புதன், 19 ஆகஸ்ட், 2009

நினைவுகள் ( இது கவிதை மாதிரி ஆனா....... )


அன்பு நண்பர்களே !

நினைவுகள் என்றும் அழியாதவை அவை என்றும் பேசுவதில்லை .இரவின் மடியில் நாம் விழித்திருக்கும் போது தென்றலாய் வந்து நம்மைத் தாலாட்டும் .அந்தி மாலைப் பொழுதுகளில் நம் வீட்டு ஜன்னல்களை வெறித்திருக்கும் போது சூன்யமாய் வந்து நமக்குச் சுகம் தரும் .நம் உயிரும் உள்மனதும் உள்ளவரை நினைவுகள் என்றும் அழிவதில்லை . அவை என்றும் பேசுவதும் இல்லை . சில நேரங்களில் அவை எழுத்துக்களில் மிளிரவும் செய்யும் இதோ இந்தக் கவிதையைப் போல..............


அது ஒரு கனாக்காலம்

ஒற்றைக்கால் சட்டை யோடு உலகம் சுற்றி
காடுகளின் காதலனாக
கண்மாய்களின் காவலனாக
களிப்புடன் காலத்தைக் கழித்த காலம் அது !

பள்ளியில் வாத்தியாரின் பிரம்படி வைபவம்
வீட்டில் அப்பாவின் அதிரடி தாண்டவம்
அனைத்தையும் மறந்து வீட்டின் முற்றத்தில் படுத்து
நட்சத்திரங்களை எண்ணி நாள் கழித்த காலம் அது !

வீட்டிலே முக்கனிகள் நிறைந்திருக்க
மாற்றான் தோட்டத்தில் மாங்கனி திருடி
உற்றவன் அறியாமல் மற்றவர்களோடு பகிர்ந்து
மந்தகாசமாய் உண்டு களித்த காலம் அது !

கரியை அரைத்து கரும்பலகையிலிட்டு
வாய்ப்படுகளின் வகை பயின்று வண்ணமயமாய்
வகுப்பில் மிளிர்ந்து - சிந்தனையைச்
சிலேட்டில் கொட்டித் தீர்த்த காலம் அது !

இவற்றை எண்ணி எண்ணி நான் பார்த்திருக்க
எட்டும் எட்டும் பத்தென்று தப்பாய்க்கூட்டி
உயர் அதிகாரியை பயர் அதிகாரியாக வைத்து
என்றும் நான் நினைக்கும் இனிய கனாக்காலம் அது !

ஆம் , அது ஒரு கனாக்காலம் !

நெஞ்சில் தைத்த நினைவு முட்களுடன் ..................
அ சதிஷ் குமார்.