சமூகப்பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகப்பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

மனதோடுதான் நான் பேசுவேன்...- பகுதி - 2

இன்றைய இளைய சமுதாயம்.

அன்பு நண்பர்களே !
                                     இன்றைய நவீன உலகில் இளைய சமுதாயம் முன்னேறியுள்ளதா ? அல்லது சீரழிந்துவிட்டதா ? என்று கேட்டால் நாம் இரண்டுவிதமான பதிலைக் கூற வேண்டியதிருக்கும். அறிவுசார் துறைகள்,விஞ்ஞானம் போன்றவைகளில் கண்டிப்பாக இளைஞர்களின் பங்கு அபரிதமான நிலையில் உள்ளது. ஆனால் நம் நாட்டின் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் மிகவும் சீரழிந்துவிட்டது என்பது கசப்பான உண்மையே ! நானும் ஒரு இளைஞன் என்ற முறையில் காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்த்தால் 2000  வது ஆண்டிலிருந்தே இந்த புரட்சி ராக்கெட் வேகத்தில் பயணித்தது எனலாம். பொறியியல் படித்துவிட்டு அரசாங்கவேலைக்கு மனுப்போட்ட காலம் போய் அமெரிக்காவிற்க்கு விசா வாங்கும் காலம் மாறியது.அதுவும் இந்த கணிப்பொறி காலம் வந்தபிறகு வெள்ளைக்காரன் கொடுக்கும் அரைச் சம்பளத்திர்க்கு மாவரைக்கும் கால் சென்டர் வேலையும், மென்பொருள் துறையும் இங்கேயே நமது நாட்டிலேயே பரவத் தொடங்கின. இவர்கள் வந்தது யாருக்கு லாபம் என்றால், பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கொடுப்பவர்களுக்கும், அங்கு சில்லறை வியாபாரம் செய்பவர்களுக்கும் மட்டும்தான் ஏனென்றால் வெளிநாட்டின் அரைச் சம்பளம் நமக்கு பொக்கிஷம் போல இருக்கிறது.இதை செய்த புண்ணியவான்கள் இன்னொன்றையும் செய்தார்கள் அதுதான் கலாச்சார சீரழிவு. அதற்க்கு இவர்கள் மட்டுமே காரணம் என்று நான் சொல்லவில்லை. இவர்களும் முக்கிய காரணம் என்று சொல்கிறேன்.
                                    வாழ்க்கைக்கு தேவையான ஊதியத்தை விட பலமடங்கு கிடைத்ததாலும் பணி செய்யும் சூழ்நிலை மாற்றத்தாலும் யாரும் அறியாமலேயே இவர்களுக்குள் கலாச்சார மாற்ற புற்றுநோய் அதீதமாக பரவத் தொடங்கியது. இந்த மாற்றம் ஒருவகையில் உலகளாவிய மனித சமுதாயம் என்னும் உயர்ந்த பண்பை தோற்றுவித்தாலும், இந்தியக் கலாச்சாரம் என்னும் முறை அழிய காரணமாகவும் உள்ளது.  
                                      பணிபுரியும் சூழல் மிகுந்த மனச்சோர்வை ஏற்ப்படுத்துவதாலும் மிதமிஞ்சிய பணப்புழக்கத்தாலும் இவர்கள் மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை ஏற்ப்படுத்தும் வழியை நாடவேண்டியுள்ளது. அதன் விளைவுதான் பெருநகரங்களில் இருக்கும் பப், டேட்டிங்,டிஸ்கோதே போன்ற மகோன்னதமான விளைவுகள். நான் ஏன் மகோன்னதம் என்று சொல்கிறேன் என்றால் இவை அனைத்தும் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதியான பழக்கங்கள்.அவர்கள் இந்த மாதிரியான பழக்கங்கள் ஏன் கொண்டுள்ளார்கள் என்றால் சீதோஷ்ண நிலை சார்ந்த இயற்க்கை சமன்பாடுகளை நிலைப்படுத்தத்தான். அது எப்படி என்று பார்க்கப் போனால் நான் உங்களுக்கு ஒரு மானுடவியல் வகுப்பு எடுக்கவேண்டியதிருக்கும், அதை பின்னர் பார்க்கலாம்.  
                                   இப்போது நான் ஒன்று சொல்கிறேன், தங்களை புத்திசாலிகள் என்று எண்ணிக்கொள்வது இவர்களின் தலையாய கடைமைகளில் ஒன்று. சரி நீங்கள் சிட்டியில் வளர்ந்துவிட்டீர்கள்,மிக சாளரமாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,கம்ப்யூட்டர் போன்ற சில உபகரணங்களை இயக்கத் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இதனாலெல்லாம் நீங்கள் புத்திசாலி ஆகிவிட்டதாக அர்த்தமா ?
                                      உங்களைப்போன்ற ஒரு நகரத்து இளைஞன் தனது கிராமத்து ஆசிரியருடன் பிரயாணம் மேற்கொண்டான்.இந்த இளைஞன் தனது உலக ஞானத்தை தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பினான். அதற்காக பார்க்கும் விஷயத்தை எல்லாம் பயங்கரமாக விளக்கிக்கொண்டிருந்தான். இரவு வேளை வந்தது கூடாரம் அமைத்துக் கொண்டு இருவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள் நடுஇரவில் திடீரென்று இளைங்கனுக்கு விழிப்பு வந்தது, ஆசிரியரை எழுப்பினான்.
                                      " ஐயா மேலே பாருங்கள் என்ன தெரிகிறது ?"
                                      " நட்சத்திரங்கள் " என்றார் ஆசிரியர்.தூக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலுடன்.
                                      " ஐயா அப்படி அலட்சியமாக சொல்லாதீர்கள். ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே தென்படுகின்றன என்று தெரிந்து நான் இரவில்கூட திசைகளை அறிந்துகொள்ளலாம்." என்று இளைஞன் தனக்கு தெரிந்த நட்சத்திர விசயங்களை எல்லாம் பெருமையாக விளக்கிக் கொண்டிருந்தான்.
                                        ஆசிரியர் அவனை நிறுத்தினார்.
                                         " உனக்கு வேறு என்னென்னவோ தெரிகிறது.எனக்குப் புரிவது ஒன்றே ஒன்றுதான்.வானமே தெரிகிறது என்றால்,நம் கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்."
                                         அவர்களைப்போன்றவர்கள் பள்ளியில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள். மற்ற சிலர் வாழ்க்கையில் கற்றதை வைத்து புத்திசாலியாக இருக்கிறார்கள்.


                                                                                     ( இன்னும் பேசுவேன்.....)
 

 
 
 
                                      
                                 

சனி, 29 ஜனவரி, 2011

மனதோடுதான் நான் பேசுவேன்... - பகுதி 1

அன்பு நண்பர்களே !
                                இந்த நாள் வரை எனக்கு தெரிந்ததை, பார்த்ததை, பழகியதை, கேட்டதை, படித்ததை, அறிந்ததை, புரிந்ததை, உணர்ந்ததை உங்களுடன் இந்த இணைய உலகில் பகிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அதன் வெளிப்பாடுதான் இந்த மனதோடுதான் நான் பேசுவேன் இடுகை. மனிதர்கள் பலவிதம் மாற்றம் நிறைந்த இந்த பிரபஞ்சத்தில் மனித மனங்களைப் பற்றியும் அதன் பண்பாட்டு உட்கூறுகளைப் பற்றியும் விவரிப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். காத்திருங்கள் எதிர்வரும் நாட்களில் உங்கள் மனதோடும் நான் பேசுவேன்......
                                 எந்த ஒரு நிகழ்வானாலும் அது இறைவணக்கத்தைக் கொண்டிருக்கும்.அதுபோல நானும் ஆரம்பிக்கிறேன். ஆன்மீகத்தையும் இயற்கையையும் இணைந்து பார்ப்பது நம் பண்பாட்டில் ஊறிவிட்டது அதுவே நிதர்சனமான உண்மையும் கூட இருந்தபோதிலும் சிலர் சொல்கிறார்கள் கடவுள் இல்லை என்பவர்களுக்கு போதிக்கவே இயற்கை சீற்றங்கள் வருகிறது இப்போதைய சூழ்நிலையில் நாஸ்திக வாதங்கள் தலை தூக்கி வருகிறது அதனால்தான் உயிர் பலிகள் அதிகரித்துவிட்டது என்கிறார்கள்.சரி பொதுவாக நம் பழக்கம்தான் என்ன? நமக்கு பாதிப்பு வந்தால் கடவுளிடம் அழுது புலம்புவது, இனிமேலாவது என்னை  காப்பாத்து என்று வேண்டிவிட்டு பழையபடி
அதே முட்டாள்தனத்தை தொடர்வது. ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு குடும்பத்திற்கே மொட்டை போட்டுவிட்டால் கடவுள் உன்னை காப்பாத்த வேண்டும் என்று என்ன சட்டமா?
                                   கடவுள் உண்டியலில் காசு போட்டுவிட்டான் என்பதற்காக காப்பாற்றவும் மாட்டார், போடாதவர்களை தண்டிக்கவும் மாட்டார்.
                                   நாம் என்ன செய்கிறோம்? " எல்லாம் மேல ஒருத்தன் இருக்கானே அவன் பார்த்துக்குவான் " அப்டின்னு யாரோ சொன்னத நம்பி நம்மள நாமே ஏமாத்திக்கறோம், கடவுளுக்கு அத பண்ணலாமா இத பண்ணலாமா? எத பண்ணினா கடவுள் சந்தோஷப்பாடுவாரு அப்டின்னு யோசிக்கறோம்.
                                   கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நம்மை இவ்வளவு சிறப்பாக படைத்திருக்கும் வேலையை செய்திருக்கிறாரே அது ஈடு செய்ய முடியாத சாதனை அல்லவா? அதை பயன்படுத்திக் கொண்டு நமக்குத் தேவையானவற்றை நாம்தானே தேடிக்கொள்ள வேண்டும். யாராவது எதையாவது சொல்லிவிட்டால் அவற்றை   கண்ணை   மூடிக்கொண்டு முட்டாள்தனமாக யோசிக்காமல் பின்பற்றுவது நம் பழக்கமாக இருக்கிறது.
                                    ஒரு கதை ஒரு ஆபீசில மூணு பேரு தினமும் ஒன்னாதான் மதியம் லஞ்ச் சாப்டுவாங்க. அதுல ஒருத்தர் சொன்னாரு " பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே புளியோதரைதான் நாளைக்கும் இதே புளியோதரை இருந்தா நான் என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னார்.
                                    அடுத்தவர் சொன்னாரு " அதே கதைதான் இங்கயும் பத்து வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே தயிர்சாதம்தான் நாளைக்கும் இதே  தயிர்சாதம் இருந்தா நானும் என் தலையை உடைச்சுக்குவேன். "
                                    அடுத்து நம்ம ஆளு சொல்றாரு " எனக்கும் அப்டித்தாங்க, பனிரெண்டு வருஷமா மதியம் டப்பா திறந்தா இதே இட்லிதான் நாளைக்கும் இதே  இட்லி  இருந்தா நானும் உங்களோட சேர்ந்து என் தலையை உடைச்சுக்குவேன் " அப்டின்னு சொல்றாரு,
                                    அடுத்த நாளு பார்த்தா மூணு நண்பர்களின் டப்பாக்களிலும் உணவு மாறவில்லை வழக்கம்போல அதே புளியோதரை தயிர் சாதம் இட்லி தான். பாத்தாங்க மூணு பேரும் நல்ல பாறாங்கல்லா பாத்து தலையில முட்டி மண்டைய உடைச்சுக்கிட்டு மருத்துவமனையில போய் படுத்துகிட்டாங்க, மூணு பேரோட  மனைவியும் வந்தாங்க, ஒருத்தி " என் வீட்டுகாரரு இந்த அளவுக்கு  புளியோதரையை வெருத்திருப்பாருன்னு தெருஞ்சா நா வேற கொடுத்திருப்பனே ! " அப்டின்னு அழுதா, அடுத்தவள் " நானும் அது தெருஞ்சா இந்த தயிர் சாதத்த விட்டுட்டு வேற செய்து தந்திருப்பனே" அப்டின்னு சொன்னா
                                     அடுத்து நம்ம ஆளு மனைவி " இதுல தப்பு எங்க நடந்திருக்குன்னு தெரியல, கல்யாணமான நாளிலிருந்து தினமும் அவருக்கு தேவையானதை அவரே தான சமைச்சு எடுத்துட்டு வந்தாரு "
                                       நம்ம ஆளைப்போலதான் நாமும் நாம் விரித்தவலையில் நாமே மாட்டிக்கொள்கிறோம். ஆக நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.அது ஆன்மீகமாகட்டும் வேறு எந்த துறையாகட்டும் நமக்கு நாம்தான் நண்பனும் எதிரியும் என்பதை நினைவில் கொண்டு சரியான புரிதலுடன் வாழ்க்கையில் பயணிப்போம்.

டிஸ்கி :
                 பத்திரிகை உலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், பதிவுலகில் பதிவரின் அனுமதி இல்லாமல் அவரின் படைப்பை திருடுவது என்பது பெற்ற தாயிடம் இருந்து குழந்தையை திருடும் செயலுக்கு ஒப்பானது. நாங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் உங்களுக்கு எப்படியோ தெரியாது, நாங்கள் எங்கள் குழந்தையைப் போல்தான் பாவிக்கின்றோம். ஆக அனுமதி இல்லாமல் எதையும் பிரசுரிக்க வேண்டாம் என்றும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

( இன்னும் பேசுவேன்........  )

வியாழன், 27 ஜனவரி, 2011

இன்றைய இளைஞன் - ( இதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை )


சமூகத்தின் பிடிப்பற்ற தன்மையும் தூரநோக்கற்ற குறுகிய இலாப சிந்தையும் பலரிலும் மேலோங்கிக் காணப்படுவதனாலேயே இளைஞர் சமூகம் இன்றும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
எந்த வேளையிலும் பிறருக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இன மத மொழி பேதமின்றி சேவை வழங்க முன்வரும் வேளையில் நல்லதொரு எதிர்காலம் தானாக வந்தடைவதற்கு வழி கிடைக்கும். முதலில்  சோம்பேறித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும. அரசியல் இதற்க்கு சிறந்த வழி. ஆனால் இன்றைய இளைஞர் சமுதாயம் இதற்க்கு தயங்குகிறது. ஏனென்றால் படித்த இளைஞர்கள் அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும். ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ ,அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். இப்போது    ஒரு சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும் அரசியலில் இருப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்களா?  இதற்க்கு பதில் எனக்கு தெரியாது எனக்கேன் வம்பு.
  இளைஞர்கள் எதையும் சாதிக்கமுடியும். உலகில் 300 கோடி இளைஞர்கள், இந்தியாவில் 40 கோடி இளைஞர்கள் உள்ளனர். இளைய சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. புதியோர் உலகை படைப்பது இளைஞர்களின் கையில்தான் உள்ளது.
பெரியவர்கள் அமைதி கருத்தரங்கம் நடத்திவிட்டு பின் சண்டையிடலாம். ħ0;னால் இளையவர்கள் எல்லைகளைத்தாண்டி பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பவர்கள்.
நவீன தொழில்நுட்ப யுகம் நாடுகளைத்தாண்டி மனிதர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதம்,பிரிவினைவாதம்,போர்,தண்ணீர் பற்றாக்குறை, தட்பவெப்ப மாறுதல்,வறட்சி போன்றவற்றை எதிர்த்து நாம் தொடர்ந்து போராடவேண்டிய நிலையில் உள்ளோம்.மேலும்
மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி வறுமைதான். கொடிய ஆயுதங்களை விட வறுமையும் மிகவும் கொடியது. அணு ஆயுதம் அறவே இல்லாமல் அகற்றி இந்த பூமியை அமைதியின் மடியில் தவழவிடவேண்டும். வறுமை, அணு ஆயுதம் இல்லாத உலகை இளைஞர்கள் உருவாக்க வேண்டும்.
வருங்காலம் இன்றைய இளைஞர்கள் கைகளில் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல.... வாழ்க்கை யதார்த்தமும் அதுதான். ஆனால இந்த வரிகளை உணர்ந்தவர்களாக அத்தனை இளைஞர்களும்
உள்ளனரா? கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏன் இந்த முரண்பாடு.
எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்.மகிழ்வாய் இருக்கவேண்டிய வயது என இளைஞர்கள் நினைக்க துவங்கி விட்டனர்.ஒருசிலர் மட்டுமே தங்கள் கடமை இது அல்ல என உணர்ந்து செயல் படுகின்றனர்.இதற்கு என்ன காரணம்.சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும். சரியாக சிந்திக்காத ஒன்றே இதற்கு காரணம் என்று.அதனால்
இளைஞர்கள் நல் எண்ணங்களை மேம்படுத்த வேண்டும் கட்டாயமாக.
 இளைஞர்கள் எந்தவொரு சமூகத்தினதும் மிகப் பெரும் பலமாக உள்ளனர். முழு மனித வாழ்விலும் இளமையே அதி முக்கியமான பருவமாகும். நண்பகலில் நடுவானில் தோன்றும் சூரியனின் ஒளிக் கதிர்கள் போன்று புதுமையும் சக்தியும் கொண்ட அவர்களே ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். இளைஞர்களைப் பயிற்றுவிப்பதிலும் பண்படுத்துவதிலுமே ஒரு சமூகத்தின் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது

                                    நம் நாட்டில் தற்போது நாம்  மிகப்பெரும் சவால்களை சந்திக்கத் தயாராகĬ7;க் கொண்டிருக்கிறோம். இதை எதிர்கொள்ள தொழில் நுட்ப அறிவு கொண்ட இளைஞர் சமுதாயம் அவசியம்.இதற்க்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜூலியன் அசாங்கே ஒரு சில நாட்களிலேயே ħ3;லகத்தை தன் பக்கம் திரும்ப வைத்தவர்.அவரிடம் இருக்கும் நல்ல விஷயத்தை மட்டும் பாருங்கள் எவ்வளவு பெரிய தொழில்நுட்பம், உலகில் உள்ள தலைகள் எல்லாம் எங்கே நம் weak கும் leak ஆகி விடுமோ என்று கலங்க வைத்தவர்.  அவரிடம் உள்ள ஒன்றுதிரட்டும் சக்தியை பாருங்கள். இதைப்போல நம் இளைய சமுதாயம் மாறவேண்டும்.இந்தியாவின் புதிய சரித்திரம் இளைங்கர்களின் கைகளில்தான் உள்ளது. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இவன்தான் இளைஞன் என்று உலகம் கொண்டாடவேண்டும்.என்று கூறி நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் நன்றி கூறி அமைகிறேன்.நன்றி வணக்கம்!    

திங்கள், 4 அக்டோபர், 2010

ஊழலின் மறுபெயர் இந்தியா....

                                                                         கடந்த நூற்றாண்டுகளில் மக்களாட்சி நாடுகளில் அரசியல்வாதிகளின் ஊழல் மிகப்பெரிய விஷயமாகி பல தேர்தல்களில் அப்படிப்பட்டவர்களைக் களைந்துவிட்டு நல்லவர்களை நேர்மையானவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கமாக இருந்தது. இந்தியாவில் மட்டும் ஆளும்கட்சி ஊழல்   அரசியல்வாதிகளைப் பற்றி எதிர்கட்சியினர் வாய்கிழியப் பேசிவிட்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இவர்களும் ஊழலில் ஈடுபடுகிறார்கள் எனும் நிலைமை உருவானது.
                                                                             கடந்த காலங்களில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளால் ஊழலில் ஈடுபட முடியாதபடி கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.நாளடைவில் பொறுப்பான அதிகாரிகளை இடமாறுதல் செய்து ஆளும்கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு ஊழலில் ஈடுபடத்துவங்கினர். இந்த சூழ்நிலையில் எல்லா அரசியல் கட்சிகளும் இந்த ஊழல்களில் பாதிக்கப்பட்டன.
                                                                               நாம் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.அரசியல் கட்சிகள் இல்லாமல் நாடாளமன்ற மக்களாட்சி கிடையாது. அதனால்தான் வெளி நாடுகளில் ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகமான வேலையும் முக்கியத்துவமும் ஏற்ப்படும். நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இது புரியவே புரியாது.          
                                                                               பாராளமன்றம் செனட் போன்ற மன்றங்களில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அரசின் நடவடிக்கைகளை கவனமுடன் ஆராந்து விமர்சனங்களை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.இதனை ஆளும்கட்சி கவனமுடன் பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இதில் சரியாக செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் தோல்வி உறுதி.என்கின்ற சூழ்நிலை ஐரோப்பாவின் பலநாடுகளிலும் உண்டு.
                                                                                  ஆனால் சென்ற சில ஆண்டுகளாக "உலகெங்கும் காணாத வகையில் பணம் எண்ணும் வஸ்த்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதை இந்தியா மண்ணில் காண்பதாக " உலகின் பல அரசியல் விமர்சனர்களும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது பணம் இல்லாமல் தேர்தல்களில் யாராலும் வெற்றி பெற முடியாது என்ற சூழல் உருவாகி உள்ளது.அதிலும் பணம் செலவழித்து தேர்தலில் வென்ற பின்னர் அதை திரும்ப எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி உள்ளதாக அவர்கள் கூற தொடங்கி உள்ளனர்.
                                                                                      அதாவது மேலே கூறிய விஷயங்களின் அடிப்படையில் " பணம் படைத்தவர்களும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் தேர்ந்தெடுக்கப் படுவது நியாயம்தான் " என்று கட்சிகள் நினைக்கின்றன. அதை ஆமோதிக்கும் வகையில் மக்கள் தாங்கள் ஓட்டளிக்கும் போது வேட்பாளர்களிடம் பணத்தை எதிபார்க்கிறார்கள்.
                                                                                        எனவே ஊழல் நிறைந்த அரசியலமைப்பில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியுமா என்பதும் பொதுத் தேர்தல்கள் தவறான அரசியல்வாதிகளைக் களைஎடுக்குமா என்பதும் விடை தெரியாத கேள்விகளாகி நம்மை பயமுறுத்துகின்றன.                              

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .....

                                         நம் நாடு சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், இன்றும் மக்கள் அடிமைகளாக வாழ்ந்துவரும் அவலநிலை உள்ளது.ஒரு வித்தியாசம் அன்று ஆங்கிலேயர்களிடம், இன்று நம் நாட்டவரிடம்.நினைத்துப் பாருங்கள் நாட்டின் இன்றைய சூழலை, வாக்கு வங்கி அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் நம் நாட்டிற்கே சாபக்கேடு.இதற்க்கு ஒரு உதாரணம் அப்சல் குரு என்ற கொடிய தீவிரவாதி நம் நாட்டின் இதயமான பாராளமன்றத்தில் தாக்குதல் நடந்ததில் தொடர்புடையவன் இவனை விசாரித்து குற்றம் நிரூபனமானத்தில் 2006 அக்டோபர் 2 அன்று தூக்கில் போட உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். ஆனால் இன்றுவரையில் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.இது மற்றவர்களுக்கு இந்தியாதானே என்ற அலட்சியத்தி ஏற்ப்படுத்த வழிவகுக்கும்.இந்த நிலையில், அப்சல் குரு சார்பில், அவரது மனைவி சமர்ப்பித்த கருணை மனு மீது குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை தெரிவிக்கக் கோரி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள , உள்துறை அமைச்சகம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்சல் குருவின் கருணை மனு மீது குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க முடி யாது என மறுப்பு தெரிவித்துவிட்டது.வாக்கு வங்கிதான் நாட்டின் இறையாண்மையா?
                                            அடுத்து இந்த தமிழக அரசை எடுத்துக் கொண்டால், சொல்லவே வேண்டாம் மதானிக்கு கட்டிய கருணை பற்றி அனைவரும் அறிந்த விஷயம்.இங்கு என்ன நடக்கிறது வெறும் கையில் முழம் போடும் வேலை நடக்கிறது. அரிசிதான் ஒரு ரூபாய்தான் ஆனால் அது சில ஏழை மக்களுக்கு மட்டும்தான். பலருக்கு கோழிகளுக்கு தீவனமாகவும், பல ஹோட்டல் முதலாளிகளுக்கு லாபம் கூட்டும் பொருளாகவும், பல அரிசி வியாபாரிகளுக்கு மறுபடி பாலீஷ் செய்து விற்று மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு கடத்தி கொண்டு சேர்த்து கேவல காசு ஈட்டும் பொருளாகவும் உள்ளதே! தமிழக முதல்வர் அவர்களின் மனம் அமெரிக்க வானிலையைப் போல மாறிக்கொண்டே உள்ளது. நல்ல குடும்பத்தலைவர்.அதுவும் இரண்டு குடும்பத்திற்கு தலைவர்.கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்...... என்று ஆரம்பிக்கும் பழமொழி போல சட்டசபை கட்டிடம் கட்டினார். அதுவும் முழுமையாக இல்லாமல் போலி துவக்க விழா நடத்தி அவருக்கு அவரே பாராட்டுவிழா  நடத்தினார்.தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாதபடியாக தமிழ் நாட்டில் ஆட்களே கிடைக்காதபடியால் வடக்கிலிருந்து மக்களைக் கூட்டிவந்து அதை கட்டி முடித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து குடும்பத்தோடு போட்டு அதற்க்கு ஒரு ஐ ஏ எஸ்  ரேங்க்கில் உள்ள அதிகாரி டப்பாங்குத்து ஆட்டம் ஆடி மகிழ்வித்து, கடவுளே! தமிழ் நாட்டிற்கு எப்போது விமோசனம் ? அவனவன் மின்சாரம் இல்லாமல் தொழில் நடத்த முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கிறான். இந்த வேளையில் இந்த காட்சிகளை எப்படி சகித்துக் கொள்வது?
                                     அது மட்டுமில்லாமல் இன்னொரு கேலிக்கூத்து என்னவென்றால், ஒரு மொழிக்காக மாநாடு நடத்தினார்கள் அத்துனையும் அரசின் பணத்தில்  நடத்தினார்களே, சரி அதனால் அந்த மொழி அடைந்த பயன் என்ன? அம்மொழி பேசும் மக்கள் அடைந்த பயன் என்ன? யாராவது சொல்லமுடியுமா ? ஒரு கட்சியை சார்ந்த வட்ட மாவட்ட ஒன்றிய வார்டு போன்ற தலைகளுக்கு மட்டும்தான் லாபம். அதுவும் ஐந்து நாட்கள் தேவையில்லாமல் விடுமுறை விட்டு மாநாடு தேவையா? நல்ல நாளிலேயே அரசு அலுவலர்கள் வேலை அற்ப்புதமாக பார்ப்பவர்கள் இந்த ஐந்து நாட்களில் சொல்லவா வேண்டும் ?
                                       இந்த நிலை எப்போது மாறும் ? தெரியாது. ஆனால் இது ஒரு   மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி என்பது மட்டும் புரிகிறது. பிரெஞ்சுப் புரட்சியைப் போல இந்தியாவிலும் ஏதேனும் நிகழாதா ? என்று மனம் மாற்றத்தை விரும்புகிறது. என்று தணியும் எந்த சுதந்திர தாகம்? என்று இப்போது வேண்டுமானால் பாடலாம். ஆனால் மக்கள் மாற வேண்டும். அது இல்லாதவரை இந்த அரசியல் பிழைத்தவர்களும் அதில் பிழைப்பவர்களும் இதைவிட மோசமாக போகும் வாய்ப்புகள் அதிகம். இந்த நிலை நீடித்தால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் .....              

வெள்ளி, 1 ஜனவரி, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2010


அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இனி வரும் தினங்களில்  உலக மக்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று பிணி நீங்கி இனிதான சமாதானத்துடன் சாத்வீகமாய் வாழ இறை அருளை வேண்டுவோம்.

திங்கள், 30 நவம்பர், 2009

தமிழ் சினிமாவின் சாபக்கேடு - விஜய்

                                  ஒரு மாநிலத்தினுடைய தலைஎழுத்தை நிர்ணயிக்கின்ற ஒரு சக்தி வாய்ந்த துறையைப் பற்றி எழுதுவது ஒன்றும் வெட்டிவேலை இல்லை என்றே நினைக்கின்றேன். அத்தகைய சிறப்பு வாய்ந்த துறை இன்று வரம்புகளை மீறிய, நடைமுறை யதார்த்தத்தை சிறிதும் கண்டுகொள்ளாத ஒரு ஊடகமாகவே தற்போது ஆகிவிட்டது.  எம் ஜி ராமச்சந்திரன், மு கருணாநிதி, ஜெ ஜெயலலிதா போன்றோரின் அபரிதமான வெற்றிக்கு காரணமான தமிழ் சினிமா சில அப்பட்டமான எதார்த்த மீறல்களையும் கொண்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத காலத்தில் சினிமாவின் தாக்கம் ஸ்பஷ்டமாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று இருக்கின்ற தொழில் நுட்பத்தில் தாக்கம் அனைத்தும் தவிடுபொடி ஆகியிருக்கவேண்டும்.
                                   ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய் அவர்களின் படங்களுக்கு வரும் வரவேற்பைப் பார்க்கும்போது தாக்கம் இன்னும் திண்ணமாக உள்ளது என்றே தோணுகிறது. அன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருந்த எம் ஜி ராமச்சந்திரன்,சிவாஜி கணேசன் போன்றோர் தங்கள் படங்களில் சமுதாய நல்லிணக்க கருத்துக்களையும், சுய ஒழுக்கத்தையும் போதித்தனர். மக்களும் அவற்றைப் பார்த்து குறிப்பாக எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் தான் நடித்த ஒரு படத்தில் கூட புகை பிடிப்பது போலவோ மது அருந்துவது போலவோ காட்சிகளை  அமைக்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் இன்று அப்படி உள்ளதா சரக்கடிப்பது என்ற விஷயத்தை ஏதோ திரிகால சந்தியாவதனம் செய்வது போல ஒரு சடங்காகவே ஆக்கிவிட்டனர் இன்றைய தமிழ் சினிமாவின் சிற்பிகள். இன்று வரும் ஒரு படத்திலாவது இந்த வார்த்தை இல்லாமல் உள்ளதா?
                                    இதற்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் என்றால் இந்த கேடுகெட்ட படங்களுக்கெல்லாம் மூலம் திருவாளர் விஜய் அவர்களின் படங்களே! நீங்கள் கேட்கலாம் ஏன் மற்ற படங்கள் இல்லையா என்று, அதாவது முன்பு எம் ஜி ஆர் நடித்ததைப் போன்று தானும் சொந்தவாழ்வில் கடைபிடித்து வாழ்ந்தவர்கள் பலர். ஏனென்றால் ஒரு பெரிய இமேஜை கொண்டிருக்கிற ஹீரோக்கள் தமிழ் சினிமாவை மூச்சாக, வாழ்வில் ஓர் அங்கமாக எண்ணும் பல ரசிகர்களையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்தால் இவர்களும் செய்வார்கள். அன்று எம் ஜி ஆர் ஏழைகளுக்கு உதவினார் பலரும் உதவினார்கள். இன்று விஜய் சரக்கடிக்கிறார் பலரும் சரக்கடிக்கிரர்கள். அதற்க்கு ஏற்றது போல இன்று அரசு சரக்காட்சி நடத்துகிறது சரி அதை விடுங்கள். திருவாளர் விஜய் அவர்களின் மற்றுமொரு சகிக்க முடியாத வசனம் என்னவென்றால் " நா கண் அசைச்சா போதும் என் பின்னாடி ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க " என்பது, இதை கைதட்டி அராவரித்து புளகாங்கிதம் அடைகிறது இன்றைய இளைஞர் பட்டாளம், இவர்களின் சொந்த சகோதரிகளும் அந்த ஆயிரம் பெண்களில் அடக்கம் என்பது தெரிந்தும்.இந்த வெட்கக் கேட்டில் அஜித், சிலம்பரசன், இன்னும் பல நடிகர்களும் அடக்கம்.
                                           அது சரி நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இவருக்கு ரவுடி வேஷத்தை விட்டு வேறு எந்த வேஷமும் கிடைக்காதா? இவரின் ஆரம்ப கால படங்கள் முதல் இன்றுவரை வித்தியாசமாக ஏதும் செய்தது கிடையாது. இந்த லட்சணத்தில் இவருக்கு போட்டி வேறு. அஜித் ரசிகர்களும் இவரின் பதாகைகளும் மோதிக்கொள்கின்றன  இதைவிட கேவலம் தமிழ் நாட்டிற்கு வேறு ஏதும் வேண்டுமா? இன்னொரு விஷயம் காதல். அடடா இவர் காதலுக்கு செய்கின்ற தியாகம் இருக்கின்றதே அந்த 'ஷாஜகான் மும்தாஜ் ' லைலா மஜ்னு ' இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும். இவரின் உயிரைக் குடுத்தாவது இந்த காதல் *யிரை காப்பாற்றி விடுவார். அழகி, சொல்லமறந்த கதை, ஆடோகிராப், பசங்க, பூ, மல்லி,கஸ்தூரிமான்,இந்தியன், ரோஜா, நாயகன் போன்ற மிகச்சிறந்த உலக திரைப்படங்களுக்கு சவால் விடும் படங்களின் வருகையின் மத்தியில் விஜய்யின் படங்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு திருஷ்டிப்பொட்டு.    
              

திங்கள், 12 அக்டோபர், 2009

நெஞ்சு பொருக்குதில்லையே !

                                     நேற்றைய செய்தித்த்தாளில் ஒரு செய்தி, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதைப் பற்றி, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டுமாம், சொல்வது நமது மானமிகு தமிழக அரசியல்வாதிகள்.அடப்பாவிகளா ? ஏற்கனவே மைனாரிடிகள் என்று கூறிக் கொண்டு குறிப்பிட்ட சில மதத்தினர்கள் கொஞ்சம் இடஒதுக்கீட்டை பிடுங்கிக் கொள்கிறார்கள்.தாழ்த்தப்பட்டோர் என்று சொல்லி சிலர் பிடுங்குகிறார்கள். இன்னும் எவ்வளவோ பேர் என்னென்ன பெயரில் பிடுங்கிக்கொண்டுள்ளர்கள் என்று தெரியவில்லை இதில் இவர்களுக்கு வேறு பங்கு போட்டுக் கொடுத்துவிட்டு பெருமை தேடிக்கொள்ளப் பார்க்கிறார்கள். எந்த நாட்டில் நடக்கும் இந்த அக்கிரமம். கேட்டால் நமது ரத்தம் நமது இனம் உயிரைக் கொடுப்பேன் .....ரைக் கொடுப்பேன் என்று கதை வசனம் வேறு.
                                           சரி நமது இனம்தான், மொழிதான், ஆனால் நாடு வேறு ஆயிற்றே, என்று தமிழ் நாட்டைவிட்டு அங்கே சென்று வசித்தார்களோ அன்றிலிருந்து அது அவர்களுடைய நாடு. அவர்களுடைய உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இங்கு வந்தார்கள் எனில் அவர்கள் அகதிகள் அதாவது நம் நாட்டு விருந்தினர்கள்.அகதிகளாக வாருங்கள் விருந்தினர்களாக இருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, இபோதுதான் அங்கு எல்லாம் முடிந்துவிட்டதே திரும்பிச் செல்லலாம் அல்லவா? முதலில் குடியுரிமை கேட்பார்கள் பின்பு இடஒதுக்கீடு,தனித் தொகுதி என்று லிஸ்ட் நீளும். அத்தனையும் செய்துவிட்டு அம்போ என்று இருக்கத்தானே வழிவகை செய்கிறார்கள். அரசியல் செய்யும் அன்பர்கள் முதலில் தமிழக தமிழர்களின் வாழ்க்கையை பாருங்கள் பிறகு இலங்கைத் தமிழர்களின் நிலையைப் பார்க்கலாம். அவனவன் அன்றாட மளிகைப் பொருட்களே கிடைக்காமல் விலைவாசி ஏற்றத்தால் திண்டாடுகின்றான். இந்த லட்சணத்தில் அவர்களுக்கு குடியுரிமை ஒரு கேடா?.                                               எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒரு அகதிகள் முகம் உள்ளது. அங்கு உள்ள அகதிகள் சிலர் சாலை மறியல் செய்து எங்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி அரசுப் பேருந்துகளில் ஓட்டுனராக பணியிலமர்த்தப்பட வேண்டும் என்று போராடினார்களாம். தற்போது நம்மில் எத்தனை பேர் அப்பணியினைப் பெற போராடிக் கொண்டுள்ளனர் என்று நாடறியும். ஏற்கனவே காவிரியில் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று சிலையைத் திறந்து வைத்து மக்களை இனா வானா ஆக்கியது போதாதா? தன் சொந்த வீட்டில் வாய்க்கரிசி போட்டுவிட்டு, விருந்தாளிகளுக்கு உலை வைப்பது என்ன நியாயம். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் அரசியல் புண்ணியவான்களே ! முதலில் உங்கள் சொந்த வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வளியுங்கள் பின்பு அடுத்தவன் வீட்டைப் பார்க்கலாம்.
                                  ( விடியோவிற்கான சுட்டி இங்கே பெண்கள் மற்றும் பலகீன மனம் உள்ளோர் பார்ப்பதைத் தவிர்க்கவும் ) இதைச் சொன்னால் அங்கு நடக்கும் அக்கிரமங்களை விடியோவாக்கிக்  காட்டுகிறார்கள். சரி அந்த விடியோவில் இருப்பது தமிழர்கள்தானா? அவர்கள் இலங்கை ரானுவத்தினர்தானா? அப்படியே இருந்தாலும் மறைவாக செய்யாமல் கேமராவை ஓடவிட்டு சுடுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்க முடியுமா உங்களால். போதுமய்யா தமிழ் தமிழ் என்று வாய்கிழியப் பேசிவிட்டு தன் வீட்டுப் பிள்ளைகளை டெல்லியில் ஹிந்தி பயில வைத்து நாடாளச் செய்து, தமிழ் நாட்டைப் பங்கு போட வைத்து, பதவி ஒதுக்கி பாங்கு செய்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று கறை இல்லாத கர்ம வீரரையே குறை சொன்னபோதும் பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் இன்று வரை அறிவிலிகளாக பாமரர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததலிருந்து நாம் காந்தி பிறந்த மண்ணில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்று சந்தேகமாக உள்ளது. தமிழ் வீரம் என்பது அப்பாவி மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போராடுவதுதானா?
                                    இலங்கைத் தமிழர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்கள் சொந்த மண்ணில் வாழ்வதுதான் உங்களுக்குப் பெருமை, அங்கு அனைத்து உரிமைகளையும்  பாரபட்சமில்லாமல் பெறுவதுதான் உண்மையான வெற்றி. அதை விடுத்து இங்கே இருக்கும் அரசியல் தொழில் நடத்துபவர்களின் பேச்சைக் கேட்டீர்களானால்  ஏமாந்துதான் போவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் நாளைக்கே உங்களைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் ஜாக்கிரதை! இதைக் கூறுவதால் நான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. எனது கோபமனைத்தும் தமிழ்நாட்டு அரசியல் ஜாம்பவான்களின் மீதுதான்.தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசி பிழைப்பு நடத்தி லாபம் சம்பாதிக்கும் அவர்கள் சொந்த மண்ணிற்காக ஒன்றுமே செய்தது இல்லை. எங்கும் எப்போதும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம். யாருக்கும் தகுதிக் கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதில் ஊழல் இதில் ஊழல், வெட்டு குத்து கொலை, வன்முறை. முதலில் அனைவரும் இந்தியர்கள் பின்புதான்  தமிழர்கள் என்ற எண்ணமே இல்லை. அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்குக் காட்டும் பொய்யான அக்கறையை கொஞ்சம் தமிழகத்தின் மீது காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்.
                                              சரி இவர்கள் சொல்வது போல இரட்டைக் குடியுரிமை வழங்கிவிட்டோம் பின்பு இலங்கை அரசு இந்தியக் குடியுரிமை பெற்றவர்களின் இலங்கைக் குடியுரிமையை ரத்து செய்கிறோம் என்று சொன்னால் அகதிகளின் நிலை என்ன ? என்னதான் இருந்தாலும் தமது சொந்த மண்ணில் இருப்பதுபோல் வருமா?

டிஸ்கி :         இன்றைய சூழலில் இதைப் பற்றி துணிந்து எழுதிவிட்டேன். தவறுகள் இருப்பின் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும். இது என் கருத்து மட்டுமே. என் நிலை தெளிவு பெற்றபின் கருத்துகள் மாறலாம்.                                 

திங்கள், 5 அக்டோபர், 2009

இதுவும் நடந்தது.

                             புறநகர்ப் பகுதிகளில் எங்கு நோக்கினும் பசுமை, ஆல் இந்தியா ரேடியோவின் மாநிலச் செய்தியறிக்கை,.... டி டி பைவ் இல் வெள்ளிக் கிழமைகளில் ஒளியும் ஒலியும்,ஞாயிற்றுக் கிழமைகளில் மாலைத் திரைப்படம், வயலும் வாழ்வும்,திரை மாலை,ஊமைச் செய்தி, மாநில மொழித்திரைப்படம்,..... பஜாஜ் ஸ்கூட்டர், சேர சோழ பாண்டிய பல்லவ அண்ணா ஜீவா போக்குவரத்துக் கழகங்கள்,..... விறகடுப்பு,கோபர் காஸ்,... ட்ரங்க் கால், டெலி கிராம், மாட்டுவண்டி, பூப்பறிக்கும் திருவிழா, ஒலி நாடா, வி சி ஆர் கேசட், டென்ட் கொட்டாய், இவையெல்லாம் இருந்த தமிழ் நாட்டில்தான் நாம் வாழ்ந்தோம் தெரியுமா? இப்போதுள்ள இளைய தலைமுறையினர்க்கு இவையெல்லாம் என்னவென்று புரியுமா?                

வியாழன், 1 அக்டோபர், 2009

இதுவும் நடந்துகொண்டிருக்கிறது

நன்றி : சந்தையில் லோகியம் விற்பவர் மற்றும் மாண்புமிகு.துணை முதல்வர் அவர்கள்.
                                    அன்பார்ந்த வாக்காளப் பெருங்குடி மக்களே! கழக ஆட்சியிலே ஏழைகளின் பசிப் பிணியைப் போக்க முதல்வர் அளித்த அருமையான திட்டம் ஒரு ருபாய் அரிசித் திட்டம். ஆம், ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்தியிலே கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மத்திய அரசுக்கு கடிதம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரியில் தண்ணீர் பெற்றே தீருவோம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எடியூரப்பா எனது நண்பர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! பெங்களூரில் திருவள்ளுவர் சிலை சென்னையில் சர்வஞர் சிலை ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! காவிரிப் பிரச்சனை தீர்ந்தது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மானங்கெட்ட தமிழர்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஹொகனக்கல் கோவிந்தா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அம்மையார் ஆட்சியிலே நடக்கலையா? ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! தேர்தலா ? அத ஸ்பெக்ட்ரம் பாத்துக்கும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! குடும்ப சமாதானம் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! எல்லாருக்கும் ஹல்வா ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! மறவாதீர்கள் மறந்தும் இரவாதீர்கள்! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஆகவே, உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! வாங்க சார் வாங்க சார் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! அண்ணனுக்கு வழி விடுங்க ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா!........................

டிஸ்கி :          யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலே ஒரு கிலோ அரிசி ஒரு ரூபா! என்ற வார்த்தையை துணை முதல்வர் அவர்கள் சற்று அதிகமாகவே உபயோகித்தார். அதையும் சந்தையில் லேகியம் விற்பவர் பேசுவதும் ஒன்று போலவே எனக்குப் பட்டது. அதை இங்கே சொல்லி இருக்கிறேன் அவ்வளவே! இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே! கழகக் கண்மணிகள் கண்ணில் பட்டால் ( படாது, இந்த அளவிற்க்கு மண்டையில ஏது நமக்கு ? ) மன்னிக்கவும்.                                         

இதுவும் நடக்கலாம்

காலம்தான் போய்கொண்டிருக்கிறது விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் இதுவும் நடக்கலாம்.
 
ஜானகி : என்னடி உன் பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கீங்கலாமே! மாப்ள வீட்ல வசதி எப்படி? எவ்ளோ நகை போடுறீங்க?
மைதிலி : ஆமான்டி ரொம்ப பெரிய இடம் மாசம் கால் கிலோ துவரம் பருப்பு சமையலுக்கு ஆகுதுன்னா பாத்துக்கோயேன்! நாங்க இருபது கிராம் வெள்ளி போடப்போறோம்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

மனித சஞ்சாரம்

மனித சஞ்சாரம் என்றவுடன் எதோ திகிலாக
எழுதப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நகர்ப் புறங்களில் மனிதர்கள்
அதிகமாகக் கூடும் இடங்களான பஸ் ஸ்டேசன்,ரயில்வே ஸ்டேசன்,ஜெனரல் ஹாஸ்பிட்டல்,கோவில்கள் போன்ற இடங்களில் மனித சஞ்சாரம் அதிகமாக
இருக்கும். எங்கு நோக்கினும் லொட லொட பேச்சு சப்தம்,பான்பராக், ஹான்ஸ் போன்றவற்றின் உபயத்தால் மூலை முடுக்கெல்லாம் காவி வர்ணம் பூசப்பட்டிருக்கும். அதிலும் ஹாஸ்பிட்டல்,கோவில்களில் அமைதி மட்டுமே குடிகொண்டிருக்க
வேண்டும் என்பது விதி. ஆனால் நடை முறையில் அப்படியா உள்ளது. இதன் காரணமாகவே கோவிலுக்குச் செல்வதையே வெறுத்து பிரணவப் பொருளான
அந்த ஓம்கார ரூபனை மனதினுள்ளேயே வேண்டிக்கொண்டிருக்கின்றேன்.


பொது இடங்களில் நமது நாட்டைப் பொறுத்தவரை நம் மக்களில்
( மக்கள் என்று சொல்வதைவிட மாக்கள் என்று சொல்வதே சாலச் சிறந்தது என நினைக்கிறேன். என்னையும் சேர்த்துத்தான் ) அநேகம் பேர்
விதிமுறைகளுக்கு மாறாக ஒரு ஒழுங்கோ தூய்மையோ சிறிதும் இல்லாமல்
நடந்து கொள்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.சரி மனித சஞ்சாரமே
இல்லாத இடங்களே இல்லையா? என நீங்கள் கேட்கலாம்.
( ஆமா! ஆமா! அதுக்குத்தான வந்துருக்கோம்! ) உங்களுக்காகத்தான் இந்தப்பதிவு.
நான் சென்று ரசித்த அமைதியின் சிகரமான ஆளரவமற்ற இடங்களைப்
பற்றித் தான் இதில் சொல்லப்போகிறேன்.

நான் உதகையில் கல்லூரியில் படிக்கும் போது வெளியே தனியாக அறை எடுத்து தங்கி இருந்தோம். தொட்ட பெட்டா போகும் வழியில் மேல் கோடப்பமந்து என்ற ஒரு இடம் அங்குதான் அறை இருந்தது.நண்பர்கள் அனைவரும் ஒருநாள் வெளியே சென்று சுற்றிப் பார்க்க தீர்மானித்தோம். உதகையில்
சுற்றுலாவாசிகள் பொதுவாக பார்க்கும் இடங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது.
இனி புதிதாக யாரும் அவ்வளவாக பார்க்காத இடங்களைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தோம்.

அதன்படி அதே தொட்ட பெட்டா,கொத்த்தகிரி ரோட்டிற்கு
மேல் வந்தோம். அங்கு அச்சாலையின் முதல் கொண்டை ஊசி வளைவிற்கு
வலப்புறமாக ஒரு பாதை சென்றது. அதில் செல்ல நினைத்து அப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.வானம் தன் மேனியில் கருமை வண்ணத்தைப் பூசிக்கொண்டது.
பனித் தூவல்கள் ஆவியாய் எங்களை உரசிச் சென்றது. மழை, புதிதான இடத்தைப்
பார்த்த மழலை போல,வரலாமா வேண்டாமா என தூரலாகி,பெரிதாக வருவதற்கு எத்தனித்துக் கொண்டிருந்தது. அப்பாதை சின்கிலாரீஸ் ஹோட்டல் வரை
சென்று முடிந்தது. அதன் பின் அருகிலேயே ஒரு ஒற்றையடிப் பாதை நீண்டது.
நாங்களும் அப்பாதையிலேயே சென்றோம். வழி நெடுகிலும் காட்டு ரோஜாச் செடிகள்
பூத்துக்குலுங்கின. ரோஜா வாசம் மூக்கைத் துளைத்தது. முதலில் நானும் இன்னொரு நண்பனும் சென்றோம், எங்கள் பின் இன்னும் இரு நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். சுமார் ஒரு கி மீ சென்றிருப்போம், நேராகச் சென்ற பாதை திடீரென இடது புறம் திரும்பியது. நாங்களும் இடது புறம் திரும்பிய போது அங்கு தெரிந்த
காட்சியைக்கண்டு நாங்களிருவரும் அப்படியே அசையாமல் நின்றுவிட்டோம். அங்கு ஒரு குளம் போன்றதொரு நீர்த்தேக்கம் எங்கள் கண்ணில் பட்டது. ஆம், மேலே படர்ந்த பனித்தூவல்கள் நீரில் பட்டு எதிரொலித்து நீரெங்கும் பால் போல வெண்மை அடர்ந்து காணப்பட்டது. நாங்கள் நால்வரும் சற்று முன்னேறினோம். இயற்கைத் தாயின் பேரெழில் எங்கள் மனதில் நிலைத்து நின்றுவிட்டது. நீர்த்தேக்கத்தின் மத்தியில் ஒரு பாழடைந்த நீர் உந்து நிலையம் இருந்தது. எப்பவோ அங்கிருந்து உதகை நகருக்கு தண்ணீர் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதற்குச் செல்ல கரையிலிருந்து அதற்குச் செல்ல சிறிய ஒரு அடி அகலம் கொண்ட பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

நங்கள் அதில் செல்ல ஆயத்தமானோம். மெதுவாக ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து சென்றோம். யாருமே அவ்வளவாக புழங்காத இடமென்பதால் இரும்பால் ஆன பாலம் துருப்பிடித்து கீழே விழுந்துவிட்டோமானால் என்ன செய்வது என்ற பயம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. எப்படியோ ஒரு வழியாக பாலத்தைக் கடந்து நீருந்து நிலையத்திற்கு வந்துவிட்டோம். அங்கே வட்ட வடிவிலான ஒரு கூண்டுபோல உள்ளே காணப்பட்டது. வட்டத்தின் ஓரத்தில்தான் நிற்க முடியும். நடுவிலே பெரிய துவாரம் இருந்தது. மிகுந்த பயத்துடன் அங்கிருந்து கரைக்கு வந்தோம். இந்த இடமே ஆள் அரவமற்றுக் காணப்படுவதால் இங்கிருப்பது சரியல்ல என்றெண்ணி அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

நாங்கள் சென்ற இப்பயணம் என் மனதில் நீங்காது இடம் பெற்றுவிட்டது. நான் மறுபடியும் தனியாக பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். அதே நீருந்து நிலையத்தில் பல மணி நேரம் இருந்திருக்கிறேன். நான் அங்கு சென்றமட்டிலும் அவ்விடத்திற்கு யாரும் வருவது இல்லை. ஒரே ஒரு முகமதியரின் சமாதி மட்டும் அங்கே உள்ளது. அங்கு சென்ற போதெல்லாம் மனம் லேசானது போல உணர்வு என்னுள் எழும். இயற்கைத் தாயின் முழுமையான அரவணைப்பில் உள்ளது போல உணர்வு அலைகள் பொங்கி எழும். கவிதை ஊற்று பெருக்கெடுக்கும். ஆஹா! என்ன ஒரு ஆனந்த அனுபவம். அதைச் சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை எனலாம். அந்த இடம் இப்போது எப்படி உள்ளது என்று தெரியவில்லை.

யாருக்காவதுதெரிந்தால்சொல்லுங்களேன்!

புதன், 16 செப்டம்பர், 2009

தனித்துவம்




உலகில் ஜனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒரு தனித்துவம் என்பது உண்டு.ஆனால் அது மற்றவர்களிடமிருந்து அதிகமாக
மாறுபட்டிருக்குமானால் அவை பிறரை கவரலாம். அதுவே சிறப்பானதாகவும்
உயர்ந்ததாகவும் இருக்குமானால் அம்மனிதனை அத்தனித்துவம் புகழின் உச்சிக்கு
கொண்டுசென்றுவிடுகிறது. இப்போது மட்டுமல்ல எக்காலத்திலும் புகழ் பெற்ற
பிரபலங்களின் நிலை இதுதான். தன்னுடைய தனித்துவத்தை பிறர் அறியச் செய்யும் போதுதான் ஒரு மனிதன் பிரபலமாகிறான்,புகழடைகிறான்.அது கீழ்நிலையானாலும் சரி,
மேல்நிலையானாலும் சரி அதற்கும் உயர்நிலையானாலும் சரி.

இப்பொது ஒரு விஷயத்தை கூர்ந்து கவனிப்போம்.நமது நாட்டில் தனித்துவம் உடைய பெரும்பாலான மனிதர்களின் ஆரம்பகட்ட அல்லது சிறு பிராயத்தில் உள்ள அவர்களின் சிறந்த, உயர்வான, தனிப்பட்ட திறமைகள் அதற்குரிய அந்தஸ்தைப் பெறுகின்றதா? என்றால் அநேகம் பேருக்கு பதில் இல்லை என்றே வரும். அது பள்ளியாகட்டும்,வீட்டில் ஆகட்டும்,சமுதயத்திலாகட்டும் எங்குமே பலரது தனித்துவங்கள் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ சிலருக்கு கவனிக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் பலரது நிலைமை கவனிப்பின்மையே!

மேலை நாடுகளில் அதாவது மேற்கத்திய கலச்சாரம் பரவிய நாடுகளில் இந்த அவல நிலை உள்ளதா? என்றால் அதற்கும் விஷயமறிந்தவர்களிடம்
இல்லை என்றே பதில் வரும்.ஏன் இந்தப் பாகுபாடு ?

நான் ஆங்கிலப்படங்கள் மற்றும் சர்வதேச மொழித் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பவன். அதில் காணும் குழந்தை வளர்ப்பு
முறை மற்றும் கல்விமுறை இவற்றை பார்த்தது தான் நான் இந்த பதிவை எழுத தூண்டியது. நீ எப்படி ஒரு கற்பனையினால் ஆன ஒன்றுக்கும் உதவாத ஆங்கில
சினிமாவை வைத்து இதைக் கூறலாம்? என்று கேட்க நினைத்தால் உங்கள் எண்ணம் தவறு. நீங்கள் நினைப்பது போல, நாம் தற்போது பார்த்து ஜீரணிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பெரும்பாலான கேடுகெட்ட,தரங்கெட்ட தமிழ் சினிமாவைப்
போல இல்லை அத்திரைப்படங்கள், அனைத்தும் உயர்ரகம். அவை அந்தந்த நாடுகளின் கலாச்சாரக் கண்ணாடிகள்.( எனென்ன திரைப்படங்கள் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்று பின்னர் பதிவிடுகிறேன்.)

சரி விஷயத்திற்கு வருவோம்,தனித்துவத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்கிறார்கள். அங்கே குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர்களும் சரி, ஆசிரியர்களும் சரி, நம்மவர்களைப் போல், அதிகப்பிரசங்கி என்று அதட்டுவதில்லை,தெரியாது என ஒதுங்கிவிடுவதும் இல்லை, அந்த சாமிதான் அப்படி பண்ணுச்சு என்று கதை கட்டுவதும் இல்லை. தெரியாததை தெரிந்து கொண்டு அக்குழந்தைகளின் வயதுக்கு ஏற்றது போல புரிய வைக்கிறார்கள்.அதேபோல்
சமுதாயத்தில் எது நல்லது எது கேட்டது என்று அவர்கள் போக்கிலேயே விட்டு அதை அனுபவித்து புரிய வைக்கிறார்கள்.

எடுத்துக்கட்டாக, நல்ல நாகரீகமான குடும்பத்தில் பிறந்த அமெரிக்கச்
சிறுவன் தொலைக்காட்சியிலோ அல்லது வேறெங்கோ பார்த்து தெருவோரம் வசிக்கும் மனிதர்களின் மேல் பற்று வருகிறது. தெருவோரங்களில் வேலை வெட்டி இல்லாமல்
சோம்பி இருக்கும் அம்மனிதர்களைப் போல வாழ விரும்புகிறான் அது அவனை அந்த அளவிற்கு ஈர்த்துவிடுகிறது.இதே நிலையில் நம் நாட்டில் சிறுவன் எப்படி இருப்பான்? தனியறை வாசம், அப்பாவின் பிரம்படி, சமுதாயத்தில் பழிச்சொல், பள்ளியில் புறக்கணிப்பு என்று பல விதமான அணுகுமுறைகள். ஆனால் அங்கு அப்படி அல்ல. அந்த அமெரிக்க தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெருவிற்கு வந்து ஒரு நாள் வசித்து,
அதிலுள்ள இன்னல்களைப் புரிய வைக்கிறார்கள். சிறுவன் திருந்திவிடுகிறான்.

இப்படி ஓர் சம்பவம் நடந்தது.எனக்கு விஞ்ஞானம் சார்ந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு
உண்டு. பல யோகிகள் முனிவர்கள் தெய்வங்கள் இப்படி பலதும் நமக்கு ஆன்மீகத்தில்
வழிகாட்டுகின்றன. அதில் எந்த வழி சிறந்தது என நான் பழகிவரும் நண்பர்களிடத்தே
கேட்டேன். அவர்கள் அனைவரும் படித்தவர்கள் ,தன்னடக்கம் மிகுந்தவர்கள்,
ஆன்மீகத்திலும் ஈடுபாடு உடையவர்கள்,ஆன்மீகத்தில் பெரியவர்கள் பலரிடத்தும் தொடர்பு உண்டு. ஆனால் அவர்களிடமிருந்து வந்த பதில் நான் அந்த அளவிற்கு பெரிய ஆள் இல்லை. ஆக அவர்கள் மிகப்பெரிய விஷயங்களைப்பற்றி விவாதிக்க தயங்குகிறார்கள். தன்னடக்கம் என்றாலும் ஓரளவிற்குதான் வேண்டும் அல்லவா? இதே மேலை நாட்டில் தெரிந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் தயங்குவதில்லைமேலும் அண்ட சராசரங்களையும் இளம் வயதிலேயே அலசி ஆராய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நான் எதோ திரைப்படங்களைப் பார்த்து கூறவில்லை
உண்மையிலேயே அவர்கள் அப்படித்தான் இதை பல பயணக்கட்டுரை நூல்களின் வாயிலாக தெரிந்துகொண்டேன்.குழந்தைகளாக இருப்பினும் அவர்கள் தனித்துவத்திற்கு மதிப்பளிக்கின்ற அத்தன்மையை நம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல குழைந்தைகள் தவிர மற்றவர்களின் தனித்துவம்
மிளிர, மேலை நாடுகளில் ஒரு சிற்றூர் ஆனாலும் சரி அங்கே தினசரி உள்ளூர்
செய்தித்தாள் வருகிறது.அதில் அவ்வூர் செய்திகளோடு மக்களின் படைப்புகளும் பிரசுரமாகிறது. அதோடு விளையாட்டு மன்றங்கள், தொலைக்காட்சிகள் போன்றவையும் நடத்தப்படுகின்றன. இதனால் வளரும் நிலையிலுள்ள திறமையாளர்கள் தங்களது
திறமையை மெருகேற்றிக்கொள்ள வாய்ப்பாகிறது. எங்கு சென்றாலும் கூச்சம்
பயம் இன்றி தனித்துவம் பெற ஏதுவாகிறது.அந்த நாடுகளில் உள்ள அரசும் இதற்க்கு
உதவி செய்கிறது நம்மளைப்போல் இலவச தொ கா பெட்டி, இலவச நிலம், இலவச செருப்பு, இலவச பருப்பு, இலவச அது, இலவச இது என மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கவில்லை.

ஒரு விளக்கு எரிந்து கொண்டே இருக்க
தூண்டல் அவசியம். அந்த செயலை அங்கு அனைவரும் செய்கிறார்கள். குறிப்பாக
பள்ளிகளில் பாடம் மட்டும் சொல்லித்தருவதில்லை அதைவிட அதிகமாக வாழ்க்கையை
வாழ சொல்லித்தருகிறார்கள். உதாரணமாக ஆலிவர் இன் லில்லிபுட் கதையை
நாம் படித்து பில் இன் த பிளாங்க்ஸ், சூஸ் த பெஸ்ட் என்று பட்டையை கிளப்பி இருப்போம். அனால் அங்கு அப்படி இல்லை. அதே கதையை மனனம் செய்து
மற்றவர்கள் முன் கதையை முக பாவத்துடன் சொல்லிக்காட்ட வேண்டும். நன்றாக கேளுங்கள் சொல்லிக்காட்ட வேண்டும் ஒப்பிதுக்காட்ட அல்ல. இப்பொது நீங்களே சொல்லுங்கள் எதில் தனித்துவம் வளரும்?

தனித்துவம் வெளிப்படையாகத் தெரிந்தால்தான் சிறு பிராயத்திலிருந்தே வாழ்க்கைப் பாதையில் சரியான வழியில் செல்ல ஆயத்தமாக முடியும். பிற்காலத்தில் அதில் வேரூன்றி புகழ்
பெற வழி கிடைக்கும். பிள்ளைகள் தங்களது தனித்துவத்தை எதில் நிலை பெறச் செய்கிறார்களோ அவர்கள் அதுவாகவே ஆகிறார்கள். இந்த சமுதாயத்தையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொண்டு தனித்துவம் பெற ஏட்டுக் கல்வி மட்டும் போதாது, அனுபவக்கல்வியே தனித்துவம் மிளர வகைசெய்யும்.( நம் அனைவருக்கும் தெரியும் இந்த நிலை நம் நாட்டில் மாறாது என்று, அப்புறம் உனக்கென்ன வேர்த்து வடிகிறது
என்கிறீர்களா? ஏதோ நினைத்தேன் எழுதுகிறேன் )

ஆகவே, பெற்றோர்களே! மற்றொர்களே! ஆசிரியர்களே! முதலில் உங்கள் குழந்தைகளை தனித்துவம் மிகுந்த நல்ல மனிதனாக்குங்கள் பின்பு அறிஞர்களாக தானாகவே மாறிக்கொள்வார்கள்.



டிஸ்கி : இந்த அளவிற்கு கட்டுரை எழுத நான் அவ்வளவு அனுபவசாலி அல்ல இருந்தாலும், பல பயணக் கட்டுரைகளை படித்ததின் மூலம் நமது நாட்டினருக்கும் வெளி நாட்டினருக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு எனக்கு வயதும் இல்லை. என் மனக்குறைகளை கொட்டியிருக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.