சுய புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுய புராணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

எனது ஆட்சியில்.....

1. மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். நாடெங்கும் ஒரே கல்விமுறை பின்பற்றப்படும்.

2. மறைநீர் ( virtual water ) அதிகமாக பயன்பாடு உடைய தொழில்கள் கண்டறியப்பட்டு அவை உள்நாட்டில் மட்டும் இயங்க வழிவகை செய்யப்படும்....

3. நாடெங்கும் இட ஒதுக்கீடு முறை அறவே ஒழிக்கப்பட்டு திறமை மட்டுமே முன்னிருத்தப்படும்.

4. ஒவ்வொரு குடும்பமும் தலா மூன்று மரங்களையாவது கட்டாயமாக வளர்த்தால்தான் குடும்ப அட்டையில் பொருட்கள் வழங்கப்படும்.

5. சுய லாபம் கருதி கடமையை செய்யாமலிருப்பவர்கள் மற்றும் கடமையை மீறுபவர்களுக்கு முதல் முறைமட்டும் மன்னிப்பு வழங்கி தேசதுரோகி பட்டம் இலவசமாக வழங்கப்படும்.

6. இலவசங்கள் அறவே ஒழிக்கப்பட்டு மக்களை உழைத்து அவற்றை எளிதாக பெற்றிட தகுந்த திட்டங்கள் தீட்டப்படும்.
7. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் மீட்கப்பட்டு அவற்றில் இராணுவ தளவாடங்கள் வாங்கி உலகின் மிகச் சிறந்த இராணுவமாக நம் இராணுவம் ஆக்கப்படும்.


1. சர்ச் பார்க் கான்வென்ட் ல் படிக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி மஞ்சக்கோணாம்பாளையம் மாரப்பன் மகனுக்கும் கிடைக்கும்.

2. 50 $ = 1 ₹ என்ற நிலை வரும்.

3. கோவிலில் சிறப்பு தரிசன முறை ஒழிக்கப்படும்.

4. லஞ்சம் வாங்கியது நிருபிக்கப்பட்டால் வலது கை கட்டைவிரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட சட்டம் பிறப்பிப்பேன். (டாக்டர் பீசை அந்த கபோதியிடமே இரண்டு மடங்கு கறக்க வேண்டும்)

5. பெர்டிலைசர் கம்பெனிகளை இழுத்து மூடிவிட்டு, இயற்கை விவசாயத்தை கட்டாயமாக்குவேன். 

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இது எங்க வீட்டு கொலு....

தச மஹா வித்யா - 2

                                     நமது எண்ணங்களே நம்மை வழி நடத்திச் செல்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. நான் நவராத்ரி, கொலு, தசமஹாவித்யா போன்ற விஷயங்களில் நான் கடந்த ஐந்தாறு நாட்களாக அறிவைப் பெற்று வருகின்றேன். என் இணைய தேடல்கள் பெரும்பாலும் இவற்றைப் பற்றித்தான் இருந்தன.நடைமுறையில் கூட வாழ்வியலில் கொலு பற்றிய அனுபவ அறிவு எனக்கு சிறிது ஏற்ப்பட்டது. அதன் விளைவுதான் கீழே நீங்கள் பார்க்கும் கொலு காட்சி.இது எங்க வீட்டு கொலு......


                                                  
                                                        














 அஷத்தோமா சத் க்ரமய !! 

திங்கள், 11 அக்டோபர், 2010

அப்பா !

அப்பா !
இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு
இன்று வரையில் தெரியாது !

கடந்துவிட்டன மூன்று வருடங்கள் நீங்கள் மறைந்து,
இன்றுதான் நினைக்கிறேன் உங்களைப் பற்றி எழுத,

உங்களுடன் பயணித்த 23 வருடங்களை மெல்ல அசைபோடுகிறேன்.....

கடைசி வரையிலும் யாருக்கும் தெரியாத உண்மை
நாமிருவரும் நேருக்கு நேராய் ஒரு நிமிடம் கூட பேசியது கிடையாது,
அது என்ன மரியாதையா ? பயமா? குரோதமா? தெரியாது!
ஆனால் நாம் அப்படித்தான் இருந்தோம்!

எனக்கு நன்றாய் நினைவிலிருக்கிறது...
என் குழந்தைப்பருவமும் நான் வளர்ந்ததும்
கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் தண்டிப்பு என்றுதான் இருந்தன

நான் ஆறாம் வகுப்பிலிருக்கும்போது உங்களை இதய நோய் ஆட்கொண்டது
அனைத்தையும் நிறுத்திவிட்டீர்கள் புகைப்பதைக் கூட- ஆனால்
உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் மறந்தேவிட்டீர்கள்.
அன்றிலிருந்தே எனக்கு உங்கள் மீது கோபம்தான்
எதற்க்கெடுத்தாலும் மோதிக்கொள்வோம் பரம வைரிகளாய் !

மேல்நிலை முடிந்து பட்டம் பயில உதகை சென்றேன்
என்னுடம் மூச்சு வாங்க மலை ஏறி வந்தீர்கள்
உங்கள் இதயம் பற்றி கவலைப்படாமல்,
அப்போது என் கல் நெஞ்சத்திலும் ஈரம் கசிந்தது உண்மை.



கோவையில் வேலை செய்தேன். சம்பளத்தை எப்போதாவது
வீட்டிற்கு கொடுப்பேன் அதையும் அம்மாவிடம்தான்
நான் எப்போதாவது உங்களுக்கு ஒரு நூறு ரூபாயை
தரும்போதெல்லாம் உங்கள் முகத்தில் வரும் சந்தோசத்தை உணர்ந்தும்
உணரமுடியாத பாவியாக இருந்தேன் அப்போது,


பின் சென்னையில் பிரபல மோட்டார் கம்பெனியில் வேலை
என்னைப் பார்க்க வந்த இரண்டு முறையும் உங்கள்
கண்களில் தெரிந்த பெருமையையும் ஆனந்தத்தையும் பிரமிப்பையும்
எடை போடத்தெரிந்த என்னால் உங்கள் மனதில் உள்ள பாசத்தை
எடை போட முடியவில்லை.


அப்பா ! நான் உங்களுக்காக மகன் என்ற முறையில் எதுவுமே செய்ததில்லை
ஆனால் நீங்கள் எனக்கு செய்த கடனை நான் எப்படி அடைப்பேன்?


அப்பா ! இப்போது உங்கள் தேவையை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன்
அதற்க்கான பக்குவமும் வயதும் புரிதலும் இப்போது என்னிடத்தில்
ஆனால் இதனைக் காண நீங்கள் இல்லையே ?


நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
உங்களின் அருமை உங்கள் மறைவிற்கு பின்தான் எனக்கும் தெரிந்தது,
நீங்கள் உலகத்தை அறிந்திருக்கவில்லைதான் ஆனால்
உலகம் உங்களை அறிந்து கொண்டததேன்னவோ உண்மைதான்,


அப்பா ! உங்கள் மரணப் படுக்கையில் கூட என்னால் உங்களுடன்
அதிக நேரம் இருக்க முடியவில்லை,


அப்பா ! உயிர் கொடுத்தீர்கள் உங்களை நேசிக்கும் உள்ளத்தை
ஏன் அப்போதே கொடுக்கவில்லை ?

உங்களைப் போலவே பாசத்தை மட்டுமல்ல எந்த உணர்ச்சிகளையும்
என்னால் நேரடியாக வெளிக்காட்ட முடியாதுதான்,

இப்போதும் சொல்கிறேன் நான் எரிமலை அல்ல
பாலைவனச்சோலை.....


அப்பா ! இதை எழுதுவது ஏதோ பக்கங்களை
நிரப்புவதற்காக அல்ல உங்களின் நினைவு முட்கள்
குத்திக் கிழித்த என் இதயத்தை குணப்படுத்த.....

- S -

செவ்வாய், 6 அக்டோபர், 2009

மனித சஞ்சாரம் - 2

அன்பு நண்பர்களே!
                      இன்று நகரத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் என்னை கொடுத்து வைத்த கழுதை என்றே சொல்லவேண்டும். நான் பிறந்ததிலிருந்தே கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறேன். நடுவில் சில காலம் ஊட்டி கோயம்புத்தூர் சென்னை என்று ஜாகை மாறினாலும் பிடித்தது என்னவோ கிராமம்தான்.
                       சிறிய வயதில் காடு கரை தோட்டம் தொறவு என நான் சுற்றாத இடமே இல்லை. அப்போதே எனக்கு மனித சஞ்சாரம் இல்லாத இடங்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நானும் இன்னும் இரண்டு நண்பர்களும் ஒரு ஞாயிற்றுக் கிழமை வெளியே செல்ல முடிவெடுத்தோம். ஊருக்கு வெளியே கீழ் பவானி வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. அதனையும் தாண்டி சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் செல்ல நினைத்த இடத்தின் பெயர் "அல மேடு". ஏன் அல மேடு என பெயர் வந்தது என அப்போது தெரியவில்லை. அந்த இடத்தைப் பார்த்தீர்களானால் ஒரு சிறிய மலை போலான மேட்டுப் பகுதி அது ஒரு எழெட்டு குன்றுகளாய் அலை போல நீண்டிருக்கும். ஒரு வேளை  "அலை மேடு" என்பதுதான் மருவி அலமேடு ஆனதோ என்னவோ தெரியவில்லை..
                          எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று ஊர்களைத் தாண்டி பல தோட்டங்களைத் தாண்டி செல்ல வேண்டும். அந்த இடத்திற்குச் செல்ல இன்றும் பஸ் வசதி கிடையாது. முக்கியச் சாலையிலிருந்து ஏழெட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் நடந்தே செல்வோம் பேசிக்கொண்டே ஏதாவது சருகம் பழம், கள்ளிப் பழம், மாங்காய் என அங்கங்கு கிடைக்கும் பழங்களையெல்லாம் தின்று கொண்டே செல்வோம். அங்கு ஒரு இயற்கையாய் அமைந்த என்றைக்கும் வற்றாத சுனை உள்ளது. அதன் அருகிலேயே வன பத்ர காளியம்மன் எழுந்தருளி அருள் பாலித்து வனத்தை காத்து வருகிறாள். சற்று முன்னேறினால் மிகப் பெரிய பாறைகள் கொண்ட அக்குன்று நம் கவனத்தை ஈர்க்கும். அங்கு விஷத் தேள்களின் அபாயம் அதிகம் என்று சொன்னார்கள் என்று ஒரு பெரிய கல்லை உருட்டினேன். உண்மையிலேயே அபாயம்தான் கல்லுக்குள் இருந்து பல அளவுகளில் தேள்கள் குதிததோடின.
                        இரண்டு மூன்று வீடுகளே அந்த மேட்டின் அடிவாரத்தில் இருந்தது. அங்கு சென்றோம் அவர்கள் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் கனிவுடன் உபசரித்து தெளுவு என்று சொல்லப்படும் பதநீர் அளித்தார்கள் வெயிலுக்கு இதமாய் இருந்தது. அவர்கள் இன்னொரு அபாயத்தையும் கூறினார்கள் மாலை, இரவு நேரங்களில் வங்கு நரிகள் வருமாம், ( வங்கு என்பது குகை ( கேவ் ) வடிவிலான சிறிய குழி ) அவற்றை சமாளிக்கவே வேட்டை நாய்களை வளர்த்து வருவதாக கூறினார்கள். சற்று மிரட்சியுடன் நன்றி சொல்லி வெளியேறினோம்.
                          இங்கு வன பத்ர காளியம்மன் கோவில் பற்றி முதலில் சொன்னேன் அல்லவா?. அங்கு ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும். அப்போது பெருவாரியான உள்ளூர் மக்கள் அங்கு சென்று வழிபட்டு வருவார்கள். அங்கு நடைபெறும் அன்னதானம் மக்களை பெரிதும் கவர்ந்தது ஆகும். கிடாய் வெட்டி கறிக் குழம்புடன் சாப்பாடு காலையிலிருந்து மாலை வரை அனைவருக்கும் உண்டு. அதுவும் சற்று வித்தியாசமாய், அதாவது சாப்பிடுவதற்கு தரையில் குழி பறித்து அதில் சேம்பை இலை எனப்படும் ஒரு வகை இலையை வைத்து அதில்தான் சாப்பாடு பரிமாறுவார்கள்.
                            இப்போதும் இங்கு திருவிழா தவிர்த்து மனித சஞ்சாரம் அற்ற நாட்களில்  செல்ல ஆசை உண்டு . அதற்க்கு நேரம் இல்லை அப்படியே இருந்தாலும் துணைக்கு வர யாரும் முன்வருவதில்லை  அப்படியே வந்தாலும் சின்ன வயதில் சென்றால் தப்பாய் எடுத்துக்கொள்ளாத இச்சமூகம் இப்போது அந்த மாதிரியான  ஆள்அரவமற்ற இடத்திற்கு சென்றால் ஏதோ தவறான செயலைச் செய்யப் போவது போல சந்தேகக்கனைகளைத் தொடுக்கும். ஆசைகள் இருந்தாலும் மனதில் வைத்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.                                   
                    

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நூல் பல கல்.

அன்பு நண்பர்களே!
புத்தகங்கள் நமது ஒப்பற்ற ஆசானாக செயல்படுகின்றன.நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்.நூல்கள் பல படித்திருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்கள் மட்டும் நம் நெஞ்சில் நீங்காது இடம் பெற்றுவிடுகின்றன.அந்த வகையில் நான் விரும்பிப்படித்த சில நூல்கலை கீழே கொடுத்துள்ளேன்.
( டாப் டென் வரிசையில் )
புத்தகங்கள்

1.எனது போராட்டம்

( அடல்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு.ஒரு தவறே செய்தாலும் அதை இறுதிவரை கடைபிடித்து வாழ்ந்த மனிதன்.கொடூர செயல்கள் செய்தாலும் செய்வதற்கு ஓர் அசத்திய துணிச்சல்வேண்டுமல்லவா? )

2.அக்கினிச் சிறகுகள்

( அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.எளிமையின் எடுத்துக்காட்டு. ஒரு ஜனாதிபதி ஆனபோதும் கூட, இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என வாழ்ந்து காட்டிவரும் மனிதருள் சிறந்த மனிதர். இதைச்சொல்ல நமக்கு அருகதை இல்லை என்ற போதிலும் என் மனம் கவர்ந்த மாமேதை )

3.அர்த்த சாஸ்திரம்

( கௌடில்யர் என்ற சாணக்கியர் எழுதிய நீதிநூல்.கலாச்சாரம் சார்ந்த இவரது நீதிக்கொள்கைகள் இன்றைய சூழ்நிலையில் நம் இந்தியாவிற்கு உதவாது என்ற போதிலும் சிறந்த கருத்துக்களைக் கொண்ட நூல் இது )

4.வீடியோ நைட்ஸ் இன் காட்மன்ட் by pico iyar

( பீகோ ஐயர் என்னும் இந்த பயண மனிதர் உலகத்தில் சுற்றாத இடமே இல்லை எனலாம்.அத்தகைய மனிதர் இந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் என்ன நினைக்கிறார்கள் என்று கூறும்போது ச்சே! என்ன கொடுமை சரவணன் இது! என்று கூறத் தோன்றும்.இந்தியர்கள் அனைவரும் படித்து வெட்கப்பட வேண்டிய ( நமக்கு எப்போ அது இருந்திருக்கு ) அருமையான புத்தகம் )

5.ச்சே குவேரா

( லத்தீன் அமெரிக்க நாடுகளில் கம்யுநிச புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மாவீரன் ச்சே குவேரா. ஜீ ஸ்டுடியோ தொலைக்காட்சியில் தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்ற திரைப்படத்தைப் பார்த்து இப்புத்தகத்தை வாங்கினேன்.படித்ததும் புரிந்தது இந்த மனிதனைப் போல ஓரிருவர் இங்கு இருந்தால் போதும் இந்தியத் திருநாடு சொர்க்க பூமியைத் திகழும் என்று. நம் கண் முன்னே இந்தத் திருமகனின் உருவப் படம் பொறித்த சட்டைகளை அணிந்து கொண்டு அரைகுறையாக இவரைப் பற்றி மேடைகளில் பேசிக்கொண்டு திரியும் சில கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இவரின் பேருக்கே களங்கம் விளைவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை )

6.சிந்து முதல் கங்கை வரை

( இந்நூலை எழுதியவர் ம்ருதுளசான்கித்யயணன் இது முதலில் தேவநகரி எழுத்து வடிவில் வெளிவந்தது. எப்போது தெரியுமா? கி மு ஒன்றாம் நூற்றண்டில்.சுட்ட செங்கற்க்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவில் முதலில் வெளிவந்த நாவல் ஆகும்.இதைப் படிக்கும் பொழுது இந்த அறிவியல் முன்னேற்றங்களை எல்லாம் விட்டு விட்டு கானகத்தில் வாசம் செய்ய எண்ணம் தோன்றும் என்பது திண்ணம் )

7.சிவா வாக்கியர் பாடல் தொகுப்பு
எல்லா பாடல்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.விளக்கம் பெற தேடல் இல்லை.எதோ என்னால் முடிந்த, புரிந்து கொள்ளக்கூடிய பாடல்கள் கீழே

கோவிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே.

வாயிலே குடித்தநீரை எச்சிலென்று சொல்கிறீர்
வாயிலே குதப்பு வேதமென படக்கடவதோ
வாயில் எச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

கறந்தபால் முலைப்புகா,கடைந்த வெண்ணை மோர்புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே


8.குடும்பம் ( சீன நாவல் )

9.எட்வர்ட் தாட்சனின் மானுடபண்பாட்டியல்

10.ஆப்பிரிக்கா கண்டம் by மணியன்(இதயம் பேசுகிறது)