கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

நான் யார்...?

எலும்பும் சதையுமாக
நரம்பும் தோலுமாக
ஆக்கப்பட்டவனா நான்...?
அல்லது....
அன்பும் கருணையுமாக
நேசமும் பாசமுமாக
கொண்டவனா நான்.....?

இல்லை நிச்சயமாக இல்லை...

மனிதனுக்கு இட்ட எல்லைகள்
எனக்கு கிடையாது....
எல்லையற்ற பிரபஞ்சமே
என் உறைவிடம்.....
வரையறைகள்
எனக்கும் கிடையாது
கடவுளுக்கும் கிடையாது....

ஏனென்றால்....

நான் கடவுள்..!

அன்புடன்,
Sathish Kumar

தேடல்....

ஒரு இடம்,
அங்கே நிசப்தம் மட்டுமே இருக்கும்...
இருள் மட்டுமே நிறைந்திருக்கும்....
பணம் அங்கு ஒரு பொருட்டல்ல....
காற்று கூட தேவையில்லை......
மனித பேதங்களுக்கு இடமில்லை...
நிறமும் இனமும் தேவையில்லை....
எனக்கே புரியவில்லை
நான் தேடுவது
கருவறையா.? கல்லறையா.?

Sathish Kumar

மாற்றம் ஒன்றே நிலையானது

காலம் மாறுகிறது
காட்சிகளும் மாறுகிறது
மனமும் மாறுகிறது
தினமும் மாறுகிறது
விளைவில்லா வார்த்தைகள் கூட
நொடிக்கு நொடி மாறுகிறது
மனிதனும் மாறுகிறான்
மனைவிகூட மாறுகிறாள்

உயிரில்லா பணத்திற்கு
உயிரைக் கூட தருகிறோம்
நேசித்த நெஞ்சங்களை
நிர்கதியாக்கி விடுகின்றோம்
கருப்பும் வெள்ளையாகிறது
களையும் கலைந்து விடுகிறது
இளமையது மூப்பாகும்
கைத்தடி காப்பாகும்

காலன் வந்து கரம் பிடிப்பான்
காயமதனைக் கரி திங்கும்
மேலே வானம் கீழே பூமி
நடுவில் எங்கிருந்து வந்தது சாதி
நிறமும் இனமும் வேறென்றாலும்
மனிதன் என்னும் மகத்துவம் மாறுமா.?
அன்பும் கருணையும் வழி என்றால்-உன்
வாழ்வையும் வழியையும் சரித்திரம் கூறுமே.!

மாற்றங்கள் இல்லாமல் வையம் இல்லை
வையத்து மாற்றங்கள் நம்மால் நிகழட்டும்..
ஏனென்றால்.,
மாற்றம் ஒன்றே நிலையானது.

அன்புடன்
Sathish Kumar
L

நீ...!

முதல் வரியில் மரித்துவிட்ட என் அழகிய கவிதை நீ.....!
மூன்றாம் பிறையிலேயே மூழ்கிவிட்ட என் முழு நிலவு நீ.....!
காயாய் இருக்கும்போதே கசந்திட்ட என் முக்கனி நீ.....!
கருவிலேயே கரைந்திட்ட என் இனிய மழலை நீ......!
தொடக்கத்திலேயே தொலைத்திட்ட என் மொத்த வாழ்வும் நீ... நீ... நீ...!

நினைவுகள்

இளவேனிற்காலத்து அந்திமாலை நேரம்....
சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடுகிறது.....
அன்றலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் அருகே நீ.....
அதிகாலை நேரத்து பனித்துளியாய் உன் ஸ்பரிசம்...
ஜன்னல் ஓரத்துக் காட்சிகளாய் நினைவுகள் பயணிக்கிறது.....
இருவரின் கண்களும் சங்கமிக்கிறது ஸ்பஷ்டமாக....
கைகள் மலர்க் கொடி போல பின்னிக் கொண்டன.....
இருவரின் உயிரும் கண்களின் வழியே கூடுவிட்டு கூடுபாய தொடங்கியது.....
உயிரே உணர்விற்குள் கலந்துவிட்ட போது இதழ்கள் மட்டும் ஏமாந்துவிடுமா?....

"அட பரதேசி...! மணி எட்டு ஆகுது இன்னும் எந்திரிக்காம என்னடா தூக்கம்? இவனும் இவன் வேலையும்,.... "

ஹூம்ம்.... கனவா இது..... ஓசை இல்லாமல் பாயை சுருட்ட ஆரம்பித்தேன் நான்.......

அன்புடன்,
SATHISHKUMAR. A

திங்கள், 11 அக்டோபர், 2010

அப்பா !

அப்பா !
இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு
இன்று வரையில் தெரியாது !

கடந்துவிட்டன மூன்று வருடங்கள் நீங்கள் மறைந்து,
இன்றுதான் நினைக்கிறேன் உங்களைப் பற்றி எழுத,

உங்களுடன் பயணித்த 23 வருடங்களை மெல்ல அசைபோடுகிறேன்.....

கடைசி வரையிலும் யாருக்கும் தெரியாத உண்மை
நாமிருவரும் நேருக்கு நேராய் ஒரு நிமிடம் கூட பேசியது கிடையாது,
அது என்ன மரியாதையா ? பயமா? குரோதமா? தெரியாது!
ஆனால் நாம் அப்படித்தான் இருந்தோம்!

எனக்கு நன்றாய் நினைவிலிருக்கிறது...
என் குழந்தைப்பருவமும் நான் வளர்ந்ததும்
கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் தண்டிப்பு என்றுதான் இருந்தன

நான் ஆறாம் வகுப்பிலிருக்கும்போது உங்களை இதய நோய் ஆட்கொண்டது
அனைத்தையும் நிறுத்திவிட்டீர்கள் புகைப்பதைக் கூட- ஆனால்
உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் மறந்தேவிட்டீர்கள்.
அன்றிலிருந்தே எனக்கு உங்கள் மீது கோபம்தான்
எதற்க்கெடுத்தாலும் மோதிக்கொள்வோம் பரம வைரிகளாய் !

மேல்நிலை முடிந்து பட்டம் பயில உதகை சென்றேன்
என்னுடம் மூச்சு வாங்க மலை ஏறி வந்தீர்கள்
உங்கள் இதயம் பற்றி கவலைப்படாமல்,
அப்போது என் கல் நெஞ்சத்திலும் ஈரம் கசிந்தது உண்மை.



கோவையில் வேலை செய்தேன். சம்பளத்தை எப்போதாவது
வீட்டிற்கு கொடுப்பேன் அதையும் அம்மாவிடம்தான்
நான் எப்போதாவது உங்களுக்கு ஒரு நூறு ரூபாயை
தரும்போதெல்லாம் உங்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை உணர்ந்தும்
உணரமுடியாத பாவியாக இருந்தேன் அப்போது,


பின் சென்னையில் பிரபல மோட்டார் கம்பெனியில் வேலை
என்னைப் பார்க்க வந்த இரண்டு முறையும் உங்கள்
கண்களில் தெரிந்த பெருமையையும் ஆனந்தத்தையும் பிரமிப்பையும்
எடை போடத்தெரிந்த என்னால் உங்கள் மனதில் உள்ள பாசத்தை
எடை போட முடியவில்லை.


அப்பா ! நான் உங்களுக்காக மகன் என்ற முறையில் எதுவுமே செய்ததில்லை
ஆனால் நீங்கள் எனக்கு செய்த கடனை நான் எப்படி அடைப்பேன்?


அப்பா ! இப்போது உங்கள் தேவையை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன்
அதற்க்கான பக்குவமும் வயதும் புரிதலும் இப்போது என்னிடத்தில்
ஆனால் இதனைக் காண நீங்கள் இல்லையே ?


நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
உங்களின் அருமை உங்கள் மறைவிற்கு பின்தான் எனக்கும் தெரிந்தது,
நீங்கள் உலகத்தை அறிந்திருக்கவில்லைதான் ஆனால்
உலகம் உங்களை அறிந்து கொண்டததேன்னவோ உண்மைதான்,


அப்பா ! உங்கள் மரணப் படுக்கையில் கூட என்னால் உங்களுடன்
அதிக நேரம் இருக்க முடியவில்லை,


அப்பா ! உயிர் கொடுத்தீர்கள் உங்களை நேசிக்கும் உள்ளத்தை
ஏன் அப்போதே கொடுக்கவில்லை ?

உங்களைப் போலவே பாசத்தை மட்டுமல்ல எந்த உணர்ச்சிகளையும்
என்னால் நேரடியாக வெளிக்காட்ட முடியாதுதான்,

இப்போதும் சொல்கிறேன் நான் எரிமலை அல்ல
பாலைவனச்சோலை.....


அப்பா ! இதை எழுதுவது ஏதோ பக்கங்களை
நிரப்புவதற்காக அல்ல உங்களின் நினைவு முட்கள்
குத்திக் கிழித்த என் இதயத்தை குணப்படுத்த.....

- S -

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஒரு அழகிய தமிழ் மகளின் டைரிக்குறிப்பில்.....

பொதுவாக அடுத்தவர்களின் டைரியைப் படிப்பது நாகரீகம் இல்லை என்றாலும் பழைய பேப்பர்காரனின் பையில் இருந்த டைரியை படித்ததில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் எனக்கு ஒரு பெண்ணின் டைரியை படிக்கும் பாக்யம், இல்லை வாய்ப்பு கிட்டியது சுவாரசியமாக ஏதும் இல்லை என்றாலும் அதிலிருந்த ஒரு கவிதை நன்றாக இருந்ததால் அது உங்கள் பார்வைக்கு......


என்னவனே !
உன் பெயரை உச்சரிக்கிறேன்
என்னுள் ஏற்ப்படும் மாற்றத்தை உணர,
எல்லா உறவுகளுக்கும் எல்லை வரையறுக்கும் என்னால்,
உனது உறவுக்கு எல்லையிட தெரியவில்லை, முடியவில்லை,
இருவரின் எண்ணங்களைப் பார்க்கிறேன்
இதுதான் விட்டகுறை தொட்டகுறையோ,
எனக்கு ஓர் தணியாத ஆசை
என் கண்களுக்குள் உன்னை சிறை வைக்க,
பார்த்து பழகியது சில மாதங்கள் என்றாலும்
வாழ்ந்து முடிந்த பல வருடங்கள் கண்முன்னே,
உனது வெற்றிக்கு பின்னால்
நானிருக்க ஆசையில்லை
உனது வெற்றியாகவே நானிருக்க ஆசை,
உனக்கு தெரியுமா ? நான் ஒரு சுயநலவாதி!
என்னைத் தவிர உன்னை யாரும் நேசிக்க கூடாது என்பதில்,
இது தப்பில்லை அன்பை இப்படியும் காட்டலாம்
என்ற எனது கருத்தின்படி,  
உன் நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்த என்னை
உன்னையும் சுமக்க அனுமதிப்பாயா?
உனக்குத் தெரியும் எனக்கு
கவிதை எழுத தெரியாது என்று
இதை உனக்காக முயற்ச்சித்தேன்
எனக்கு தெரியவில்லை இது கவிதையா?.....

அன்புடன்.,
அழகிய தமிழ்மகள்.

                                          

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஒ இதுதான் காதலா ?


அன்பு நண்பர்களே!
மற்றுமொறு நான் எழுதிய கவிதையிலிருந்து ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.அந்த ஒன்றுதான் காதல்.இந்த உலகத்தில் காதல் வயப்படாதவர்களே இல்லை எனலாம் அல்லவா? நானும் அந்த வலையில் விழுந்தவன் என்று இங்கு கூறினால் அது முழுக்க முழுக்க பொய் என்று ஆணித்தரமாக கூறலாம்.அனால் அந்த நிலையை கடந்து வந்தேன் என்றால் அது ஓரளவிற்கு உண்மை எனலாம்.அச்சூழ்நிலையில் நான் எழுதிய கவிதைதான் இது.பாருங்கள் ஒரு காதல் கடிதத்தை உயிரெழுத்தில் வடித்திருக்கிறேன்.

ருந்தமிழ்க் காவியமே !
னந்த நாட்டியமே !
யம்புகின்றேன் இன்று எனது காதலை
ந்து விடு நாளை நல்ல முடிவை
ன் மனதில் நான் என்று நீ நினைத்தால்
ருக்குத் தெரியாமல் உரைத்துவிடு கடிதத்தில்
ன் மனதில் நீ இல்லை என்று நீ கூறினால்
ன் என்று கேட்க நான்
நா சபையும் அல்ல அரசியல்வாதியும் அல்ல
ருக்கால் நீ இதை ஏற்காவிட்டால்
டிவிடு உன் படிப்பு வீணாகும்
டதம் போலத்தான் வாழ்க்கையும்
அகுதை நினைத்தே இனி என் பயணமும்...........

காதல் செய் !
காதல் மட்டும் செய்யாதே !
இந்த பொன்மொழியுடன் நான் எழுதிய ஒரே ஒரு காதல் கவிதையை எனக்கு என்னவென்றே தெரியாத நான் இன்றுவரை புரிந்து கொள்ள முடியாத காதலுக்கு உங்கள் முன் பணிவன்புடன் சமர்பிக்கிறேன்.
இல்லாத காதலுடன்...........
- அ சதிஷ் குமார்

புதன், 19 ஆகஸ்ட், 2009

நினைவுகள் ( இது கவிதை மாதிரி ஆனா....... )


அன்பு நண்பர்களே !

நினைவுகள் என்றும் அழியாதவை அவை என்றும் பேசுவதில்லை .இரவின் மடியில் நாம் விழித்திருக்கும் போது தென்றலாய் வந்து நம்மைத் தாலாட்டும் .அந்தி மாலைப் பொழுதுகளில் நம் வீட்டு ஜன்னல்களை வெறித்திருக்கும் போது சூன்யமாய் வந்து நமக்குச் சுகம் தரும் .நம் உயிரும் உள்மனதும் உள்ளவரை நினைவுகள் என்றும் அழிவதில்லை . அவை என்றும் பேசுவதும் இல்லை . சில நேரங்களில் அவை எழுத்துக்களில் மிளிரவும் செய்யும் இதோ இந்தக் கவிதையைப் போல..............


அது ஒரு கனாக்காலம்

ஒற்றைக்கால் சட்டை யோடு உலகம் சுற்றி
காடுகளின் காதலனாக
கண்மாய்களின் காவலனாக
களிப்புடன் காலத்தைக் கழித்த காலம் அது !

பள்ளியில் வாத்தியாரின் பிரம்படி வைபவம்
வீட்டில் அப்பாவின் அதிரடி தாண்டவம்
அனைத்தையும் மறந்து வீட்டின் முற்றத்தில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணி நாள் கழித்த காலம் அது !

வீட்டிலே முக்கனிகள் நிறைந்திருக்க
மாற்றான் தோட்டத்தில் மாங்கனி திருடி
உற்றவன் அறியாமல் மற்றவர்களோடு பகிர்ந்து
மந்தகாசமாய் உண்டு களித்த காலம் அது !

கரியை அரைத்து கரும்பலகையிலிட்டு
வாய்ப்படுகளின் வகை பயின்று வண்ணமயமாய்
வகுப்பில் மிளிர்ந்து - சிந்தனையைச்
சிலேட்டில் கொட்டித் தீர்த்த காலம் அது !

இவற்றை எண்ணி எண்ணி நான் பார்த்திருக்க
எட்டும் எட்டும் பத்தென்று தப்பாய்க்கூட்டி
உயர் அதிகாரியை பயர் அதிகாரியாக வைத்து
என்றும் நான் நினைக்கும் இனிய கனாக்காலம் அது !

ஆம் , அது ஒரு கனாக்காலம் !

நெஞ்சில் தைத்த நினைவு முட்களுடன் ..................
அ சதிஷ் குமார்.