வியாழன், 17 செப்டம்பர், 2009

மனித சஞ்சாரம்

மனித சஞ்சாரம் என்றவுடன் எதோ திகிலாக
எழுதப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நகர்ப் புறங்களில் மனிதர்கள்
அதிகமாகக் கூடும் இடங்களான பஸ் ஸ்டேசன்,ரயில்வே ஸ்டேசன்,ஜெனரல் ஹாஸ்பிட்டல்,கோவில்கள் போன்ற இடங்களில் மனித சஞ்சாரம் அதிகமாக
இருக்கும். எங்கு நோக்கினும் லொட லொட பேச்சு சப்தம்,பான்பராக், ஹான்ஸ் போன்றவற்றின் உபயத்தால் மூலை முடுக்கெல்லாம் காவி வர்ணம் பூசப்பட்டிருக்கும். அதிலும் ஹாஸ்பிட்டல்,கோவில்களில் அமைதி மட்டுமே குடிகொண்டிருக்க
வேண்டும் என்பது விதி. ஆனால் நடை முறையில் அப்படியா உள்ளது. இதன் காரணமாகவே கோவிலுக்குச் செல்வதையே வெறுத்து பிரணவப் பொருளான
அந்த ஓம்கார ரூபனை மனதினுள்ளேயே வேண்டிக்கொண்டிருக்கின்றேன்.


பொது இடங்களில் நமது நாட்டைப் பொறுத்தவரை நம் மக்களில்
( மக்கள் என்று சொல்வதைவிட மாக்கள் என்று சொல்வதே சாலச் சிறந்தது என நினைக்கிறேன். என்னையும் சேர்த்துத்தான் ) அநேகம் பேர்
விதிமுறைகளுக்கு மாறாக ஒரு ஒழுங்கோ தூய்மையோ சிறிதும் இல்லாமல்
நடந்து கொள்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.சரி மனித சஞ்சாரமே
இல்லாத இடங்களே இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.
( ஆமா! ஆமா! அதுக்குத்தான வந்துருக்கோம்! ) உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு.
நான் சென்று ரசித்த அமைதியின் சிகரமான ஆளரவமற்ற இடங்களைப்
பற்றித் தான் இதில் சொல்லப்போகிறேன்.

நான் உதகையில் கல்லூரியில் படிக்கும் போது வெளியே தனியாக அறை எடுத்து தங்கி இருந்தோம். தொட்ட பெட்டா போகும் வழியில் மேல் கோடப்பமந்து என்ற ஒரு இடம் அங்குதான் அறை இருந்தது.நண்பர்கள் அனைவரும் ஒருநாள் வெளியே சென்று சுற்றிப் பார்க்க தீர்மானித்தோம். உதகையில்
சுற்றுலாவாசிகள் பொதுவாக பார்க்கும் இடங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது.
இனி புதிதாக யாரும் அவ்வளவாக பார்க்காத இடங்களைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

அதன்படி அதே தொட்ட பெட்டா,கொத்த்தகிரி ரோட்டிற்கு
மேல் வந்தோம். அங்கு அச்சாலையின் முதல் கொண்டை ஊசி வளைவிற்கு
வலப்புறமாக ஒரு பாதை சென்றது. அதில் செல்ல நினைத்து அப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.வானம் தன் மேனியில் கருமை வண்ணத்தைப் பூசிக்கொண்டது.
பனித் தூவல்கள் ஆவியாய் எங்களை உரசிச் சென்றது. மழை, புதிதான இடத்தைப்
பார்த்த மழலை போல,வரலாமா வேண்டாமா என தூரலாகி,பெரிதாக வருவதற்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அப்பாதை சின்கிலாரீஸ் ஹோட்டல் வரை
சென்று முடிந்தது. அதன் பின் அருகிலேயே ஒரு ஒற்றையடிப் பாதை நீண்டது.
நாங்களும் அப்பாதையிலேயே சென்றோம். வழி நெடுகிலும் காட்டு ரோஜாச் செடிகள்
பூத்துக்குலுங்கின. ரோஜா வாசம் மூக்கைத் துளைத்தது. முதலில் நானும் இன்னொரு நண்பனும் சென்றோம், எங்கள் பின் இன்னும் இரு நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். சுமார் ஒரு கி மீ சென்றிருப்போம், நேராகச் சென்ற பாதை திடீரென இடது புறம் திரும்பியது. நாங்களும் இடது புறம் திரும்பிய போது அங்கு தெரிந்த
காட்சியைக்கண்டு நாங்களிருவரும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டோம். அங்கு ஒரு குளம் போன்றதொரு நீர்த்தேக்கம் எங்கள் கண்ணில் பட்டது. ஆம், மேலே படர்ந்த பனித்தூவல்கள் நீரில் பட்டு எதிரொலித்து நீரெங்கும் பால் போல வெண்மை அடர்ந்து காணப்பட்டது. நாங்கள் நால்வரும் சற்று முன்னேறினோம். இயற்கைத் தாயின் பேரெழில் எங்கள் மனதில் நிலைத்து நின்றுவிட்டது. நீர்த்தேக்கத்தின் மத்தியில் ஒரு பாழடைந்த நீர் உந்து நிலையம் இருந்தது. எப்பவோ அங்கிருந்து உதகை நகருக்கு தண்ணீர் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதற்குச் செல்ல கரையிலிருந்து அதற்குச் செல்ல சிறிய ஒரு அடி அகலம் கொண்ட பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

நங்கள் அதில் செல்ல ஆயத்தமானோம். மெதுவாக ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து சென்றோம். யாருமே அவ்வளவாக புழங்காத இடமென்பதால் இரும்பால் ஆன பாலம் துருப்பிடித்து கீழே விழுந்துவிட்டோமானால் என்ன செய்வது என்ற பயம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. எப்படியோ ஒரு வழியாக பாலத்தைக் கடந்து நீருந்து நிலையத்திற்கு வந்துவிட்டோம். அங்கே வட்ட வடிவிலான ஒரு கூண்டுபோல உள்ளே காணப்பட்டது. வட்டத்தின் ஓரத்தில்தான் நிற்க முடியும். நடுவிலே பெரிய துவாரம் இருந்தது. மிகுந்த பயத்துடன் அங்கிருந்து கரைக்கு வந்தோம். இந்த இடமே ஆள் அரவமற்றுக் காணப்படுவதால் இங்கிருப்பது சரியல்ல என்றெண்ணி அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

நாங்கள் சென்ற இப்பயணம் என் மனதில் நீங்காது இடம் பெற்றுவிட்டது. நான் மறுபடியும் தனியாக பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். அதே நீருந்து நிலையத்தில் பல மணி நேரம் இருந்திருக்கிறேன். நான் அங்கு சென்றமட்டிலும் அவ்விடத்திற்கு யாரும் வருவது இல்லை. ஒரே ஒரு முகமதியரின் சமாதி மட்டும் அங்கே உள்ளது. அங்கு சென்ற போதெல்லாம் மனம் லேசானது போல உணர்வு என்னுள் எழும். இயற்கைத் தாயின் முழுமையான அரவணைப்பில் உள்ளது போல உணர்வு அலைகள் பொங்கி எழும். கவிதை ஊற்று பெருக்கெடுக்கும். ஆஹா! என்ன ஒரு ஆனந்த அனுபவம். அதைச் சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை எனலாம். அந்த இடம் இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை.

யாருக்காவதுதெரிந்தால்சொல்லுங்களேன்!