங்கள் நினைப்பது போல, நாம் தற்போது பார்த்து ஜீரணிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பெரும்பாலான கேடுகெட்ட,தரங்கெட்ட தமிழ் சினிமாவைப்
போல இல்லை அத்திரைப்படங்கள், அனைத்தும் உயர்ரகம். அவை அந்தந்த நாடுகளின் கலாச்சாரக் கண்ணாடிகள்.( எனென்ன திரைப்படங்கள் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பின்னர் பதிவிடுகிறேன்.)

சரி விஷயத்திற்கு வருவோம்,தனித்துவத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்கிறார்கள். அங்கே குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, நம்மவர்களைப் போல், அதிகப்பிரசங்கி என்று அதட்டுவதில்லை,தெரியாது என ஒதுங்கிவிடுவதும் இல்லை, அந்த சாமிதான் அப்படி பண்ணுச்சு என்று கதை கட்டுவதும் இல்லை. தெரியாததை தெரிந்து கொண்டு அக்குழந்தைகளின் வயதுக்கு ஏற்றது போல புரிய வைக்கிறார்கள்.அதேபோல்
சமுதாயத்தில் எது நல்லது எது கேட்டது என்று அவர்கள் போக்கிலேயே விட்டு அதை அனுபவித்து புரிய வைக்கிறார்கள்.

எடுத்துக்கட்டாக, நல்ல நாகரீகமான குடும்பத்தில் பிறந்த அமெரிக்கச்
சிறுவன் தொலைக்காட்சியிலோ அல்லது வேறெங்கோ பார்த்து தெருவோரம் வசிக்கும் மனிதர்களின் மேல் பற்று வருகிறது. தெருவோரங்களில் வேலை வெட்டி இல்லாமல்
சோம்பி இருக்கும் அம்மனிதர்களைப் போல வாழ விரும்புகிறான் அது அவனை அந்த அளவிற்கு ஈர்த்துவிடுகிறது.இதே நிலையில் நம் நாட்டில் சிறுவன் எப்படி இருப்பான்? தனியறை வாசம், அப்பாவின் பிரம்படி, சமுதாயத்தில் பழிச்சொல், பள்ளியில் புறக்கணிப்பு என்று பல விதமான அணுகுமுறைகள். ஆனால் அங்கு அப்படி அல்ல. அந்த அமெரிக்க தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெருவிற்கு வந்து ஒரு நாள் வசித்து,
அதிலுள்ள இன்னல்களைப் புரிய வைக்கிறார்கள். சிறுவன் திருந்திவிடுகிறான்.

இப்படி ஓர் சம்பவம் நடந்தது.எனக்கு விஞ்ஞானம் சார்ந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு
உண்டு. பல யோகிகள் முனிவர்கள் தெய்வங்கள் இப்படி பலதும் நமக்கு ஆன்மீகத்தில்
வழிகாட்டுகின்றன. அதில் எந்த வழி சிறந்தது என நான் பழகிவரும் நண்பர்களிடத்தே
கேட்டேன். அவர்கள் அனைவரும் படித்தவர்கள் ,தன்னடக்கம் மிகுந்தவர்கள்,
ஆன்மீகத்திலும் ஈடுபாடு உடையவர்கள்,ஆன்மீகத்தில் பெரியவர்கள் பலரிடத்தும் தொடர்பு உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து வந்த பதில் நான் அந்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை. ஆக அவர்கள் மிகப்பெரிய விஷயங்களைப்பற்றி விவாதிக்க தயங்குகிறார்கள். தன்னடக்கம் என்றாலும் ஓரளவிற்குதான் வேண்டும் அல்லவா? இதே மேலை நாட்டில் தெரிந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் தயங்குவதில்லைமேலும் அண்ட சராசரங்களையும் இளம் வயதிலேயே அலசி ஆராய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நான் எதோ திரைப்படங்களைப் பார்த்து கூறவில்லை
உண்மையிலேயே அவர்கள் அப்படித்தான் இதை பல பயணக்கட்டுரை நூல்களின் வாயிலாக தெரிந்துகொண்டேன்.குழந்தைகளாக இருப்பினும் அவர்கள் தனித்துவத்திற்கு மதிப்பளிக்கின்ற அத்தன்மையை நம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல குழைந்தைகள் தவிர மற்றவர்களின் தனித்துவம்
மிளிர, மேலை நாடுகளில் ஒரு சிற்றூர் ஆனாலும் சரி அங்கே தினசரி உள்ளூர்
செய்தித்தாள் வருகிறது.அதில் அவ்வூர் செய்திகளோடு மக்களின் படைப்புகளும் பிரசுரமாகிறது. அதோடு விளையாட்டு மன்றங்கள், தொலைக்காட்சிகள் போன்றவையும் நடத்தப்படுகின்றன. இதனால் வளரும் நிலையிலுள்ள திறமையாளர்கள் தங்களது
திறமையை மெருகேற்றிக்கொள்ள வாய்ப்பாகிறது. எங்கு சென்றாலும் கூச்சம்
பயம் இன்றி தனித்துவம் பெற ஏதுவாகிறது.அந்த நாடுகளில் உள்ள அரசும் இதற்க்கு
உதவி செய்கிறது நம்மளைப்போல் இலவச தொ கா பெட்டி, இலவச நிலம், இலவச செருப்பு, இலவச பருப்பு, இலவச அது, இலவச இது என மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கவில்லை.

ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருக்க
தூண்டல் அவசியம். அந்த செயலை அங்கு அனைவரும் செய்கிறார்கள். குறிப்பாக
பள்ளிகளில் பாடம் மட்டும் சொல்லித்தருவதில்லை அதைவிட அதிகமாக வாழ்க்கையை
வாழ சொல்லித்தருகிறார்கள். உதாரணமாக ஆலிவர் இன் லில்லிபுட் கதையை
நாம் படித்து பில் இன் த பிளாங்க்ஸ், சூஸ் த பெஸ்ட் என்று பட்டையை கிளப்பி இருப்போம். அனால் அங்கு அப்படி இல்லை. அதே கதையை மனனம் செய்து
மற்றவர்கள் முன் கதையை முக பாவத்துடன் சொல்லிக்காட்ட வேண்டும். நன்றாக கேளுங்கள் சொல்லிக்காட்ட வேண்டும் ஒப்பிதுக்காட்ட அல்ல. இப்பொது நீங்களே சொல்லுங்கள் எதில் தனித்துவம் வளரும்?

தனித்துவம் வெளிப்படையாகத் தெரிந்தால்தான் சிறு பிராயத்திலிருந்தே வாழ்க்கைப் பாதையில் சரியான வழியில் செல்ல ஆயத்தமாக முடியும். பிற்காலத்தில் அதில் வேரூன்றி புகழ்
பெற வழி கிடைக்கும். பிள்ளைகள் தங்களது தனித்துவத்தை எதில் நிலை பெறச் செய்கிறார்களோ அவர்கள் அதுவாகவே ஆகிறார்கள். இந்த சமுதாயத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொண்டு தனித்துவம் பெற ஏட்டுக் கல்வி மட்டும் போதாது, அனுபவக்கல்வியே தனித்துவம் மிளர வகைசெய்யும்.( நம் அனைவருக்கும் தெரியும் இந்த நிலை நம் நாட்டில் மாறாது என்று, அப்புறம் உனக்கென்ன வேர்த்து வடிகிறது
என்கிறீர்களா? ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன் )

ஆகவே, பெற்றோர்களே! மற்றொர்களே! ஆசிரியர்களே! முதலில் உங்கள் குழந்தைகளை தனித்துவம் மிகுந்த நல்ல மனிதனாக்குங்கள் பின்பு அறிஞர்களாக தானாகவே மாறிக்கொள்வார்கள்.



டிஸ்கி : இந்த அளவிற்கு கட்டுரை எழுத நான் அவ்வளவு அனுபவசாலி அல்ல இருந்தாலும், பல பயணக் கட்டுரைகளை படித்ததின் மூலம் நமது நாட்டினருக்கும் வெளி நாட்டினருக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு எனக்கு வயதும் இல்லை. என் மனக்குறைகளை கொட்டியிருக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.